சென்னை. நவ. 8- தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவர் செல்வவிநாயகம் கூறியதாவது: அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோ ரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. இதைத் தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
மற்றொருபுறம், மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிர் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைவு, சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஓசல்டாமிவிர் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.
மருத்துவத் துறையினா், சுகாதாரகளப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம் என்றார் அவா்.