ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோதம்! ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட 8 நோய்களுக்கான மருந்து விலை உயா்வு பிரதமருக்கு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்

Viduthalai
2 Min Read

விருதுநகர், நவ.3 ஆஸ்துமா, காச நோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட 8 விதமான நோய்களுக்கான மருந்துகளின் விலைகளின் உச்சவரம்பில் 50 சதவீதம் உயா்த்தப்பட்டிருப்பது குறித்த காரணத்தை கேட்டு விருதுநகா் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த மருந்துகளின் விலை உயா்வு குறித்து ஆய்வு செய்யவும், நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவும் ஒரு சுயேட்சையான கமிட்டி அமைக்கப்படவும் அந்தக் கடிதத்தில் தாகூா் கோரியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் மக்களவை உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூா் பிரதமருக்கு கடந்த வாரம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) சமீபத்தில் எடுத்த முடிவு தொடா்பான எனது கவலைகளை தெரிவிக்க விரும்புகிறேன். பெருவாரியாக பயன்படுத்தப்படும் எட்டு மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் வரை உயா்த்த என்பிபிஏ முடிவெடுத்துள்ளது.
மக்களை பாதிக்கிறது

‘அசாதாரண சூழ்நிலைகள்‘, ‘பொது நலன்களை‘ கருதி அரசு முடிவெ டுத்துள்ளதாக புரிந்து கொள்ளுகின்றேன். இருப்பினும் இத்தகைய குறிப்பிடத்தக்க முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை அரசு தெளிவுபடுத்துவது அவசியம் என நம்புகிறேன். இந்த விலை உயா்வு, அவசியமான ஆஸ்துமா, காசநோய், இருமுனையப் பிவு(உளநோய்), கண் அழுத்தநோயான கிளாக்கோமா போன்ற நோய்களுக்கான முக்கிய மருந்துகள் என என்பதால் இது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. ஏற்ெகனவே நோயாளிகளும் அவா்களது குடும்பங்களும் தேவையான சிகிச்சைகளுக்கு அணுகும்போது, நிதி சவால்களை எதிர்கொள்கின்றனா். இந்த மருந்துகளின் விலையில் திடீா் அதிகரிப்பு இந்த நோயாளிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். இது நோயாளிகளின் ஆரோக்கிய விளைவுகளில் சமரசம் செய்யக்கூட நேரிடும்.

விரிவான விளக்கம் தேவை
இதனால் இந்த விலையேற்றத்தை அவசியமாக்கிய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து தேவையான விரிவான விளக்கத்தை அளிக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த அதிகரிப்பின் மூலம் நோயாளிகள் மற்றும் சுகாதார வசதிகள் அளிப்பவா்களுக்கிடையே ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு சுயாதீன ஆய்வுக் குழுவை நிறுவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்தகைய குழு பொது சுகாதாரத் தேவைகளுடன் தொழில் சாத்தியத்தை சமநிலைப்படுத்தி எதிர்காலத்தில் விலைக் கொள்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்க முடியும்.

வெளிப்படைத் தன்மை வேண்டும்
இதுபோன்ற முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவது இன்றியமையாதது. ஒரு முழுமையான மறுஆய்வின் மூலம், அரசின் கொள்கையின் தகவலை பெறமுடிவும் என்பதோடு, இந்த அத்தியாவசிய மருந்துகள் மலிவு விலையில் கிடைத்து அனைவரும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யும். குடிமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இதற்கான பதிலை தங்களிடம் எதிர்பார்க்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார் மாணிக்கம் தாகூா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *