முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழா!
கட்டுரைத் தொடர் (9)
– கி.வீரமணி –
“ஞாபகம் வருதே!
ஞாபகம் வருதே!!”
– இக்கட்டுரை, ஏதோ ஒரு திரைப்படத்தின் பாடலைப் பற்றியதல்ல; மாறாக 80 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவப் பருவத்தில் கடலூரில் என்னை திராவிடர் இயக்கத்திற்குக் கொண்டு வந்து, பேச்சுப் பயிற்சி அளித்து, அரைக்கால் சட்டையுடன் இருக்கும் என் உயரம், மேடையில் சரியாகத் தெரியாது என்ற காரணத்தால், மேஜையின் மீது ஏற்றிவிட்டு பேச வைத்த என் பொதுவாழ்வின் முதற்கட்டத்தின் தொடக்கப்புள்ளி உருவாகும் முந்தைய காலம்.
எனது ஆசான் பெரியார் பெருந்தொண்டர் ஆ.திராவிடமணி பி.ஏ., அரசு உதவி பெற்ற ஓர் இஸ்லாமிய ஹையர் எலிமெண்டரி பள்ளி (எட்டாம் வகுப்பு வரை போதித்த தனியார் பள்ளி) -யின் தலைமை ஆசிரியர். அவர் கடலூரில் இராமலிங்க பக்த ஜன சங்கம் என்ற கட்டடத்தினையே தனது வாழ்விருப்பிடமாகக் கொண்டவர். மாணவர்களுக்கு மாலை இரவு நேரங்களில் இலவச டியூசன் சொலலிக் கொடுப்பதோடு, திராவிடத்தையும் பாலூட்டி வளர்த்து எங்களைப் பக்குவப்படுத்தி வந்த காலம்.
அறிவு ஆசான் தந்தை பெரியார் திராவிட மாணவர்களை, ஈரோட்டிற்குப் பள்ளி கோடை விடுமுறையின் போது (சுமார் 30, 40 பேர்கள்) இரண்டு அல்லது மூன்று வாரப் பயிற்சி வகுப்பில் இணைத்து (உணவு, உறைவிடம் இலவசம்), பக்குவப்படுத்தி, அதில் சிலரைப் பொறுக்கி எடுத்து, மாவட்டங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தி அதில் பேசி வருமாறு வாய்ப்பளிப்பார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட அமைப்பாளர் (organiser) அவர் கிளைக் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு, அவரது வழிகாட்டுதல்படி நடந்து, பிறகு மாணவர்கள் ஊர் திரும்பும் ஏற்பாடும் செய்யப்படும்.
அத்திட்டத்தின் கீழ் தென்னாற்காடு மாவட்டம் – கடலூர் தலைநகரம் முது நகர் (Old Town – O.T.) எங்களது இடத்திற்கு 1944இல் ஈரோட்டில் பயிற்சி பெற்ற மாணவத் தோழர்கள் வந்தார்கள். அவர்கள் குடந்தை அரசினர் கல்லூரி பி.ஏ., இண்டர்மீடியட் மாணவர்களான எஸ்.தவமணிராசன், கருணாநந்தம், குடந்தை கோபால்சாமி, மு.இராமதாஸ் ஆகியோர்.
எங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணியும் மற்ற தோழர்களும் கடலூர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இவர்களது திராவிட மாணவர் சுற்றுப் பயண நிகழ்ச்சியை அமைத்தனர்.
நாங்கள் அவர்களைவிட சப்-ஜூனியர்கள், சின்னப் பையன்கள் – பள்ளி மாணவர்கள். அவர்களுக்கான உணவு, தங்குமிடம், வசதி ஏற்பாட்டுக் குழுவினரானோம். காரணம் எங்கள் ஆசான் திராவிடமணி எங்களுக்கு வருகின்றவர்களை வரவேற்று, உபசரித்து, கூட்டம் நடத்திட மேஜை நாற்காலி தூக்கிப் போடுதல், மெகாபோனில் (தகரக் குழாய்) தெரு விளம்பரம், கூட்டம் தொடங்குமுன் கடை வீதி வழியே முக்கியப் பேச்சாளர்கள், மாணவர்கள், சில மூத்த கழகப் பொறுப்பாளர்களைத் திரட்டி கூட்ட அரங்குக்குச் சென்று ஏற்பாடுகளைச் செய்வது, கூட்டம் சேர்க்கப் பாட்டு பாடுதல் வரை கற்றுக் கொடுத்திருப்பார். பெரிதும் புரட்சிக் கவிஞர் பாடல்கள்தான்!
