ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!
எப்படி சமூகநீதி மலர்ந்தது என்பதுபற்றி அறியாத தகவல்கள்!
– கி.வீரமணி –
‘‘சமூகநீதிக்காகவே பிறந்த ஓர் இயக்கம் – அனைவருக்கும் அனைத்தும்‘‘ என்ற ஓர் அடிப்படை இலக்கை நோக்கி, பயணித்த நிலையில் – ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – அவர்களது உரிமை பறிக்கப்பட்டு, கல்வி அறிவு வாய்ப்புகள் அறவே மறுக்கப்பட்டன.
‘‘விலங்கொடு மக்கள் அனையர்‘‘ என்ற நிலைக்கு மட்டும் தள்ளப்படவில்லை. அவர்களைப் படிப்பறிவு பெறக்கூடாத மக்களாய், நாலாம் ஜாதி, அருந்ததி, கீழ்ஜாதி, பெண்கள் (அவர்கள் மேல்ஜாதியில் பிறந்த பெண்களானாலும்) அனைவருமே படிக்க, பணிகளில் சேர, சம உரிமையுடனும், சுதந்திரத்துடனும் வாழக்கூடாதவர்கள் என்று வருணாஸ்ரமம் வரைமுறை வகுத்தது.
உலகில் எங்குமில்லாத – ஒரு விவரிக்க இயலாத கொடுமையே ஜாதி, வருண முறையாகும். மக்களை –அவர்களைப் படைத்த கடவுள்களேகூட, அப்படிப்பட்ட வருண தருமத்தின்படி, கல்வி அறிவு பெறக்கூடாத வெறும் அடிமைகளாக இருக்க பிறப்பிக்கப்பட்டார்கள். அது ஆண்டவனின் – சாஸ்திரங்களின் ஆணை, முதன்மையான வேதங்களின் கட்டளை – ஏனென்று கேட்காமல், இமை சிமிட்டிக்கூட எதிர்ப்புத் தெரிவிக்காமல், ‘‘பொறாமையின்றி மற்ற மூன்று மேல் வருணத்தாருக்கு குற்றேவல் செய்ய பிரம்மாவாகிய பிறப்புக் கடவுள் பிறப்பித்தார் என்று ஒருபுறம்.
ஜாதியை நிலைநிறுத்திய வேத, இதிகாசங்கள்!
வேதங்கள், மனுதர்மம், கீதை, அர்த்தசாஸ்திரம், பாரதம், இராமாயணம் போன்ற வேத, இதிகாச, புராணங்கள் எல்லாம் அதனையே வலியுறுத்தி, மிகப்பெரும்பான்மையான மக்களை கல்விக் கண்ணற்றவர்களாக்கியது வேறொருபுறம்.
மீறி அவர்கள் வேதம் படித்தால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம், நாக்கினை அறுப்போம் என்றெல்லாம் கடும் தண்டனைகளையெல்லாம் காட்டி, மிரட்டி வைத்த கொடுமை உலகில் வேறு எந்தப் பகுதி அடிமை வர்க்கத்திற்காவது உண்டா?
இதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டி, எவ்வளவு இழிதகையான கொடுமை என்று கேட்டார்!
ஜாதி, வருண தர்மம் – என்ற குலதர்மக் கொடுமையால் பிறந்த மனிதர்களை அவர்கள் எப்பாலினத்தவராக இருந்தாலும், மேல் கீழ்ஜாதியாக்கி, அவர்களது ‘‘மனிதத்தை’’ப் பறித்தனரே!
ஜாதி அவலம்!
இந்நாட்டில் பிறக்கும்போது அவன் மனிதன்; வாழும்போது ஹிந்து மதம் என்ற வேத மதம் என்றால், அந்த மனிதம் இன்று நாயினும் கீழாய் கேடாய் மதிக்கும் அவலம்! வியப்பாக இருக்கிறதா?
நாயைக் கொஞ்சுகிற மேல்ஜாதிக்காரன், மனிதனைத் தொட மறுக்கிறான். பசு மாட்டை, குதிரையை, மிருகங்களை, பறவைகளைக் கொண்டாடி, கொஞ்சி மகிழ்கிற மேல்ஜாதியினர், மனிதர்களை, உழைக்கும் சக மனிதனை, ‘‘எட்டி நில்; தொட்டால் தீட்டு’’ என்று கூறி ஒதுக்குகிறான்.
