தஞ்சை, நவ. 6- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக் கட்டளை நிதிக்கான காசோ லையை துணைவேந்தர் வி. திருவள்ளுவன், பதிவாளர் (பொ) சி. தியாகராஜனிடம் நேற்று (5.11.2024) தமிழ் இசைச் சங்க உதவிச் செயலர் ஏ.ஆர். நாச்சியப்பன் வழங்கினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு முன்னதாகத் தொடங்கப்பட்டு, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இசை மேம்பாடு உள் ளிட்டவற்றுக்காக 80 ஆண்டுகளுக்கு மேலாகச் சென் னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் தொண்டாற்றி வருகிறது. அச்சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார் பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை நிறுவுகைக்காக ரூ. 10 லட்சத்தை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவனிடம் தமிழ் இசைச் சங்க உதவிச் செயலர் ஏ.ஆர். நாச்சியப்பன், பெரியார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் தங்கராஜ், தமிழ் இசைச் சங்கக் கல்லூரி முதலமைச்சர் மீனாட்சி ஆகியோர் வழங்கினர்.
இது குறித்து துணைவேந்தர் கூறுகையில், இந்த அறக்கட்டளை மூலமாக, உலகெங்கும் நகரத்தார் ஆற்றிய தமிழ்த்தொண்டு, தமிழ் இதழியல் துறைக்கு ஆற்றிய பணிகள், பதிப்புத் துறை, கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பொருண்மைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ் மொழி மற்றும் தமிழ் இசைத் துறையில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கல் மற்றும் மாணவர்களுக்கான பயிலரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார் அவர்.
மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் தமிழ் வளர் மய்யத்துடன், தமிழ் இசைச் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்மூலம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மய்யத்தால் நடத்தப்படும் சான்றிதழ், பட்டயப்படிப்புகள் போன்றவற்றைத் தமிழ் இசைச்சங்கம் சென்னையில் நடத்தவுள்ளது எனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பெ. இளையாப்பிள்ளை, வளர் தமிழ்ப்புல முதன்மையர் இரா. குறிஞ்சிவேந்தன், நிதிஅலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நல்கைப் பிரிவு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.