சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும் உருவான மதுரை மண்ணின் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு நூலகம். குடும்பம் குடும்பமாகக் குவிந்து, நூலகத்தைச் சுற்றுலாத் தலம்போல மாற்றியிருக்கிறார்கள் மதுரை மக்கள்.
13 ஆண்டுகளுக்கு முன்பு, முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியபோதே ‘‘எங்களுக்கும் இதேமாதிரி ஒரு நூலகம் வேண்டும்’’ என்ற கோரிக்கை மதுரையிலிருந்து எழுந்தது. தந்தையின் கனவை தனயன் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைத்திருக்கிறார். ‘‘தமிழ்நாட்டின் தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் அமைத்தது போல தமிழ்நாட்டின் கலைநகர் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டுக்கான அறிவாலயத்தை நான் அமைத்திருக்கிறேன்’’ என்று திறப்பு விழாவில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதுரையில் ஏற்கெனவே பாண்டித்துரை தேவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்க நூலகம், காந்தி அருங்காட்சியக நூலகம், அமெரிக்கன் கல்லூரி நூலகம் எனப் பழைமையான நூலகங்கள் இயங்கிவரும் நிலையில் நவீன வசதிகளுடன், அரிய நூல்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்சி பேதமற்று அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
மதுரை, தல்லாகுளத்திலிருந்து நத்தம் செல்லும் சாலையில் 2.7 ஏக்கர் பரப்பில் 215 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த நூலகம். குளிரூட்டப்பட்ட, ஆறு தளங்கள் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மதுரை வரலாற்று அரங்கம், மாநாட்டு அரங்கம் ஆகியவை உள்ளன. முதல் தளத்தில் பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூல்கள், அறிவியல் அரங்கம், டிஜிட்டல் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும் செயல்படுகின்றன. நான்காம் தளத்தில் அமரும் வசதியுடன் தமிழ், ஆங்கில நூல் பிரிவுகள் உள்ளன. அய்ந்தாம் தளத்தில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல்கள் பிரிவு. ஆறாம் தளத்தில் கூட்ட அரங்கு, ஸ்டூடியோ, டிஜிட்டல் பிரிவுகள், நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.
கி1 தொழில்நுட்பத்தில் கலைஞருடன் வாசகர்கள் உரையாடிப் படமெடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் நூலகத்தைத் திறந்து வைப்பதற்கு முன்பே இங்கு வந்த அமைச்சர் துரைமுருகள், டிஜிட்டல் திரையில் கலைஞர் பேசுவதைப் பார்த்து, “தலைவரே எப்படி இருக்கீங்க என்று நிஜமாகவே உரையாட ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்து உடனிருந்த மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள்” என்றனர் நூலகப் பணியாளர்கள்.
1824ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சதுரகராதி’ நூலின் முதல் பதிப்பு இங்குள்ளது. நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட ‘ஜஸ்டிஸ்’ இதழ்களையும் சேகரித்திருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான இயக்கம் குறித்தும், உடல் இயக்கம் குறித்தும் விளக்கம் அளிக்கும் டிஜிட்டல் தொடுதிரை, அறிவியல் சோதனைகளுக்கான உபகரணங்கள், ஒவ்வொரு கிரகத்திலும் நம்முடைய உடல் எடை எவ்வளவு இருக்கும் என்று தெரிவிக்கும் கருவி ஆகியவை குழந்தைகளை ஈர்க்கின்றன. விரைவில், உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும். மக்கள் காலை முதல் இரவு வரை நூலகத்துக்கு வரலாம்” என்கிறார்கள், நூலகத்துறை இணை இயக்குநர் அமுதவள்ளியும், நூலகர் தினேஷ்குமாரும்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தென் தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஒன்றுகூடும் இடமாக இது விளங்கும். குழந்தைகளுக்கான சிறப்புத் திரையரங்கம், இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராக்டிவ் பேனல், முப்பரிமாணத்தில் கற்கும் ஹாலோகிராம் போன்ற பல வசதிகள் இந்நூலகத்தில் உள்ளன. மக்கள் அனைவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார்.
சென்னையிலிருந்து 2010-க்குப் பிறகு யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பலரும் தங்கள் வெற்றிக்குக் காரணம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பார்கள். அந்த வாய்ப்பு மதுரை மாணவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. போட்டித் தேர்வுகள் சார்ந்து அனைத்து நூல்களும் இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. அமர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
இப்படி மாவட்டத்துக்கு ஒன்று அமைந்தால், தமிழ்நாடு அறிவில் செழிக்கும்… முதலமைச்சர் நினைத்தால் அது சாத்தியம்!
நன்றி: ஆனந்தவிகடன் – 26.7.2023