மலம் கழித்துவிட்டு கை கழுவுகின்றவர்கள்; மலம் உடலில் பட்டால் அவ்விடத்தை மட்டும் – கையோ, கால்களையோ மட்டும் கழுவி, நிம்மதிப் பெருமூச்சு விடுபவர்கள், ஒரு மனிதன், இவன் – உழைப்பால் உணவினைத் தயாரித்துத் தர சேற்றில் நின்று பாடுபட்ட தன் சக மனிதனைத் தொட்டால் ‘தீட்டு‘ மட்டுமல்ல, நெருங்கினால் ‘தீட்டு!, பார்த்தாலே ‘தீட்டு‘ என்று நடத்தும் கேவலமான ஈவு இரக்கமற்றவர்கள்.
மனித சகோதரத்துவத்திற்கும், சமத்துவத்திற்கும், நியாயத்திற்கும் எதிரான ஒரு சமுதாயம் இன்றும் ஆணவத்தோடு தங்களது மேல்ஜாதி அடையாளம் என்ற முப்புரி நூலை உருவிக் காட்டி உலா வருகிறது.
நீதிக்கட்சி தோன்றியது!
இப்படிப்பட்ட சமூக இழிவுகளை ஒழித்து, பேதமற்ற பெருவாழ்வை உண்டாக்க, பகுத்தறிவுச் சிந்தையையும், சுயமரியாதை வேட்கையையும் மிதிக்கப்பட்ட மக்களிடையே உருவாக்கி, அவர்களை மதிக்கப்பட்ட மக்களாக மாற்றவே பிறந்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – 110 ஆண்டுகளுக்கு முன்பே உருவான நீதிக்கட்சி என்ற திராவிட இயக்கமாகும்!
1920 இல் இயக்கம் தொடங்கப்பட்ட மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள்ளே தேர்தலில் நின்று, பெருவெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. அதிகாரங்கள் அந்நாளைய பிரிட்டிஷ் ஆட்சி அளவோடு இருந்த நிலையிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமான கல்வி, மருத்துவம் முதலிய துறைகளுக்கு முன்னுரிமை தந்து, சமூக மாற்றத்திற்கான விடியலுக்குக் கால்கோள் நாட்டியது!
அப்போது ‘பிரதம அமைச்சர்‘ என்ற பதவி ஏற்ற கடலூர் சுப்பராயலு ரெட்டியார், உடல்நலம் காரணமாக சில மாதங்களிலேயே அப்பொறுப்பிலிருந்து விலகிய பின்பு ஆளுமை மேதையும், மனித நேயத்தின் மறுஉருவமுமான பானகல் அரசர் தலைமை அமைச்சராகி, மிகச் சிறப்பான ஆட்சியை ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்டோர், உரிமை மறுக்கப்பட்டோர், கோடான கோடி மக்கள்தம் வாழ்வில் வளங்காணும் வகையில் பல புரட்சிகளை ஓசையின்றி, அமைதிப் புரட்சியைச் செய்தார்!
நீதிக்கட்சியின் சாதனைகள்!
அறநிலையத் துறையில் அந்நாளில் கோவில் பெருச்சாளிகளாக, கோவில் பூனைகளைாகக் கொள்ளையடித்ததைத் தடுத்து, மக்களுக்குப் பயன்படும்படி இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டங்களைப் பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் தாண்டி, நிறைவேற்றி வெற்றி பெற்று, இந்திய அரசியல் சமூக, பொருளாதார வரலாற்றில் தனித்ததோர் சாதனையைச் செய்தார்.
