வருணாசிரமத்தை எதிர்த்து கருத்து ரீதியில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் – உரைகள் – மக்களின் ஆதரவு
கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டைப் பாசறை கூடியது
சென்னை, நவ.4 ‘வருணாசிரமம் காக்கப்பட வேண்டும், நாங்கள் பிராமணர்கள்தான்!’ என்ற வகையிலும், திராவிட இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பார்ப்பனர்களும், அவர்களின் அம்புகளான விபீடணர்களும் நேற்று (3.11.2024) நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே இடத்தில் பிற்பகல் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் அறிவார்ந்த முறையிலும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்றதைப் பார்த்து, பொது மக்கள் இரு ஆர்ப்பாட்டத்தின் தன்மையை உணர்ந்தனர் – திராவிடர் கழகத்தின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் கண்டு மகிழ்ந்தனர்.
சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் அருகில் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட சிலரும் சேர்ந்து ஓர் ஆர்ப்பாட்டத்தை நேற்று முற்பகல் (3.11.2024) நடத்தினர்.
தாழ்த்தப்பட்டவர்களை அவமதித்தால், அவமதிப்பவர்கள் மீது பாயும் பி.சி.ஆர். சட்டம் போல, பார்ப்பனர்களை (அவர்கள் மொழியில் பிராமணர்களை) அவமதித்தால், பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என்று சொன்னால், சொல்லுவோர்களைத் தண்டிக்க புது சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களையும், தி.மு.க. வையும் திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளனர்.
பிராமணர்களைத் தாக்கினால் அரிவாளை எடுப்போம்! அரசுக்குக் கோரிக்கை அல்ல – ஆர்டர் போட வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். அதை மனதில் வையுங்கள் என்று பேசியுள்ளனர்.
நான் மாமிதான், சங்கிதான் – அதுக்கு என்னடா? களத்தில் இறங்கித் திருப்பி அடிக்கணும் – நாம் பிராமணர்கள் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு பேசியுள்ளனர்; வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி இருக்கின்றனர் (காவல்துறையும், அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்)
யார் உரிமையை யார் பறிக்கிறார்கள்? இந்து ஒற்றுமையைப் பேசும் பார்ப்பனர்கள்,
இந்து மதத்தில் உள்ளவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று, அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டால் அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
ஜாதியை ஒழிக்க முடியாது – ஸநாதனம் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் பேசி பார்ப்பனர்கள் தங்களின் உண்மை உணர்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தெலுங்கர்களைக் கொச்சைப்படுத்தி ஆபாசமாக நடிகை ஒருவர் பேசி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நம் மன்னர்களுக்கு அந்தப்புரத்தில் பெண்களாகப் பயன்பட்டவர்கள் தெலுங்கர்கள் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
தெலுங்குபேசும் மக்களை விபச்சாரிகள் என்ற வகையில் பேசிய சம்பந்தப்பட்ட நடிகை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஜேபி பொறுப்பாளர் சுதாகர்ரெட்டியே கூறும் அளவுக்குக் கீழ்த்தரமாக பார்ப்பனர்களின் தூண்டுதலால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த வருணாசிரம – ஆதிக்க சக்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே இடத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வர்ணாசிரமத்தை எதிர்த்து நடைபெற்ற திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொள்கை முழக்கத்துடன் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் கருஞ்சட்டைக் குடும்பங்கள் திரண்டு வந்திருந்தனர்.
இது தானாக எழுச்சியுடன் கூடிய கொள்கை வழிபட்ட பாசறைக் கூட்டமாக இருந்தது. ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல!
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியவர்கள் எதிர் தரப்பினர் போல் ஆபாசமாகவோ, வன்முறையைத் தூண்டும் வகையிலோ பேசாமல், கொள்கை வழி நின்று, பிரச்சினையில் அடிப்படையில் வருணாசிரமம் என்பது 2024ஆம் ஆண்டிலும் நிலைக்க வேண்டும் என்று கருதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் – அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று பேசினர்.
பார்ப்பனர்கள் எப்பொழுதோ திருந்தி விட்டனர். இப்பொழுது எல்லாம் அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என்று சொல்லுவோர் உண்டு.
அத்தகையவர்கள் எல்லாம்கூட மன மாற்றம் அடையும் வகையில் ‘கருப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுவது உண்மைதான் – இப்பொழுதும் பார்ப்பனர்கள் பழைய வன்மத்தோடும், பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர்கள், மேல் ஜாதிக்காரர்கள் என்ற ஆணவத்தோடு தான் நடக்கின்றனர் என்று உணரும் ஒரு நிலையை – நேற்றைய பார்ப்பனர்களின் ஆர்ப்பாட்டமும் பேசப்பட்ட பேச்சும் உருவாக்கி விட்டன.
அவாளின் முழக்கங்களுக்கு நமது பதிலடி கருத்து
‘காத்திடுவோம்! காத்திடுவோம்! ஹிந்து ஒற்றுமையைக் காத்திடுவோம்!’ என்று அவர்கள் கூட்டத்தில் ஒரு முழக்கம் போட்டனர்.
அதற்கு நமது சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, வினாவும் தொடுக்கப்பட்டது.
இந்து ஒற்றுமையைக் காப்போம் என்று முழக்கம் போடும் பார்ப்பனர்களே, அவர்களுக்கு அம்புகளாக இருந்து கொம்பு சுற்றும் பரிதாபத்திற்குரிய பார்ப்பனர் அல்லாத தோழர்களே!
