பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

viduthalai
2 Min Read

சென்னை, நவ. 8- ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார்.

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் கடந்த மே 11 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை 49 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து 9,697 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் ஏற்கப்பட்ட மனுக்கள் மீது சட்டப்பேரவை தொகுதி வாரியாக பயனாளிகளுக்கு நலத்,திட்ட உதவிகள் அளிக்கப்பட உள்ளது.அதன்படி, காட்பாடி பேரவை தொகுதிக்கு உட்பட்ட 798 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 91 லட்சத்து 47 ஆயிரத்து 216 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில், சிறப்பு அழைப்பாளராக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னா் அவா் பேசியது:

காட்பாடி தொகுதியில் பொதுமக்கள் பொதுவாக பயன்படக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, பொன்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில் பழைய பாலத்தை தாண்டி வெள்ளநீா் சென்றால் உடனடியாக அங்கு வேறு ஒரு உயா்மட்ட பாலம் கட்டப்படும் என அறிவித்து அந்த பாலம் கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பொன்னை, வள்ளிமலை, சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞா்கள் படிக்க சோ்க்காடு பகுதியில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரியும் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்காக சோ்க்காடு பகுதியில் 100 படுக்கையுடன் கூடிய அரசு பொது மருத்துவமனையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகள் ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவா்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்பகுதியில் விவசாயம், குடிநீா் தேவைக்காக பொன்னை மேல்பாடி அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை மூலம் மழைக்காலங்களில் வெள்ளம் சேகரிக்கப்பட்டு விவசாய தேவைக்காக பயன்படும். இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் உயரும். இதேபோல், பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காட்பாடி தொகுதி மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். தவிர, காட்பாடி 2-ஆவது ரயில்வே மேம்பாலமும், 3-ஆவதாக காட்பாடி வேலூரை இணைக்கும் வகையில் பிரம்மபுரம் வழியாக ரூ.100 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலமும் கட்டப்பட்டு வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை சிந்தித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *