நம் இயக்கத்தின் மகளிர் அணியின் மாற்ற முடியாத கொள்கைச் சின்னமாகத் திகழ்ந்து, ‘இறுதி மூச்சடங்கும் வரை இயக்கமும் கொள்கையுமே எனது வாழ்வு’ என்று வாழ்ந்து, மறைந்தும் மறையாத மகத்தான லட்சியத் தோழர்தான் திருமதி பார்வதி கணேசன் அவர்கள்!
அவரது கொள்கைப் பற்றும், அடக்கமும். ஆழமான தெளிவும், தொண்டறமும் நம்மால் என்றும் மறக்க முடியாத கல்வெட்டுகள்.
அவர் போன்ற ஒப்புவமையற்ற தோழர்களைப் பெற்றதே இந்த இயக்கமும், யாமும் பெற்ற அரும் பேறு.
களத்தில் நின்றாலும், கழகப் பணி என்றாலும் உடல் நிலையைப் பற்றிக் கூட பொருட்படுத்தாது தொண்டறம் புரிந்தவர் அவர்!
இன்று அவரது ஓராண்டு நினைவு நாள் என்று நினைக்கையில், கடந்த சில ஆண்டுகள் கோவிட் காலத்தில் நாம் இழந்த, இழக்கக் கூடாத இயக்க வீரர்கள், வீராங்கனைகளை யெல்லாம் நினைத்து, ஒருபுறம் துயருறும் அதேநேரத்தில் – எந்நிலையிலும் இயக்கப் பணி என்ற அவர்களது வழிமுறையை ஏற்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் விட்ட பணி முடிக்கும் உறுதி பற்றி வாழுவோம்!
நீங்கா நினைவுகளுடன்,
சென்னை
8.11.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்