“பெரியார் கொள்கை எந்த ஜாதியை ஒழித்தது?”
எனச் சிலர் கேட்பார்கள். ஆயிரமாயிரம் சான்றுகளை நாம் அள்ளித் தர முடியும்! அதுவும் விசித்திரமான வரலாறுகள் எல்லாம் திராவிடர் கழகத்தில்தான் கொட்டிக் கிடக்கின்றன! திருச்சி, சிறுகனூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் வருவதுதான் பெருவளப்பூர் கிராமம். அவ்வூரின் சாதனைகள் புத்தகமாகவே வந்துள்ளது என்றால், அதுதான் இந்தக் கொள்கையின் சிறப்பு. இதுபோன்ற நூற்றுக்கணக்கான கிராமங்களைத் தன்னகத்தே கொண்டதுதான் இந்த இயக்கம்! அப்படியான ஒரு ஊரிலிருந்து, இந்த வார மகளிர் சந்திப்பிற்காக லீலா (80) அவர்களைச் சந்தித்தோம்!
அம்மா வணக்கம்! தங்கள் திருமணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில், இலால்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டும் 349 பேர் சிறை சென்றார்கள். அதில் எனது தந்தையார் வி.எஸ்.சபரிமுத்து அவர்களும் ஒருவர். கோயம்புத்தூர் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவலில் இருந்தார். ஒரு சிறு குழி வெட்டி, அதில்தான் சிறுநீர், மலம் கழிக்க வேண்டும். கடுமையாக ஈக்கள் மொய்த்தாலும், அந்த இடத்தையே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
அப்படியான சூழலிலும் மாலை நேரங்களில் தோழர்களின் சந்திப்பு நடக்குமாம். அதுபோன்ற ஒரு உரையாடலில், “நம் தோழர்களில் எத்தனைப் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வீர்கள்?”, என்கிற பேச்சு எழுந்துள்ளது. கடுங்காவல் சிறையில் இருந்தாலும், கழகத் தோழர்களின் உணர்வுகள் எப்படி இருந்துள்ளது என்பதைப் பாருங்கள்!
அப்போதுதான், “எனக்கொரு மகள் இருக்கிறார்”, என எனது தந்தையார் அறிவிக்க, “அவர்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்”, என ஒரு தோழர் எழுந்துள்ளார். அவர்தான் எனது இணையரான லெ.அ.சிதம்பரம் அவர்கள்!
ஆக தங்கள் திருமணம்
சிறையிலே முடிவாகி இருக்கிறது?
ஆமாம்! எனது தந்தையாரும், எனது வருங்கால இணையரும் சிறையிலே சந்தித்துக் கொண்டவர்கள். இருவருமே சட்ட எரிப்புப் போராளிகள்! இந்தச் செய்தி எப்போதுமே எனக்குப் பெருமைதான்! சிறையில் இருந்து வந்ததும், எங்களது திருமணம் 1966ஆம் ஆண்டு பெரியார் தலைமையில், திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் அதில் பங்கேற்றார்கள்.
எங்களுக்கு 3 பிள்ளைகள். இதில் காமராஜ், அருமைக் கண்ணு இரண்டும் பெரியார் வைத்த பெயர்கள். கடைசி மகனுக்கு வீரமணி என்கிற பெயரை எனது இணையர் வைத்தார். எங்கள் குடும்பத்தில் இருவருக்கு ஜாதி, மத மறுப்புத் திருமணங்கள். ஒருவர் கைம்பெண் திருமணம் செய்து கொண்டார்.
நீங்கள் இந்தக் கொள்கைக்கு வந்த காலகட்டம் எது?
நான் பிறந்ததில் இருந்தே இந்தக் கொள்கையில்தான் இருக்கிறேன். எனது தந்தையார் திருச்சி அருகேயுள்ள காட்டூர் பகுதியில் வசித்தவர். இரயில்வே துறையில் வேலை செய்தார். எப்போதும் தாடி வைத்திருப்பார். அவர் தீவிரமான இயக்கத் தொண்டர். எனக்கு மட்டுமின்றி, எனது சகோதரி நிர்மலா அவர்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான் செய்து வைத்தார்.
சிறையில் முடிவு செய்யப்பட்ட எங்கள் திருமணம், பெரும் போராட்டங்களைச் சந்தித்துவிட்டது. எனினும், சாதித்துக்காட்டிய பெருமையும் எங்களுக்கு உண்டு.
என்ன மாதிரியான போராட்டங்கள்
என்று சொல்லலாமா?