இட ஒதுக்கீடு, கல்வி நீரோடையில் இருந்த பார்ப்பன முதலைகளை வெளியேற்றி, அனைத்து மக்கள் குறிப்பாக ஆதிதிராவிடர்களும், கல்வி பெறும் வாய்ப்பினையும், தெருக்களில் நடமாட, பொதுக்குளங்களில் குளிக்க, பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை போன்றவை, தேவதாசி ஒழிப்பு போன்ற பெண்களைக் கேவலப்படுத்தும் அநாகரிக முறைகளைச் சட்டங்கள் மூலம் அகற்றியது – அக்கிர (அ) சத்தியமூர்த்திகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சாதனைகள் படைத்த அவ்வாட்சிக்குப் பல தொல்லைகள் தந்தனர். எண்ணிக்கை பலம் குறைந்ததாலும், பதவி ஆசையற்ற பானகல் அரசர், வெளியே இருந்து சுயேச்சையான டாக்டர் எஸ்.சுப்பராயன் அவர்களை பிரதம அமைச்சராக்க ஆதரவு தந்தார்.
அமைச்சரானார் முத்தையா முதலியார்!
1926 ஆம் ஆண்டு டாக்டர் சுப்பராயன் அமைத்த மந்திரிசபையில் சுயராஜ்ஜிய கட்சியின் சார்பாக அங்கம் வகித்த ரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் ஆகியோர் சைமன் கமிஷனை வரவேற்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மாறுபாட்டினால் 1928 ஆம் ஆண்டில் பதவி விலகினர். அடுத்து சுப்பராயன் அமைத்த மந்திரி சபையில், எஸ்.முத்தையா முதலியார், குளித்தலை வழக்குரைஞர் சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரும் அமைச்சரான நிலையில்தான், பாரிஸ்டர் எஸ்.முத்தையா முதலியார்தான் ஓர் அமைதிப் புரட்சியை உருவாக்கினார் தமது அரசு ஆணையின்மூலம் – இட ஒதுக்கீடு ஆணையை நிறைவேற்றினார்.
1921 ஆம் ஆண்டிலிருந்து பானகல் அரசர் முயற்சித்தா லும்,அந்நாளைய அதிகாரவர்க்கத்தினர் அதனை – ஆணையை – அந்த ஆணையை செயல்படுத்த முடியாத நிலையை உருவாக்கி வைத்தனர்.
Communal G.O.
1. 1921 செப்டம்பர் 16 நாளிட்ட M.R.O. (Public Ordinary Service) G.O. 613 சமூகநீதிக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை.
2. 1922 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15 ஆம் நாளிட்ட M.R.O. (Public Ordinary Service) G.O. 658
இரண்டாவதாக வந்த அரசு ஆணையும் – மேலைய ஆணையையே வற்புறுத்தியது.
3. 1924 பிப்ரவரி 6 ஆம் நாளிட்ட M.R.O. (Public Ordinary Service) G.O. No.761
வகுப்புரிமையைச் செயல்படுத்த ஆணை. அதி காரிகள் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அதனை நடை முறைப்படுத்தாமலேயே இருந்தனர்.
இந்த நிலையில்தான், டாக்டர் பி.சுப்பராயன் அமைச்சரவையில் (1928) இடம்பெற்றிருந்த முத்தையா முதலியார், வகுப்புரிமை ஆணையை நடைமுறைப்படுத்த வழிசெய்யும் ஆணையை வரையறை செய்தார்! அதன்படி 12 பதவிகளும் பின்வரும் வகுப்பாரை முறையே நியமனம் செய்யவேண்டும்.
பார்ப்பனர் அல்லாத இந்துக்களிலிருந்து – 5
பார்ப்பனர்களிலிருந்து – 2
முஸ்லிம்களிலிருந்து – 2
அய்ரோப்பியர் மற்றும் ஆங்கிலோ இந்தியக்
கிறித்தவர்களிலிருந்து – 2
தாழ்த்தப்பட்டோரிலிருந்து – 1
ஆக மொத்தம் – 12
எஸ். முத்தையா முதலியார், டாக்டர் பி.சுப்பராயன் அமைச்சரவை – நீதிக்கட்சியின் ஆதரவோடு நீடித்த அந்த அமைச்சரவை அமைந்த பிறகு, 1928 ஆம் ஆண்டு கம்யூனல் ஜி.ஓ. என்ற சமூகநீதிச் சட்டத்திற்கான கதவுளைத் திறந்து நடமாட விட்டார்!
