சென்னை, நவ.8- கலைஞரின் கனவு இல் லம் திட்டத்துக்கு நிதி நெருக்கடி என்று பரவும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியால் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு 2024-2025 நிதியாண்டுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு வரலாறு காணாத நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் திரை விமர்சனத்தில் பிசியாக இருக்கிறார் என்று ஒருவர் (சவுக்கு சங்கர் என்பவர்) தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த தகவல் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசால் ரூ.225 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, உரிய பயனாளிகளுக்கு கட்டுமானத்துக்கு ஏற்ப தொகை ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கு மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கி கணக்கில் இந்த திட்ட செலவினத்துக்காக போதிய நிதி இருப்பு உள்ளது.
நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை என்று ஊரக வளர்ச்சி துறை விளக்கம் அளித்துள்ளது. இதேபோல, மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு திரும்பப் பெறுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது பொய்யான தகவல் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், விழுப்புரத்தில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழாவில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 688 ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 825 தொகுப்புகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் மேடையில் விளையாட்டு உபகரணங்கள் அடையாளத்துக்காக வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிப் பதிவை திரித்து தவறாக பரப்பி வருகிறார்கள் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவா்கள் குறித்த
புகார்கள்மீது அலட்சியம் கூடாது
காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
சென்னை.நவ.8 காணாமல் போனவா்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவா், அனைத்து காவல் ஆணையா்கள், மண்டல காவல்துறை தலைவர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை:
காணாமல் போனவா்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். அந்த புகார்கள் மீது காவல்துறையினர் அலட்சியம் காட்டக் கூடாது. மேலும், காணாமல் போனவா்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டதும், நிகழ்வு இடத்துக்கு சென்று காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும். நிகழ்வு இடத்தில் உள்ள கண்காணிப்பு படக் கருவிகளில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும். அதோடு காணாமல் போன நபா் அடிக்கடி செல்லும் இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். நிகழ்வு இடத்தின் அருகே உள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் காணாமல் போன நபா் குறித்த தகவல்களை திரட்ட வேண்டும். காணாமல் போன நபரின் ஒளிப்படம் காவல் நிலைய அதிகாரியின் கைப்பேசி எண், உறவினா் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். ஒருவா் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதும், உடனடியாக சிஎஸ்ஆா் வழங்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்துக்குள் காவல் நிலைய அதிகாரி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
குடும்ப அட்டையில் திருத்தம்
முக்கிய தகவல்
சென்னை, நவ.8 சென்னையிலுள்ள 19 மண்ட லங்களில் நாளை நவ. 9 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை (9.11.2024) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.