இன்றைக்கு 67 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஜாதி மறுப்புத் திருமணம் சிறையில் முடிவு செய்யப்பட்டது. நான் ஹிந்து மதத்தால் “ஒடுக்கப்பட்ட” ஜாதி. எனது இணையர் “கவுண்டர்” என அழைக்கப்பட்ட ஹிந்து மதத்தின் வேறொரு ஜாதி. திருமணம் முடிந்ததும் இணையரின் ஊரான பெருவளப்பூர் கிராமத்திற்கு சென்றுவிட்டேன். இந்தக் கிராமத்தில் பெரும்பான்மை ஜாதியாகவும், ஆதிக்கம் செய்பவர்களாகவும் அவர்களே இருந்தார்கள்.
இந்நிலையில் நான் ஹிந்து மதத்தால் “ஒடுக்கப்பட்ட” ஜாதியாக இருந்ததால், என்னுடன் சேர்த்து, என் இணையரையும் அவர்களின் உறவினர்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள். எனினும் பின்னாளில் எல்லாம் மாறிவிட்டது. அதேநேரம் இடையில் ஏற்பட்ட மாற்றங்கள் சாதாரணமானது அல்ல! யாரை ஆதிக்க ஜாதி என்று குறிப்பிட்டோமோ, அதே ஜாதியில் இருந்து, நமக்குக் கிடைத்த பெரியார் தொண்டர்கள் தான் வரலாற்றையே மாற்றி எழுதினர்.
கேட்க, கேட்க ஆவலாய் இருக்கிறதே, அம்மா?
ஆமாம்! “திராவிடர் கழகத்தின் கோட்டை” என்றுதான் பெருவளப்பூரை அழைப்பார்கள். திமுகவின் வளர்ச்சிக்கும் இந்தக் கிராமம் பெரும் துணையாக இன்றுவரை இருந்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் தமது தொடக்கக் கல்வியை இங்குதான் கற்றார். நமது இயக்கத் தோழர், பெரியார் பெருந்தொண்டர் சாமிநாதன் அவர்கள் 25 ஆண்டுகளாகப் பெருவளப்பூர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர்.
அவரது ஜாதி ஆட்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சாமிநாதன் வெற்றி பெறக்கூடாது என்பதில் முனைப்புடன் இருந்தார்கள். காரணம் பெரியார் கொள்கை. எனினும், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடும் 25 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற்றார். அவருடன் இணைந்து தோழர்கள் எல்.வெங்கடாசலம், லெ.அ.சிதம்பரம், புரட்சி பெருமாள், க.மாணிக்கம், அ.ஆழப்பன், க.முத்துச்சாமி உள்ளிட்ட பல தோழர்களும் இப்பகுதியில் புரட்சி செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும்!
நினைவில் இருக்கும் செய்திகளைப் பதிவு செய்யுங்கள் அம்மா?
பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் கிழக்குப் பகுதியில்தான் இருக்கும். ஆனால், சாமிநாதன் அவர்கள் தலைவராக இருந்தபோது, சாமிநாதபுரம் எனும் பகுதியை உருவாக்கி, அவற்றை மேற்குப் பக்கம் அமைத்தார். அதற்கு ஊரில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கருஞ்சட்டைத் தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அதனை வெற்றிகரமாய் செய்து முடித்தனர். அப்பகுதி மக்கள் உயர்கல்வி முடித்து, வெளியூர்களில் சிறந்த பணிகளில் இருக்கிறார்கள். இரட்டைக் குவளை முறை பரவலாக இருந்த இந்தக் கிராமத்தில், அதை ஒழித்த பெருமையும் திராவிடர் கழகத்தினருக்கு உண்டு.
அதேபோல பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க கூடாது என்பதும் நடைமுறையாக இருந்தது. அதிலும் திராவிடர் கழகத் தோழர்கள் போராடி வெற்றி பெற்றனர். அதே நேரத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த சாமிநாதன் அவர்கள், ஊருக்கு நடுவே தண்ணீர் தொட்டி ஒன்றை மேலே கட்டி, கீழே பஞ்சாயத்து அலுவலகத்தை அமைத்தார்கள். எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு தண்ணீர் தொட்டி! இன்றுவரை அது அமலில் இருக்கிறது. இந்தத் தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்தவர் கல்விக்கண் திறந்த காமராசர்.
பெருவளப்பூர் பகுதிக்கு வந்தது முதலே, எனக்குத் தனிப்பட்ட வாழ்க்கைக் கிடையாது. இணையர் சிதம்பரம் அவர்களுடன் ஏராளமான இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, பெருவளப்பூர் கிராம வளர்ச்சிக்குத் துணை நின்றது என, இப்போது 80 வயதை அடைந்திருக்கிறேன். சிறு வயது முதலே பொங்கல் விழா, பெரியார் பிறந்த நாள் விழா இரண்டும் மட்டுமே கொண்டாடி வந்திருக்கிறேன். மாநாடுகளில் 3 முறை தீச்சட்டி ஏந்திய அனுபவங்களும் உண்டு. வாழ்க்கை இணையராக மட்டுமல்ல; கொள்கைத் தோழராகவும் இருந்த சிதம்பரம் அவர்கள் 2021இல் மறைந்துவிட்டார்.