இது எப்படி நடந்தது என்ற வரலாறும், பார்ப்பனச் செல்வாக்கு, வெள்ளைக்காரர்கள் அரசு காலத்திலேயே எப்படி முட்டுக்கட்டை போட்டது என்பதைப்பற்றியும் இதுவரை பலரும் அறியாத அல்லது வரலாற்றில் பதிவு செய்யப்படாத தகவல்களை இக்கட்டுரையின் இப்பகுதி நமக்கு, கலங்கரை வெளிச்சமாய்த் தருகின்றது.
கிடைத்த புதையல்!
சமூகநீதிக்கான பிரச்சாரகர்களும், வரலாற்று ஆய்வாளர்களும்கூட இந்த ‘கீழடிப் புதையல்‘ போன்றவற்றைப் படித்துப் பரப்பிடுவது காலத்தின் தேவையாகும்!
பேராசிரியர் முனைவர் மங்களமுருகேசன் அவர்கள் எஸ்.முத்தையா முதலியார்பற்றி எழுதியுள்ள ‘‘வகுப்புரிமை சிற்பி எஸ்.முத்தையா முதலியார்” நூலின் (நான் அந்நூல் வெளியீட்டு விழாவில் பல ஆண்டுகளுக்குமுன் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்) ஒரு பகுதி.
வரும் 16 ஆம் தேதி, நூற்றாண்டு காணவிருக்கும் மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எஸ்.நடராசன் அவர்கள், எஸ்.முத்தையா முதலியாரின் நெருங்கிய உறவினர். அவர் கூறிய அருமையான பல தகவல்கள் அந்நூலில் அப்படியே தரப்பட்டுள்ளன.
இதுவரை மற்ற தரவுகளில் கிடைக்காத உண்மை நிகழ்வுகள் இந்த சமூகத் தடை ஓட்டப் பந்தயம் (Social Justice Hurdle Race) எப்படி வெற்றி பெற்றது தொடக்கத்தில் என்பதைப் பார்ப்போம்!
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் பார்வையில் திரு.எஸ்.முத்தையா முதலியார் – ஒரு மாமனிதர்.
அந்நூலின் ஒரு பகுதி வருமாறு:
முதல் சந்திப்பு
‘‘செயற்கரிய செய்த பெரியவரும், இவ்வுலகிலே ஒரு ‘மாமனிதராகவும் வாழ்ந்த திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள், என்னுடைய (மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் அவர்களின்) மூத்த சகோதரி சிவகாமி அம்மாளுக்கு மாமனார் ஆவார். அவரை நான் முதன் முதலில் பார்த்தது 1937ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் ஆகும். அவருடைய மூத்த மகன் திரு. எம்சொக்கலிங்கம் எம்.ஏ., பி.எல். (பின்னர் எம்.ஏ., எம்.எல்.) பட்டம் பெற்றுச் சென்னையில் வழக்குரைஞராக பணிபுரிந்து கொண்டிருந்தவருக்கு பெண் கேட்கும் பொருட்டுச் சேலத்தில் உள்ள எங்கள் வீட்டிற்குத் திரு. முத்தையா முதலியார் அவர்கள் வந்தார்கள்.
திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு ஏற்கெனவே திருமணமாகி அவருடைய மனைவி காசநோயின் காரணமாகக் குறுகிய காலத்தில் இறந்து விட்டதின் காரணமாக அவருக்கு மீண்டும் பெண் தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இரண்டாவது தாரமாக என் தமக்கையைக் கொடுப்பதற்குச் சிறு தயக்கம் இருந்தது. இருப்பினும் மாப்பிள்ளை பெண் ஜாதகம் பொருத்தமாக இருந்தது என்ற காரணத்தினாலும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, படித்த மாப்பிள்ளை என்ற காரணத்தினாலும் அந்தத் திருமணத்திற்கு என் தந்தையார் இசைவு கொடுத்தார்.
1937 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. அந்தத் திருமணத்தில் புகழ்பெற்ற சமூசேவகி மூவாலூர் மூதாட்டி திருமதி இராமாமிர்தம் அம்மையார் வந்திருந்தார்கள். திருமணமாகிச் சில வருடங்களுக்குப் பிறகு திரு.சொக்கலிங்கம் அவர்கள் எம்.எல். பரீட்சையிலும் தேறினார்.
