சென்னை, நவ.4- பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், கொடை (தானம்) மற்றும் செட்டில்மென்ட் போன்ற வற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்க வேண்டும். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் கருவூலத்துக்கு தேவையான வரி கிடைக்கும்.
கடந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10,000, முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40,000, பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10,000 என உயர்த்தி கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒப்பந்தங்களுக்கு முத்திரை தாள் கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200 ஆகவும், தத்தெடுப்பு ஆவணத்திற்கு ரூ.100லிருந்து ரூ.1,000 ஆகவும், ரத்து ஆவணத்திற்கு ரூ.50லிருந்து ரூ.1,000 ஆகவும், நகல் கட்டணம் ரூ.20லிருந்து ரூ.100 ஆகவும், அசல் நகலுக்கு ரூ.20லிருந்து ரூ.500 ஆகவும், பவர் பத்திரத்திற்கு ரூ.5 முதல் 300லிருந்து ரூ.1,000 ஆகவும், கூட்டு ஒப்பந்தத்திற்கு ரூ.300லிருந்து ரூ.1,000 ஆகவும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய ரூ.80லிருந்து ரூ.1,000 ஆகவும், அதேபோல அடமான மறுபரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு பத்திரங்களுக்கு ரூ.80லிருந்து ரூ.1,000 என 20 வகையான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டதால் இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயரும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில்தான் பத்திரப்பதிவுகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த முறை லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள முத்திரைத்தாள் கட்டணத்தில் பல இனங்களுக்கான கட்டணம் 2001ஆம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.