உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக்குமார் வர்மா என்ற பார்ப்பன வழக்குரைஞர் தனது தொழிலில் வருவாய் இல்லாததால் அதிக வருவாய் கொண்ட தொழில் தேடி அலைந்துள்ளார். அரித்துவார் சென்ற அவருக்கு பெண் ஒருவர் தலைமைச் சாமியாராக இருக்கும் மடத்தின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கவும் சட்ட ஆலோசனைகள் சொல்லவும் வேலை கிடைத்தது. அந்த மடத்திற்கு வட இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்ட அசோக்குமார் வர்மா முதலில் மடத்திற்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து விபரங்களைச் சேகரித்தார். அதில் பலவற்றை தனது பெயருக்கு மடம் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றிவிடுகிறார். அதன் மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டும்.
இந்த நிலையில் மேலும் செல்வம் சேர்க்கும் பேராசையில் மடத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற திட்ட மிட்டார். இதற்கு மடத்தில் பல்வேறு ஊழியர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை தன்பக்கம் திருப்ப முயற்சித்தார்.
மெல்ல மேல்ல இவர் செய்த மோசடிகள் மடத்தின் தலைமைச் சாமியாரிணிக்குத் தெரியவர, அவர் கடுமையாக எச்சரித்து அவரை வெளியே அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் மடத்தில் தங்கியிருந்தபோது பெண் சாமியா ரிணியை பல்வேறு சமயங்களில் ரகசியமாக ஆபாச கோணத்தில் படம் எடுத்துள்ளார். அந்த படங்களை மேலும் ஆபாசமாக சித்தரித்து அவரோடுதான் இருப்பது போன்று படங்களை போட்டோஷாப்பில் வடிவமைத்து நேராக மட்டத்திற்குச் சென்று சாமி யாரிணியிடம் காட்டியுள்ளார்.
மேலும் மடத்தின் தலைமைப் பதவியைத் தனக்குத் தராவிட்டால் இந்தப் படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார். சாமியாரிணி இதற்கு அஞ்சாமல் அவரை அடித்து வெளியே துரத்திவிட்டார். இதனை அடுத்து அவர் சாமியாரிணியும் தானும் உடனிருப்பது போன்று பல ஆபாசப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனை அடுத்து சாமியாரிணி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. லக்னோவில் தலை மறைவாக இருந்த வழக்குரைஞர் அசோக் வர்மாவை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்ய வந்த காவல் துறையினரிடம் நான் என்ன அடுத்தவர் சொத்தையா திருடினேன். சாமியாரிணிக்கு ஊரார் கொடுத்ததுதானே? இது எல்லாம் சாமியாரிணி உழைத்தா வாங்கினார்?
எழுதப் படிக்கத் தெரியாத சாமியாரிணிக்கு இத்தனை கோடி ரூபாய் சொத்து உள்ளது. நான் வழக்குரைஞர் தொழிலில் இருந்தும் என்னால் சம்பாதிக்க முடியவில்லை.
ஆகையால் சாமியாரிணியின் சொத்துக்களை அபரித்தேன். என்று கூறியது மட்டுமல்லாமல் தன்னைப் பிடிக்க வந்த காவல் துறையினரிடம் என்னோடு ஒத்துழைத்தால் உங்களுக்கு மடத்தின் சொத்தில் பங்கு கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் காவல் துறையினரோ அவரது பேச்சைக் கேட்காமல் அவரைக் கைதுசெய்து அரித்துவார் அழைத்துச் சென்றனர்.