திருமணம் நடப்பதற்கு முன்பே மே மாதத்திலே திரு. முத்தையா முதலியார் அவர்கள் மீண்டும் ஒருமுறை சேலம் வந்தார்கள். அவர்கள் ஊட்டிக்குச் செல்லும் வழியில் சேலம் வந்தார்கள். அவர்களுடைய கார் பழுது அடைந்துவிட்டதின் காரணமாக எங்களுடைய காரை எடுத்துக்கொண்டு ஊட்டிக்குச் சென்றார்கள்.
ஊட்டிக்குப் பயணம்!
அப்பொழுது என்னையும், தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தக் காரில் அவரைத் தவிர அவருடைய சமையல்காரர் வேலு, கார் ஓட்டுநர் ஜெகதீசன், நான் ஆகிய மூவரும் இருந்தோம். ஊட்டியிலே, ஆந்திரகேசரி என்று பெயர் பெற்றிருந்த திரு. த. பிரகாசம் அவர்களுடைய பங்களாவாகிய கோதாவரி இல்லத்தில் (Godhavari House)தங்கி இருந்தோம்
அந்த பங்களாவை திரு. முத்தையா முதலியார் அவர்களும், முன்னாள் சட்டசபைத் தலைவர் திரு. நரசிம்மராஜ் அவர்களும் இணைந்து வாடகைக்கு எடுத்து இருந்தனர். நாங்கள் ஊட்டி சென்றவுடனே எனக்கு கோட் (Coat), ஓவர்கோட் (Over Coat) போன்றவற்றைத் திரு. முத்தையா முதலியார் அவர்கள் வாங்கிக் கொடுத்தார்கள்.
அந்தக் காலத்திலே மேதகு ஆளுநர் (கவர்னர்) மட்டும் அல்லாமல் பல ஊர்களின் அரசர்கள் ஊட்டிக்கு வருகை தருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு அரண்மனை இருந்தது. ராஜாக்களும், பெரிய ஜமீன்தார்களும் தங்கள் பரிவாரங்கள், வாகனங்கள் முதலியவற்றுடன் ஊட்டிக்கு வருவார்கள். ஊட்டிக்கு வந்து அய்ந்து, ஆறு வாரங்களுக்குக் குறையாமல் தங்குவார்கள்.
ஒவ்வொரு அரசரும் மற்ற ராஜாக்களையும், உயர் அதிகாரிகளையும் பிரபலமான மனிதர்களையும் அழைத்து விருந்து கொடுப்பார்கள். கடைசியாக மேதகு ஆளுநர் அவர்கள் அரசு மாளிகையில் விருந்து கொடுப்பார்.
அந்த விருந்துகளுக்கு எல்லாம் திரு. முத்தையா முதலியார் அவர்களுக்கும் அழைப்பு வரும். அரண்மனைகளில் நடந்த சில விருந்துகளுக்கு நான் அவருடன் சென்று தொலைவில் இருந்து அந்த விருந்து நிகழ்ச்சிகளைக் காரில் உட்கார்ந்து கொண்டே பார்த்துள்ளேன்.
(ஊட்டியில் ‘‘லாலி இன்ஸ்டியூட்’’ என்ற பிரபலமான பொழுதுபோக்கு நிலையம் இருக்கிறது. அந்தக் காலத்திலே சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்தான் அந்த நிலையத்தில் உறுப்பினராக முடியும்).
ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபல தொழில் அதிபர்கள், சட்ட மேதைகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆகியோர் தான் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அந்த நிலையத்தில் திரு. முத்தையா முதலியார் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில் அங்குச்சென்று இரண்டு, மூன்று மணிநேரம் நண்பர்களுடன் உரையாடி விட்டு வருவார். அந்த நிலையத்திலே அருமையான உணவு வகைகள் செய்து கொடுப்பார்கள். ஆகையால் மாலையில் அங்குச் செல்லும்போது சிற்றுண்டி சாப்பிடுவார். என்னையும் அங்குச் சிற்றுண்டி சாப்பிடச் சொல்லுவர்.
அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிச் சில விவரங்கள்:
1926ஆம் ஆண்டில் டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் மூன்று அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார். டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராகவும், திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் இரண்டாவது அமைச்சராகவும், திரு. சேதுரத்தினம் அய்யர் அவர்கள் மூன்றாவது அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்கள். திரு. முத்தையா முதலியார் அவர்களுக்குச் சுகாதாரம், கூட்டுறவு, பத்திரப்பதிவு முதலிய இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பார்ப்பன ஆதிக்கம் – அதிர்ச்சி
அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சில வாரங்களிலேயே அவருடைய கையெழுத்திற்காக அவரிடம் ஒரு கோப்பு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்பு பத்திரப் பதிவுத் துறை சம்பந்தமானது. அந்தத் துறையில் பணி வகிக்கும் 16 பேர்களைச் சப்- ரிஜிஸ்தராகப் பதவி உயர்வு பெற அரசு ஆணை வழங்கும் பொருட்டு அந்தக் கோப்பு அனுப்பப்பட்டது. அந்த 16 பேர்களிலே 15 பேர்கள் பார்ப்பன ஜாதியைச் சர்ந்தவர்கள். 16 ஆவது நபர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர். அந்தக் கோப்பை பார்த்ததும் திரு. முத்தையா முதலியார் அவர்கள் அதிர்ச்சி அடைத்தார்கள், ஏனென்றால், அந்தத் துறையிலே பலவருடங்களாகப் பணியாற்றி வரும் திரு. சி.டி.நாயகம் அவர்களையும், இன்னும் சிலரையும் திரு. முதலியார் அவர்கள் வெகுகாலமாக அறிந்தவர். ஆகையால் அவர்களின் பெயர்கள் எல்லாம் அந்தப் பட்டியலில் ஏன் இடம் பெறவில்லை? என்று முதலியார் ஆச்சரியப்பட்டார்கள்.
தொடங்கியது விசாரணை
உடனே அவருடைய நேர்முகச் செயலாளர் (Private Secretary) ஆக பணிபுரிந்து வந்த திரு. மாணிக்கவேல் நாயகர் அவர்களின் மூலமாகத் திரு. சி.டி. நாயகம் முதலானவர்களை அழைப்பித்து விசாரணை செய்தார்.
பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் (Inspector General of Registration) அவர்களிடம் இருந்து வந்த பட்டியலை அவர்களிடம் காண்பித்து “அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் உங்களுக்கு பதவியில் மூத்தவர்களா?” என்று கேட்டார்.
அதற்கு “அவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் எங்களுடைய ஜுனியர்கள். எங்களிடம் பயிற்சி (Training) பெற்றவர்கள்” என்று சொன்னார்கள்.
சூழ்ச்சி கண்டுபிடிப்பு!
அதைக் கேட்டவுடன் அமைச்சர் அவர்கள் “அப்படியானால் ஏன் உங்கள் பெயர்கள் பதவி உயர்வுப் பட்டியலில் இடம் பெறவில்லை?” என்று கேட்டபொழுது அவர்கள் கூறிய பதில்:- Inspector General of Registration ஒரு ஆங்கிலேயர். அவருக்கு யார் சீனியர் (Senior) யார் ஜுனியர் (Junior) என்று தெரியாது. அவரிடம் செயலாளராகப் பணியாற்றுபவர் ஒரு அய்யங்கார். அவர் தயார் செய்து கொடுக்கும் பட்டியலில் அந்தத் துரை கையெழுத்து போட்டு விடுவார். அய்யங்கார் அவர்கள் பார்ப்பன சமூகத்தினரின் பெயர்களை எல்லாம் போட்டுப் பெயருக்கு ஒரு கிறிஸ்துவரின் பெயரையும் போட்டுப் பட்டியல் உருவாக்கியுள்ளார்” என்றார்கள்.
