தூத்துக்குடி, நவ.8- தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து 6.11.2024 அன்று காலை 11 மணிக்கு சென்னைக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு இளம் இணையர் தங்களது கைக்குழந்தையுடன் பயணித்தனர். விமானம் ஓடுதளத்தில் பயங்கர இரைச்சலுடன் வேகமாக சென்று வானில் பறக்கத் தொடங்கியது.
இதனால் இணையர்கள் குழந்தை பயத்தில் வீறிட்டு அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகையை நிறுத்த தாயார் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அருகில் இருந்த சக பயணிகளும் குழந்தையை ஆசுவாசப்படுத்த முயன்றும் முடியவில்லை. இணையரின் 2 இருக்கைகளுக்கு பின்னால் அமர்ந்து இருந்த அமைச்சர் கீதாஜீவன் உடனே எழுந்து சென்று, குழந்தையின் தந்தையை எழுந்திருக்கச் சொல்லி விட்டு, அதில் அமர்ந்து கொண்டு தாயாரிடம் இருந்து குழந்தையை வாங்கினார். குழந்தையை தனது மடியிலும், தோளிலும் அணைத்தவாறு அமைச்சர் தாலாட்டு பாடலை இனிமையாக பாடினார். அதனை மெய்மறந்து கேட்ட குழந்தை சிறிதுநேரத்தில் அழுகையை நிறுத்தியது. மேலும் அமைச்சரின் மடியிலேயே தூங்கியது. பிறகு குழந்தையை தாயிடம் ஒப்படைத்த அமைச்சர் தனது இருக்கைக்கு திரும்பினார். விமானத்தில் குழந்தையின் அழுகையை நிறுத்த அமைச்சர் கீதாஜீவன் தாலாட்டு பாடியதை அனைவரும் வியந்து பாராட்டினர்.