1971 சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் நமது மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னார்.
‘‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை முன்பு தந்தை பெரியார் துவக்கினார். இப்பொழுது ஆச்சாரியார் (ராஜாஜி) துவக்கியுள்ளார். இந்தத் தேர்தலின் ஒரே புதிய அம்சம் இதுதான்’’ என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார். (திருச்சி, 3.3.1971)
மானமிகு கலைஞர் அவர்கள் அப்படிக் குறிப்பிட வேண்டிய தன் அவசியம் என்ன?
1971 ஜனவரி 23இல் திராவிடர் கழகத்தால் சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தை மய்யப்படுத்தி – அபாண்டமாக ‘‘ராமனை தி.க.வினர் செருப்பாலடித்து விட்டனர். அந்தத் தி.க.. ஆதரிக்கிற தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர்’’ என்று ராஜாஜி முதல் ‘துக்ளக்’ சோ வரை பிரச்சாரம் செய்து தொண்டைவற்றிப் போனதுதான் மிச்சம்.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்த தந்தை பெரியாரை நோக்கி கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அன்றைய ஜனசங்கத்தினர் செருப்பை வீசியதால் ஏற்பட்ட எதிர் விளைவை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாக 1971 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தைத் திசை திருப்பினார்கள்.
அதன் விளைவு என்ன? இதுவரை தமிழ்நாடு சட்டப் பேரவையில் எந்தக் கட்சியும் பெற்றிடாத அளவுக்கு அத் தேர்தலில் 184 இடங்களைப் பெற்றுப் புதிய வரலாறு படைத்து தி.மு.க.
அந்தத் தேர்தல் நேரத்தில் – நடப்பு நிகழ்ச்சிகளைக் கூர்மையாகக் கணித்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ‘‘இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர் ஜாதியினர் நலம். இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெரும்பாலான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்?’’
(‘விடுதலை’ 19.2.1971)
என்று கடவுள் நம்பிக்கை உடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறவில்லையா?
1971 சட்டப் பேரவைத் தேர்தலில் அவ்வாறே தமிழ்நாட்டு மக்கள் நாஸ்திகத்துக்கு வாக்களித்து பெரு வாரியான வெற்றி மகுடத்தை தி.மு.க.வுக்கு சூட்டவில்லையா?
இப்பொழுது மீண்டும் பார்ப்பனர்கள் 1971அய்த் திருப்பிப் போட ஆசைப்படுகிறார்கள்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியார் ஊட்டிய தன்மான உணர்வில், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது பெருந் தீயாகக் கொழுந்து விட்டு எரிகிறது என்பதை மறக்க வேண்டாம்!
‘‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’’ என்பார்கள். அந்த நிலையைப் பார்ப்பனர்கள் எடுத்திருக்கிறார்கள். வழக்கம் போல – இராமாயண காலத்திலிருந்து விபீட ணர்கள் பார்ப்பனர்களுக்குக் கிடைத்துள்ளனர்.
சென்னையில் அவர்கள் மாநாட்டில் பேசப்பட்ட வைகளும், தொலைக்காட்சி விவாதங்களில் பார்ப் பனப் பெண்கள் உட்படப் பேசும் பேச்சுகளும், புதிய தலைமுறையினருக்குப் பார்ப்பனர்கள் மீதான எரிச் சலையும், சினத்தையும் சீண்டி விடும் போக்கிலேயே அமைந்து வருகின்றன.
நமது வேண்டுகோள் என்னவென்றால், இது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் – அதன் மூலம் திராவிடர் கழகத்தின் வேலை இலகுவாகும் ஒரு நிலையைத்தான் உருவாக்கும்.
இந்தத் தலைமுறையினருக்கும் தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை ஏன் கையில் எடுத்தார் என்பதன் அருமையும் வெட்ட வெளிச்சமாகவே புரிந்து கொள்ளும் ஒரு ‘நல்ல’ நிலையை உருவாக்கும்.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மருந்துக்கு ஒன்று என்று சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த ஒரு கட்சியும், எந்த ஒரு பார்ப்பனரையும் வேட்பாளராக நிறுத்த
முன் வரவில்லையே – ஏன்?
பார்ப்பனர் அறவே இல்லாத ஒரு சட்டமன்றம் அல்லவா ஒளி வீசுகிறது. இது பெரியார் மண் – திராவிடப் பூமி என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையா?
ஒன்று முக்கியம். பார்ப்பனர்களின் அடாவடித்தனமான ஆணவப் பேச்சை நடவடிக்கைகளை எதிர்த்துக் கருத்துச் சொல்லும் முன்னணியினர், ‘பிராமணர்கள்’’ என்ற சொல்லை உச்சரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
‘பிராமணன்’ என்பது ஜாதிப் பெயரல்ல – வருணப் பெயர். பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று அவர்களின் ஸ்மிருதிகளும், சுருதிகளும் ஆணி அடித்துக் கூறுகின்றன.
அவர்களைப் ‘பிராமணர்கள்’ என்று சொன்னால் நம்மை நாமே ‘சூத்திரர்கள்’ என்று ஒப்புக் கொள்வதாகப் பொருள்!
இன்னும் பச்சையாக சொன்னால் ‘சூத்திரன்’ ஏழு வகைப்படுவான்; அதில் ஒன்று ‘விபசாரி மகன்’ என்ப தாகும்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? அதனால் தான் தந்தை பெரியார் தன்மான வீச்சாக ஒரு கருத்தைக் கூறினார். சட்டம் போட்டு மாட்டிவைக்கும் வகையிலான சுடர்ஒளிக் கருத்து அது!
‘‘தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய
கோயிலுக்குப் போகாதீர்கள்!
நெற்றிக் குறிகளை இடாதீர்கள்!
மதப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்!
பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்!’’ என்றார்.
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று தந்தை பெரியார் கூறிய நான்கே சொற்களுக்கான வழிகாட்டுதலே மேலே குறிப்பிடப்பட்டவை.
எனவே மறந்தும் பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்க வேண்டாம் – குறிப்பிடவும் வேண்டாம்!