“அவருடைய சூழ்ச்சியை புரிந்துகொள்ளாமல் அய்.ஜி துரை அவர்கள் அந்த பட்டியலை அப்படியே ஆமோதித்து உங்களிடம் அனுப்பியுள்ளார்கள்” என்று விளக்கம் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த விளக்கத்தை உடனே ஏற்றுக் கொள்ளாமல், “உங்களுடைய ரகசியப் பதிவேடு (Confidential Report) அதில் ஏதாவது குறைகள் சொல்லப்பட்டுள்ளனவா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர்கள் “எங்களைப் பற்றிய பதிவேடுகள் Confidential Report எல்லாம் சிறப்பாக உள்ளன” என்று பதில் அளித்தார்கள்.
அந்தப் பதிலையும் அமைச்சர் அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல், அவருடைய செயலாளர் திரு. மாணிக்கவேலு நாயகரை அழைத்து இவர்களுடைய ரகசியப் பதிவேடுகளை எல்லாம் வரவழைத்து அவர்கள் பேரில் ஏதாவது குறை கூறப்பட்டு இருக்கின்றதா? என்று பார்க்கச் சொன்னார்.
அந்த ரகசியப் பதிவேடுகளைப் பரிசீலித்தபோது அவர்கள் எல்லோருக்கும் நல்ல குறிப்புகள் (Remarks) கொடுக்கப்பட்டிருந்தன என்று கண்டார்.
இவ்வாறு தீவிர ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அவர்களுக்குச் சமூக அநீதி விளைவிக்கப்பட்டது நன்கு புரிந்து விட்டது. அதன் பிறகு இந்த அநீதிப் பதிவுத்துறையில் தான் நடக்கின்றதா? அல்லது எல்லா துறைகளிலும் நடக்கின்றதா? என்று விசாரணை மேற்கொண்டார். எல்லாத்துறையிலும் இப்படித்தான் நடக்கின்றது என்று பலர் கூறினார்கள்.
ஆளுநருடன் சந்திப்பு
அதன் பிறகு தனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் மற்றத் துறைகளான சுகாதாரம், கூட்டுறவு முதலிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அந்தத் துறைகளில் பார்ப்பன வகுப்பினர் தான் மிகுதியான வகையில் அரசுப் பதவியில் உள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு திரு. முத்தையா முதலியார் மேதகு ஆளுநர் அவர்கள் வசிக்கும் அரசு மாளிகைக்குச் (Government House) சென்று ஆளுநரைச் சந்தித்தார்.
இப்பொழுது ராஜ்பவன் என்று சொல்லப்படும் அரசு மாளிகை அந்தக் காலத்தில் “Government House” என்று பெயர் கொண்டிருந்தது.
ஆளுநரிடம் அமைச்சர் பின்வருமாறு சொன்னார். ‘‘வியக்கத்தக்க முக்கியமான சில செய்திகளை உங்களிடம் அமைச்சர் என்ற முறையில் கூற விரும்புகின்றேன். ஆகையால் ஆளுநர் அவர்கள் தயவு செய்து ஊட்டிக்கு ஒரு வாரம் போய் தங்கினால் நலமாக இருக்கும். நான் அங்கு வந்து விஷயங்களை எல்லாம் சொல்லுகிறேன்” என்று சொன்னார்களாம். ஆளுநருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அமைச்சரைப் பார்த்து ‘‘முதலியார் அவர்களே, இது அரசு மாளிகை, இங்கேயே விஷயத்தைச் சொல்லுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்?” என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் அவர்கள் “இங்குள்ள அரசு மாளிகையின் கதவுகள் சன்னல்களுக்குக் கூட காது, கண் இருக்கின்றது. ஆகையால் இங்கு இரகசியமாக ஒன்றும் சொல்ல முடியாது. நான் எனது கோரிக்கையை மிகுந்த பொறுப்புடன் தான் வைத்துள்ளேன்.
ஆகையால் ஆளுநர் அவர்கள் ஊட்டிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று சொன்னார்.
ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப் போகின்றார் என்று உணர்ந்து ஆளுநரும் ஊட்டிக்கு ஒரு வாரம் சென்றார். திரு. முத்தையா முதலியார் அவர்களும் ஊட்டிக்குச் சென்று அங்கு ஆளுநரின் முன்னிலையில் தான் தயாரித்து வைத்திருந்த பட்டியல்களைக் காண்பித்தார்களாம்.