ஒவ்வொரு கூட்டத்திலும் காங்கிரஸ்காரர் எதிர் முழக்கமும், கல்வீச்சும் வரும். மூத்த பேச்சாளர் காஞ்சி கல்யாணசுந்தரம் (அவர் புதுவையில் ‘தொழிலாளர் மித்திரன்’ வார ஏடு நடத்தியவர் – அன்றைய அருமை பழைய நண்பர்களில் ஒருவர், புதுச்சேரிவாசி) அந்த எதிர்ப்பை எதிர்கொண்டு சுருக்கென்று பதிலளிப்பார். வந்தால் எங்களோடு 3, 4 நாட்கள் முகாமிட்டு, பின்னரே செல்லுவார்!
சென்னை தோழர் என்.ஜீவரத்தினம் (துறைமுகப் பகுதியில் கடலூர் உறவுகள் அவருக்கு உணடு) அவர் வருவார்; உடனே ஒரு கூட்டம் போடுவோம். 100, 200 பேர் திரளுவர். “1க்கு 32” சைஸ் நோட்டீஸ். கடலூரில் (O.T.) வள்ளலாளர் அச்சகம் என்பதை நமது ஆதரவாளர் சிதம்பரநாதன் அவர்கள் வைத்திருந்தார். அதில் அவரிடம் சொன்னபடி அடித்து, (3 அல்லது 4 ரூபாய் வரும்) எங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணி கணக்கில் வைத்துக் கொண்டு, மாதச் சம்பளம் வந்தவுடன் வாங்கிக் கொள்வார்!
‘பகவதி விலாஸ்’ என்ற ஒரு கேரள நண்பர் உணவு ஓட்டல். ஆசிரியர் திராவிடமணி மாதக் கணக்கு. அதில் வரும் பேச்சாளருக்குச் சாப்பாடு, டிபன் வாங்கிக் கொடுத்து மாதக் கணக்கு கொடுத்து முடிப்போம். எங்களுக்கு உணவு தேவைப்பட்டால் சாப்பிட்டுக் கொள்ளும் சலுகையும் உண்டு. கல்வீச்சு, கலாட்டா, சர்வசாதாரணம். நம் சு.அறிவுக்கரசு தந்தையார் மணிப்பிள்ளை என்ற ஆர்.சுப்ரமணியம் (மேனாள் இராணுவ வீரர்) எங்களுக்குப் பெரிய ஆதரவாளர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் தந்தையார் தண்டபாணி, பழைய ஏ.ஆர்.பி. (Air Raid Precautions – இரண்டாம் உலகப் போரில் பதுங்குகுழி பாதுகாப்புப் பணியில் இருந்தவர்) எங்களது இயக்க ஆதரவாளர்.
திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர் என்.டி. – New Town) மா.பீட்டர் பி.ஏ., பெரியவர் – இவர் கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தார் பதவி வகித்தவர். ஒரு பார்ப்பன மேல் அதிகாரியுடன் சண்டையிட்டுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, முழு நேர நீதிக்கட்சி, பெரியார் பற்றாளராகி, உள்ளூர் அமைப்பின் தலைவராகி, பல கஷ்ட நஷ்டங்களை ஏற்ற கொள்கைத் தீரர். எங்களது பொதுக் கூட்டங்களின் நிரந்தரக் கூட்டத் தலைவர் மா.பீட்டர் பி.ஏ. தான்!
அந்த மாணவர்கள் சுற்றுப்பயணத்தில் வந்தவர்கள் தவமணி ராசன், கருணாநந்தம் (பின்னாளில் கவிஞர் கருணாநந்தம் – பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதி, மத்திய, மாநில அரசு பணி பதவிகளிலிருந்து ஓய்வு பெற்று, கலைஞரின், கழகத்தின் செயற்பணித் தோழரானார்) ஆகியோர். மற்றொருவர் நூற்றாண்டு விழா நாயகர் பூண்டி கோபால் சாமி என்று இன்று அழைக்கப்படும் குடந்தை இரா.செங்குட்டுவன் ஒருவர்.
இவர்கள் எல்லோரும் என்னை ஒரு விளை யாட்டுப் பிள்ளையாகக் கருதி பேசி மகிழ்வார்கள். காரணம் நான் கடலூர் மாணவர் குழுவின் ‘சட்டாம் பிள்ளை’. என் ஆசிரியர் அப்படி பொறுப்புகளை ஒப்படைப்பார்.
குடந்தை செங்குட்டுவன் (உப்பு காரத் தெரு, குடந்தை வாசி அவர்) குண்டாக இருந்த என்னை அவர் முதுகில் “உப்பு மூட்டை தூக்குகிறேன் வா” என்று அழைத்து விளையாடுவார்!
