புதுடில்லி, நவ.8- மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங் கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வணிகம் தொடர்பாக 6.11.2024 அன்று பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர், ‘கிழக்கிந்தியக் கம்பெனி 150 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுப்போனாலும், அது உருவாக்கிய மூல பயம் ஏக போகவாதிகளின் வடிவில் மீண்டும் அதன் இடத்தைப் பிடித்துள்ளது’ என குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக அவரை பா.ஜனதா விமர்சித்து இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று (7.11.2024) அவர் காட்சிப்பதிவு மூலம் சமூக வலைத்தளப்பதிவில் விளக்கம் அளித்து உள்ளார்.
அதில் அவர், ‘நான் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வணிக விரோதியாக பா.ஜனதாவில் உள்ள எதிரிகளால் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் நான் சிறிதும் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல. நான் ஏகபோகத் திற்கு எதிரானவன், தன்னலத்தை உருவாக்குவதற்கு எதிரானவன், ஒன்று அல்லது 2 அல்லது 5 நபர்களின் வணிக ஆதிக்கத்துக்கு எதிரானவன்’ என கூறியுள்ளார்.
மேலும் அவர், ‘நான் ஒரு மேலாண்மை ஆலோசகராக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒரு வணிகம் வெற்றிபெறத் தேவையான விஷயங்களை நான் புரிந்துகொள்கிறேன். அனைத்து வணிகத்துக்கும் நேர்மையான மற்றும் தாராளமான இடம் அளிக்கப் பட்டால் நமது பொருளாதாரம் செழிக்கும்’ என்றும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.