அவைகளைப் பார்த்து ஆளுநர் மிகவும் ஆச்சரியப்பட்டார்களாம். எப்படி இரண்டரை விழுக்காடுகள் கொண்ட ஒரு சிறிய சமூகம் பெருவாரியான 97.5 விழுக்காடு உள்ள சமூகத்தை அடக்கி ஆள முடியும் என்று வியந்தாராம்.
மலர்ந்தது சமூகநீதி
அப்பொழுது அமைச்சர் “அந்த பட்டியல்கள் எல்லாம் உண்மையானவை. பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தத்ரூபமாக காட்டுகின்றன” என்று சொன்னார்களாம். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள், அமைச்சரின் சமூகநீதி காக்கும் அரசு உத்தரவு (Communal G.O.) பிறப்பிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.
அதன் பிறகு தான் அழியாப்புகழ் பெற்ற (Communal G.O.) வகுப்புரிமை ஆணையை அமைச்சர் பிறப்பித்தாராம். அதில் கூட ஒரு மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
Communal G.O.–வின்படி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 5 இடங்களும், பார்ப்பனர்களுக்கு 2 இடங்களும், முஸ்லீம்களுக்கு 2 இடமும், கிறிஸ்துவர்களுக்கு 2 இடமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1 இடமும் என்ற முறையில் அரசு துறையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதற்கும் பார்ப்பனர்களும் இன்னும் சிலரும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக அந்த ஆணையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அந்த மாற்றம் என்னவென்றால், திரு. முத்தையா முதலியர் அவர்கள் எந்தத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தாரோ அந்தத் துறைகளுக்கு மட்டும் வகுப்புரிமை அடிப்படையில் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்தவுடன் பார்ப்பனர் அல்லாதவர் அனைவரும் அதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் பார்ப்பனர் மத்தியிலே பெரிய எதிர்ப்பும், மனக்கசப்பும் உருவாகியது. ஏதோ தங்களுடைய பரம்பரைச் சொத்தை திரு. முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புரிமை ஆணையின் மூலம் அபகரித்துக் கொண்டது போல் அவர்கள் திரு. முத்தையா முதலியாரைத் தூற்றினார்கள.
பானகல் அரசரின் பாராட்டு!
மேனாள் முதலமைச்சரும் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவருமான பனகல் அரசர் அவர்கள் உடல்நிலை குன்றிப் படுத்த படுக்கையாக இருந்தார். திரு. முத்தையா முதலியார் அவர்களை அழைத்து அவரை மனதாரப் பாராட்டினார்களாம். “பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் என்னாலும், என் கட்சியினாலும் செய்யமுடியாத ஒரு சாதனையை நீங்கள் பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் செய்து விட்டீர்கள். இதற்காகப் பார்ப்பனர் அல்லாத சமூகம் உங்களுக்கு மிகவும் கடன்பட்டுள்ளது” என்று பாராட்டினார் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது (The entire non-Brahmin Community owes a debt of gratitude to you).
‘முத்தையா’ என்று பெயர் சூட்டுங்கள்!
தந்தை பெரியார் அவர்களோ அந்த வகுப்புரிமை ஆணையைப் போற்றி வரவேற்றதுடன், சமூகநீதி கொள்கையை மலரச் செய்த முத்தையா முதலியாரை, தந்தை பெரியார் பெரிதும் பாராட்டினார். ‘‘மந்திரி எஸ்.முத்தையா முதலியார் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!’’ என்று ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் தீட்டினார்.அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அதைப்பற்றிப் பேசும் பொழுது பார்ப்பனர் அல்லாத குடும்பம் ஒவ்வொன்றிலும் ஒரு ஆண் குழந்தைக்கு ‘முத்தையா’ என்று பெயர் வைக்க வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு பார்ப்பனர் அல்லாதவர்களுக்குப் பயன் அளிக்கும் சட்டமாக திரு. முத்தையா முதலியார் அவர்கள் உருவாக்கிய வகுப்புரிமை ஆணை (Communal G.O.) அமைந்துள்ளது என்று கூறுவார்.