தற்போது வெளியில் செல்வது குறைந்து விட்டது. எனினும் சென்ற ஆண்டு வரை, பெரியார் மன்றம் சென்று விடுதலை நாளிதழை வாசித்து வருவேன். அதுவும் ஆசிரியர் எழுத்துகளை விரும்பிப் படிப்பேன்.
என்னது… இந்தச் சிற்றூரில் பெரியார் மன்றமா?
ஆமாம்! 1971ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி, தந்தை பெரியார் அவர்கள் இந்த மன்றத்தைத் திறந்து வைத்தார்கள். ஜாதி ஒழிப்புப் போரில் சிறை சென்ற பெருவளப்பூர் தோழர்களுக்குக் கல்வெட்டும் இங்கு இருக்கிறது. மட்டுமின்றி பெரியார் படிப்பகமும், பெரியார் சிலையும் இங்கு உள்ளது. இங்கிருக்கும் சிலை சற்று வித்தியாசமானது. அதாவது வேலையாட்களை இந்த இடத்திற்கு அழைத்து, அளவெடுத்து, அச்சு செய்து, முழுவதுமாக இங்கேயே தயார் செய்யப்பட்ட சிலை இது. இதுபோன்ற வாய்ப்பு தமிழ்நாட்டிலேயே ஒரு சில இடங்களுக்குத்தான் உள்ளது, எனவே இந்தச் சிலையை மாற்ற வேண்டாம் என ஆசிரியர் கூறியதாக, தோழர்கள் சொன்னார்கள்.
இந்த மன்றமும், சிலையும் இருப்பது சிலருக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. நீதிமன்றம் வரை கூட சென்று, இந்த இடத்தைப் பாதுகாத்த வரலாறும் உள்ளது. ஒருமுறை சிலர் கடப்பாரையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர். எனது மகன் வீரமணி, “பெரியார் மன்றத்தின் மீது கடப்பாரை பட்டால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை”, என ஆக்ரோசமாகத் கொதித்தெழ, அமைதியாகச் சென்றுவிட்டனர் அனைவரும்!
தோழர்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலையப்பன் அவர்கள், நேரடியாக வந்து பார்வையிட்டு, இந்த இடத்தை வழங்கினார்கள். ஒவ்வொரு தோழரும் கல் தூக்கி, மண் சுமந்து, ஆர்வமாகக் கட்டிய கொள்கைக் கோட்டை இது! யாருக்காகவும் இதை விட்டுக் கொடுக்கமாட்டோம்!
இப்பொழுதும் இந்த ஊரில் கழக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா?
தொடர்ந்து நடைபெறுகிறது. மும்பையில் வசித்த சித்தார்த்தன் அவர்கள், தனது சொந்த ஊரான பெருவளப்பூர் கிராமத்திற்கே வந்துவிட்டார். அவர் வந்த பிறகு இன்னும் சிறப்பாக இருக்கிறது. அவருடைய சகோதரிக்குத்தான், பெரியார் அவர்கள் “ரஷ்யா” எனப் பெயர் வைத்தார். இந்தச் சிறு கிராமத்திற்கு எவ்வளவு பெருமை பாருங்கள்!
அதேபோல பொதுவுடமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் மகளை, இதே கிராமத்தில் வசித்த அருணாசலம் என்பவர்தான் திருமணம் செய்து கொண்டார். இவர் நம் இயக்கத் தோழரான சாமிநாதன் அவர்களின் சகோதரர் ஆவார். இந்தத் திருமணத்தைப் பெரியார் மாளிகையில், பெரியார் நடத்தி வைத்தார். ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்தத் திருமணத்தில் பங்கேற்று பேசிய அறிஞர் அண்ணா அவர்கள், “சுயமரியாதைத் திருமணத்திற்கு விரைவில் சட்ட வடிவம் கொண்டு வருவோம்”, என அறிவித்தார். அப்படி அறிவிக்கக் காரணமாக இருந்த இந்தத் திருமணமும் பெருவளப்பூருக்குச் சொந்தமானதே” என எளிமையோடும், பூரிப்போடும், கிராமத்து மண் வாசனை மாறாமலும் பகிர்ந்து கொண்டார் லீலா அவர்கள்!