உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் தலைவராக இருக்கும் மடத்தைச் சேர்ந்த 4 சாமியார்கள் திருட்டு மற்றும் மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் காசிமாபாத்தில் உள்ள காஜிபூர் பகுதி கிராமப்புறங்களில் சில நாட்களாக திருட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதே நேரத்தில் சாமியார்களின் நடமாட்டமும் அதிகரித்துகொண்டே போனது. இதனை அடுத்து ஊர் மக்கள் இந்தத் திருட்டு தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். அதே போல் சாமியார்கள் அதிகம் பேர் ஊருக்குத் திடீரென வருகை புரிந்துள்ளனர் அவர்கள் மீதும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்
இதனை அடுத்து காவல்துறையினர் சாமியார்களின் நடவடிக்கையை கண்காணித்தனர். காஜிபூரில் உள்ள சோன்பர்சா மற்றும் சுகஹா கிராமங்களில் வீடு வீடாக சென்று பிச்சை கேட்கும் சாமியார்கள் – ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டத்தையும் காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் திருட்டுத் தொடர்பாக சாமியார்களை காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
ஆனால் சாமியார்களோ நாங்கள் முதலமைச்சர் தலைவராக இருக்கும் கோரக்பூர் மடத்துச்சாமியார்கள்; “எங்களைப் பற்றி விசாரிக்க நீங்கள் யார்?” என்று காவல்துறையினரை மிரட்டி உள்ளனர்.
விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே அவர்களோடு வந்த சில சாமியார்கள் தப்பி ஓட ஆரம்பித்தனர். காவல்துறையினரும், கிராம மக்களும் சேர்ந்து தப்பி ஓடிய சாமியார்களில் மூன்று பேரை பிடித்தனர்.
காவல்துறையினர் கைது செய்தனர்
அவர்களை சிறப்பான முறையில் விசாரித்த போது அவர்கள் அனைவரும் சாமியார் முதல மைச்சர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களின் குடும்பத்தினர் மடத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
விழாக்காலங்களில் கூட்டமாக உள்ள பகுதிகளில் திருடுவது, மற்றும் கிராமங்களில் வெளியூர் சென்ற நபர்களின் வீடுகளைக் குறிவைத்துத் திருடுவது என இவர்களும் மடத்தைச் சேர்ந்த இதர சாமியார்களும் தொடர்ந்து திருட்டுத் தொழில் செய்துவந்துள்ளனர்.
இந்த வழக்கில் காசிமாபாத் காவல் நிலையத்தில் கைதான சாமியர்கள் அனைவரின் மீதும் பிரிவு 391(1)இன் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
சாமியார்கள் கைது தொடர்பாக காசிமாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் சோயப்சிங், கூறும்போது, ‘‘தொடர்ந்து மாவட்டத்தில் சில கிராமங்களில் திருட்டு நிகழ்வுகள் நடப்பதாக ஊர் மக்கள் புகார் அளித்தனர்.
மேலும் தீபாவளிக்குப் பிறகு சாமியார்களின் வருகை அதிகரித்துவிட்டதாகவும் – அந்தச்சாமியார்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் – தெரிவித்தனர். இதனை அடுத்து சிறப்புப் படை அமைத்து காவி உடையில் திரியும் சாமியார்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.
அதில் சந்தேகத்திற்கிடமானவர்களை விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே சிலர் தப்பி ஓட முயற்சிக்கவே குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து அவர்களை கைது செய்தோம். அவர்கள் கோரக்பூர் முதல் அமைச்சரின் கோரக்நாத் மடத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து மேலும் விசாரணைக்கு கோரக்பூர் மடத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்’’ என்று கூறினார்
கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடம் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்தைத் தலைவராகக் கொண்டு நீண்ட ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த மடத்தில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் தங்கி மாநிலம் முழுவதும் ஊர் சுற்றி வருவார்கள்..
தற்போது மடத்தின் தலைவரே முதலமைச்சராக இருப்பதால் அந்த மடத்தின் சாமியார்கள் எந்தத் தவறு செய்தாலும் பொதுமக்கள் புகார் அளிப்பதில்லை, இந்த நிலையில் திருட்டு வழக்கில் சாமியார்கள் கையும்களவுமாக பிடிபட்டுள்ளதால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறது சாமியார்களின் யோக்கியதை? முதல் அமைச்சர் ஆதித்யநாத்தே ஒரு சாமியார்தான். எப்பொழுதும் காவி உடையைத்தான் அணிந்திருப்பார். அவர் தலைவராக உள்ள மடத்தின் சாமியார்களே திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றால் இதன் தராதரத்தை நாட்டு மக்கள்தான் எடை போட்டுப் பார்க்க வேண்டும்.
சாமியார்களின் இத்தகைய ஒழுக்கங் கெட்ட நடடிக்கைகளால் சாமி–யார்? என்ற கேள்வியை பொது அறிவும் பொது ஒழுக்கமும் உடையவர்கள் கேட்கத்தானே செய்வார்கள் – கேட்கவும் தானே வேண்டும். பக்திி என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்ற நாத்திகத் தலைவர் தந்தை பெரியாரின் கருத்தை எண்ணிப் பாரீர்!