பிறகு நான் கழகத் தலைவர் பொறுப்பில் வந்தபின், அவர் கட்டுப்பாடு காக்கும் தொண்டர், தோழர் என்ற ஒழுங்கைக் கடைப்பிடித்தார்.
தென்னாற்காடு மாவட்டட்தில், பல ஊர்களில் ஒன்றாகப் பயணம். கூட்டங்களில் பிரச்சாரம் என தோழர்களிடையே நட்பு, உறவு இறுகியது; பற்றும் பாசமும் பெருகியது! இன்றும் அருகாமல் வளர்ந்தே ஓங்குகிறது – காரணம் அது கொள்கை உறவு.
பிறகு அவர் அரசு சிற்பக்கலை (தச்சர்) படிப்பு முடித்து, அதில் நிபுணராக – பூண்டி எஞ்சினியர் குமாரசாமி (டைரக்டர் ஆனவர்) அவரிடம் பணியாற்றினார். மீண்டும் பூண்டி – புழலேரி பகுதிகளில் (திருவள்ளூருக்கு அப்பால்) ஒரு கருஞ்சட்டைப் படையையே உருவாக்கி தந்தை பெரியாருக்குப் மாபெரும் வரவேற்பை பூண்டி எள்ளியூர் குமாரசாமி அவர்களுடன் இணைந்து அளித்தார்!
பொறியாளர் பூண்டி குமாரசாமி இவரது BOSS – பணியாற்றிய நிறுவனத்தின் அதிகாரிஎன்பதால் அவரிடம் பூண்டி சிற்பி – மாடல் Maker – கோபால்சாமி பற்று, பாசம், மரியாதை, கொள்கை உறவு எப்போதும் உடையவர். பதவி ஓய்வு பெற்றாலும், கொள்கையில் பிணைக்கப்பட்டவர்களானார்கள்.
பின்னால் குடந்தை செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி) செவித்திறன் பாதிக்கப்பட்டாலும் கொள்கையில் சீரானவர். தஞ்சை வல்லத்தில் நமது பொறியயல் கல்லூரி தொடங்கிய போது, அதன் கட்டடங்களின் மாடல்களை இவரே செய்து அளிப்பார். கல்லூரி, பல்கலைக்கழகத்தில், அவரது வினைத் திட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். அதன் வளர்ச்சியில் அவருக்கும் பங்கு உண்டு.
அவரது அருமை மகள், மாநில திராவிடர் கழக மகளிரணி அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் கலைச்செல்வி. இவர் தஞ்சை மாவட்டத் தலைவர் மூத்த வழக்குரைஞர் அமர்சிங்கின் வாழ்விணையர்; அவரது வாழ்க்கையை வரைமுறை செய்து செப்பனிட்டு வளரச் செய்யும் உண்மையான வாழ்க்கைத் துணைவர்கள். கொள்கை வீரர்கள் – அடக்கம், அன்பு உள்ளம் கொண்ட நல்ல குடும்பத்தின் தலைவி. குடும்ப உறுப்பினர்கள், கொள்கைப் பற்றாளர்கள் அனைவருடனும் இணக்கமான உறவைப் பேணி, சுயமரியாதை வாழ்வு எப்படி சுகவாழ்வாக இருக்க முடியும் என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டும் குடும்ப விளக்குகள்!
தோழர் பூண்டி கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை நடத்தினால் அது கழகத்தின் வரலாறாகவே பெரிதும் இருக்கும்; தன் வாழ்வு, கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்கள் எல்லாம் அதிலேயே அடங்கி விடும்!
எளிய வாழ்வு தான்; ஆனால் எப்போதும் இனிய வாழ்வு என்பதன் இலக்கணமாக வாழ்ந்து வழிகாட்டும் கொள்கை வெளிச்சத்தின் மின்சார ஒளி வீச்சாக இக்குடும்பம் திகழும்.
அவர் ஓர் எடுத்துக்கட்டு! கழகம் 1949இல் பிரிந்த போதும் சபலம், சலனம் இல்லாதவராக, கடைசிவரை கட்டுப்பாடு காத்த பெரியார் இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர்.
எமது நிரந்தர சல்யூட் – வீர வணக்கம்.
அந்த நிகழ்வுகள் தான் இன்றும் ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’! எம்மை இளமையில் முதுகில் சுமந்து விளையாடியதை விட, கடைசிவரை இந்த இயக்கத்தைத் தன் முதுகில் சுமந்த தோழரை நூற்றாண்டில் மகிழ்ச்சிக் கண்ணீருடன் வாழ்த்தி நினைவுகூர்கிறேன்.