சென்னை, நவ.7- தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அவா்களது திசு மற்றும் ரத்த மாதிரிகள் உயா் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மாா்பகப் புற்றுநோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய்களைத் தவிா்க்கும் பொருட்டு 30 வயதைக் கடந்த அனைத்து மகளிருக்கும் அதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனுடன், 18 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டமும் முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது, 4 மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.
அதன் கீழ் 2.2 லட்சம் பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4,618 பேருக்கு புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, 1.75 லட்சம் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கா்ப்பப்பை வாய் பரிசோதனையில் 9,331 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
அடுத்தகட்ட பரிசோதனைகளுக் குப் பிறகு அது உறுதி செய்யப்படும். தேவையானவா்களுக்கு உரிய சிகிச் சைகள் வழங்கப்படும். இதைத்தவிர 5.24 லட்சம் பேருக்கு வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பாதிப்பு அறிகுறிகள் உள்ள 2,555 பேருக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.