‘‘வடமொழியைப் பழிக்கும் வரியைப் பாடலாமா?’’ என்ற தலைப்பில் தி(இ)னமணி ஏட்டில் நடுப் பக்கக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. (4.11.2024).
தி(இ)னமணியோ, தி(இ)னமலரோ ஒன்றை எழுதுகிறது என்றால் அதற்குள் ஓர் ‘ஆரியத்தனம்’ எனும் கொடுக்கு நுட்பமாகக் கூத்தாடும். அதனை ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து பார்த்தால்தான் பளிச்சென மாசு மருவின்றித் தென்படும்.
ஆளுநர் பங்கேற்ற தொலைக்காட்சி கொண்டாடிய ஹிந்தி வார விழாவில் பாடப் பட்ட தமிழ்த் தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற சில சொற்கள் தவிர்க்கப்பட்டது குறித்து கருத்து மோதல்கள் ஏற்பட்டது இயல்பே!
ஆளுநரை உணர்ந்தவர் களுக்கு ஒன்று மட்டும் உறுதியாகவே தெரியும்.
சட்டமன்றத்திலேயே ஆளுநர் அறிக்கை என்ற பெயரால் (உண்மையிலேயே அது அரசின் அறிக்கையே!) ஆளுநர் படிக்கும் அறிக்கையிலேயே சில சொற்களைத் தவிர்த்தும், சிலவற்றைத் தன் நோக்கில் சேர்த்தும் படிக்கப்பட்டதை அறிந்தவர்களுக்கு, தொலைக் காட்சி நடத்திய நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தில் இடம் பெற்ற ‘திராவிட நல் திருநாடும்’ என்ற சொற்கள் நீக்கப்பட்டதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
அதைக் கடந்து போக ‘தினமணி’ முயற்சிப் பதன் உள்நோக்கம் புரிந்து கொள் ளத்தக்கதே!
‘தினமணி’யின் கட்டுரைப் படைப்பாளர் ‘எழுத்தாளர்’ என்று அடையாளம் காட்டப் பட்டுள்ளது. யார் யார் எங் கெங்கே இருக்கிறார்கள் என்று ‘தினமணி’க்கு சரி யாகவே அச்சுப் புள்ளி அடை யாளத்தோடு முகவரி தெரியும்.
அந்த எழுத்தாளர் எழுதுகிறார். ‘மனோன் மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘வதனம், திலகம், தெக்கணம், வாசனை போன்ற சொற்கள் எல்லாமே ஆரிய மொழியாகிய சமஸ்கிருத சொற்கள்தாம் – இந்நிலையில் உலக வழக்கொழிந்த மொழி என்று எப்படி சொல்ல முடியும்?’’ என்று வலிந்து கூறுவதன் நோக்கம் என்ன? (ஆரிய மொழியாகிய சமஸ் கிருதம் என்பது ஒப்புக் கொள் ளப்பட்டுள்ளது – அதுவரை மகிழ்ச்சியே!)
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடு’ என்பது மறைக்கப்பட்டது ஏன் என்று கேட்டால் – அதற்கு இப்படியொரு இடக்கு முடக்கு!
‘பட்டுக்கோட்டைக்கு வழி என்ன என்று கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை?’ என்று கூறும் ஒரு வழக்கு தான் இந்த இடத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.
சமஸ்கிருதம் என்ற ஆரிய மொழி வேறு சில மொழிகளில் ஊருடுவி இருப்பதாலேயே அது உயிருடன் இருப்பதாகப் பொருளாகாது.
அம்மொழி தனி மொழி யாக – தாய் மொழியாக இல்லாத – பேச்சு வழக்கில் இல்லாத மொழி – இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த ஒரு மாநிலமும் தங்களது மொழியாகக் கொள்ளப் படாத மொழியை ‘உலக வழக்கொழிந்த மொழி!’ என்று சொல்லாமல் வேறு எதைச் சொல்ல? இது தி(இ)னமணிக்கும், கட்டுரை யாளருக்குமே வெளிச்சம்!
– மயிலாடன்