நாமக்கல், நவ.4- நாமக்கல் மாவட்டத்தில் மீனவ பட்டதாரி இளைஞா்களை தோ்வு செய்து, இந்திய குடிமைப் பணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்துறை உத்தரவின்படி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்களை தோ்வு செய்து, இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் அவா்கள் பங்கேற்க ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளாக உள்ள பட்டதாரி இளைஞா்கள் இந்த பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பு வோா் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் இணையதளமான பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் மேட்டூா் அணை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதராா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூா் அணை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நவ. 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குநா் அலுவலகம், மேட்டூா் அணை பூங்கா எதிரில், கொளத்தூா் சாலை, மேட்டூா் அணை – 636 401 என்ற முகவரியில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது நேரில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த சிறப்புக் குழு
எம்.பி. மாதேஸ்வரன் தகவல்
சென்னை, நவ.4- காவிரி – திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்படும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல், சேலம், திருச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் காவிரி ஆற்றின் கிளை நதியாக விளங்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாக உள்ளது. காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கொமதேக பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், சட்டப் பேரவையில் முதலமைச்சரிடம் வலியுறுத்தினாா்.
இத்திட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் எனில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். இதற்கான சிறப்புக் குழுவை அமைக்க கொ.ம.தே.க. முடிவு செய்துள்ளது.
காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தன்னாா்வலா்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்புவோா் 81110-01999 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், இந்த எண்ணில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து தங்களின் முழு விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பவித்திரம் வரை 132 கி.மீ.தொலைவுக்கு நிலங்கள் பயன்பெறும். 50,000 ஏக்கா் வரையில் பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இத்திட்டத்திற்காக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனா்.
இத்திட்டத்தின் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயனடைவா். மேலும், ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, தாத்தையங்காா்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் நிரந்தரமாக பயனடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் 3,200 பணியிடங்கள்!
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாகவுள்ள 3,200 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் 4 நாட்களில் (நவ.7) முடிவடைய உள்ளது. Salesman, Packer பணிகளில் எழுத்துத் தேர்வில்லாமல் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: 18-50. கல்வித்தகுதி: 10, +2 தேர்ச்சி. ஊதிய விவரம்: ₹5,500 – ₹29,000. கூடுதல் தகவலுக்கு DRB இணையதளத்தில் மாவட்ட வாரியாக தேடவும்.