கோவை, நவ.4- தமிழ்நாட்டில் மின் கம்பங்கள் பழுதாவது அதிகமாகி வருகிறது. மின் கம்பங்களின் மீது குப்பைகளை குவிப்பது, நீர் தேக்கம், சாக்கடைகளை விடுவது, வாகனங்களால் மோதுவது, பல்வேறு பொருட்களை மின் கம்பங்களின் மீது சாய்த்து வைப்பது போன்ற செயல்பாடுகளாலும் மின் கம்பங்கள் பலமிழந்து வருகிறது. மழை, வெள்ளத்தாலும் மின் கம்பங்கள், ஒயர்கள் பழுதாகி வருகின்றன. இதற்கு மாற்றாக புதிதாக மின் கம்பங்களை கொள்முதல் செய்ய மின் வாரியம் திட்டமிட்டு ஒப்பந்த அழைப்பு விடுத்துள்ளது.
கோவை, சென்னை, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு புதிதாக மின் கம்பங்கள் கொள்முதல் செய்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 70 ஆயிரம் கான்கிரீட் மின் கம்பங்கள் கொள்முதல் செய்யப்படும். இந்த மின் கம்பங்களை டெண்டர் விட்டு முறையாக தயாரித்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின் கம்பங்களை உரிய கான்கிரீட் கலந்து தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.
தரக்குறைவாக மின் கம்பங்களை தயாரிக்கக்கூடாது என ஒப்பந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 8 மீட்டர் உயரத்தில் அடிப்பாகம் அகலம் அதிகமாகவும், மொத்த எடை 200 கிலோ என்ற அளவில் தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின் வாரியத்தினர் கூறுகையில், ‘‘மின் வாரியத்தில் சொந்தமாக மின் கம்பங்கள் தயாரிக்க போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. டெண்டர் விட்டுதான் மின் கம்பங்கள் பெறப்படுகிறது.
நடப்பாண்டிற்கு 70 ஆயிரம் மின் கம்பங்கள் பெற ஆன்லைன் ஒப்பந்த வெளியிடப்பட்டு இறுதி செய்யும் பணிகள் நடக்கிறது. கோவை சரகத்திற்கு 15 ஆயிரம் மின்கம்பங்கள் பெறப்படும். கோவை, திருப்பூர், கோபி, உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான அளவு மின் கம்பங்கள் சப்ளை செய்யப்படும். ஈரோடு சரகத்திற்கு 20 ஆயிரம் மின்கம்பங்கள், காஞ்சிபுரம் சரகத்தில் 6 ஆயிரம் மின் கம்பங்கள், திருவண்ணாமலை சரகத்தில் 20 ஆயிரம் மின்கம்பங்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக மின் கம்பங்கள் பெறப்பட்டதும், பழைய மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் நிறுவப்படும்’’ என்றனர்.