உங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜாதியைக் காப்பாற்ற வேண்டும், ஸநாதனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முழக்கம் போட்டீர்களே, கூட்டத்திலும் பேசினீர்களே, இந்து மதத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு அது இருக்க வேண்டும் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, இந்து ஒற்றுமையை பற்றி முழக்கம் போடுகிறீர்களே, இது முரண்பாடு அல்லவா!
ஒற்றுமையைக் குலைப்பதுதானே ஜாதி? இந்து ஒற்றுமை பற்றிப் பார்ப்பனர்கள் பேசத் தகுதி உண்டா? உங்களுக்குள்ளேயே அய்யர், அய்யங்கார் சண்டை இல்லையா?
அய்யங்காருக்குள்ளும் வடகலை, தென் கலை சண்டை சிரிப்பாய் சிரிக்கிறதே – சாலையில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கட்டிப் புரளுகிறீர்களே!
காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்ற வழக்கு பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்சில் வரை செல்லவில்லையா?
மருத்துவரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று பதிலடி கொடுத்துப் பேசினர் கழகத் தோழர்கள்.
(குறிப்பு: நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் தீட்சதர்களுக்கும், அய்யங்கார்களுக்கும் மோதல் என்பது இன்றைய தினமணி செய்தி).
காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தியா முழுமையும் என்ன நடந்தது? குறிப்பாக காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்சே என்ற மராட்டிய பார்ப்பான் என்பதால் மும்பையில் அக்ரகாரங்கள் பற்றி எரியவில்லையா? பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா?
ஆனாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அமைதி காத்தது எப்படி? அதற்கு யார் காரணம்?
இனமான உணர்வுடன்
திரண்ட கருஞ்சட்டையினர்
விடுமுறைக்கு வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி. பேருந்துகள், ரயில்கள் எதிலும் இடமில்லை. ஆனாலும் தோழர்கள் திரண்டிருக்கிறார்கள். நிற்கக் கூட இடம் இல்லாத தொடர்வண்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்து வந்திருக்கிறார்கள் திருவாரூர், அறந்தாங்கி கழகத் தோழர்கள். சாலைப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, சென்னையின் எல்லையில் வாகனத்தை ஓரம்கட்டிவிட்டு, மாநகர மின்சார இரயிலில் மாறி வந்து கலந்துகொண்டனர் அரியலூர் தோழர்கள். வேனில் வந்திருந்தனர் ஒரத்தநாடு, புதுச்சேரி தோழர்கள். தனித்தனுயாகவும், முதிய வயதிலும், முன்பதிவு செய்யா ரயில் பெட்டியில் பயணித்து வந்திருந்தார்கள்.
திடீர் அழைப்பு என்றாலும், எத்தனை நெருக்கடிகள் என்றாலும், ‘சென்னையில் தானே நடக்கிறது… அந்த மாவட்டத் தோழர்கள் பங்கேற்பார்கள்’ என்று இருந்துவிடாமல், தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று, இனமான உணர்வால் உந்தப்பட்டுக் களத்திற்கு வந்த கருஞ்சட்டை வீரர்களைக் கொண்டது இந்த இயக்கம் என்பது இன்னுமொரு முறை நிரூபணமானது.
வானொலியில் பேசுமாறு தந்தை பெரியார் தானே அழைக்கப்பட்டார்!
கொன்றவன் ஒரு தனி மனிதல்ல – கோட்சே மீது கோபம் கொள்வதைவிட அவன் பின்னணியில் இருந்த தத்துவம் – சித்தாந்தம் என்ன?
அதனையல்லவா ஒழித்துக்கட்ட வேண்டும்? என்று சித்தாந்த ரீதியில் கேள்வி எழுப்பியவர் தந்தை பெரியார்.
அதன் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனர் கூடத் தாக்கப்படவில்லை. ஒரு பூணூல்கூட அறுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் அமைதியைக் கட்டிக் காத்தவர் தந்தை பெரியார்.
உண்மையிலேயே பார்ப்பனர்கள் நன்றி கூறுவதாக இருந்தால், தந்தை பெரியாருக்குத்தான் நன்றி கூற வேண்டும் என்று அறிவார்ந்த முறையில் திராவிடர் கழகத் தோழர்கள் கருத்தை முன் வைத்துப் பேசினர்.
ஜாதியை ஒழிக்க வேண்டும்; அனைவருக்கும் அனைத்தும், உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்பதுதான் தந்தை பெரியாரின் தத்துவம் என்று கழகத் தோழர்கள் கருத்துரையாற்றினர்.
கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் கருத்துக்குக் கருத்து மோதல் என்ற அடிப்படையில் திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
பறிக்காதே பறிக்காதே அர்ச்சகர் உரிமையைப் பறிக்காதே என்று பார்ப்பனர்கள் நேற்று (3.1.2024) முழக்கமிட்டனர்.
யார் உரிமையை யார் பறிக்கிறார்கள்? இந்து ஒற்றுமையைப் பேசும் பார்ப்பனர்கள், இந்து மதத்தில் உள்ளவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று, அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டால் அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
இதுதான் இந்துக்களின் ஒற்றுமைக்கான அடையாளமா என்று கழகத்தினர் கருத்துரையாற்றினர்.
நேற்று முற்பகல் அவாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முழக்கமிட்டனர் – மேடையில் பேசினர். நேற்று மாலை திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது – முழக்கமிட்டது – மேடையில் தோழர்கள் பேசினர்.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பொது மக்கள் திராவிடர் கழகத்தின் பெருமையை உணர்ந்தனர்.