சமையலறையில் அலைபேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
அலைபேசியை கழிப்பறை, சமையலறை என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் சமையறையில் அலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார். அப்போது, அது எதிர்பாராதவிதமாக கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்ததில் பேட்டரி வெடித்து சிதறியது. இதில் சந்திர பிரகாஷ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வரும் 25இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிச.20 வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது. அதேபோல், தேசிய சட்ட நாளை முன்னிட்டு, சிறப்பு கூட்டுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலங்க வைக்கும் காட்சிப்பதிவு..
இப்படியுமா மனிதர்கள்!
ம.பியில் கணவனின் ரத்தக்கறை படிந்த படுக்கையை சுத்தம் செய்ய கர்ப்பிணி மனைவியை வற்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. மருத்துவமனையில் கணவன் இறந்த நிலையில், அவரது படுக்கையை மனைவி சுத்தம் செய்யும் காட்சிப் பதிவு நேற்று வைரலானது. இதையடுத்து மருத்துவ அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நிகழ்வில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் முன்னிலையில்
திமுகவில் அய்க்கியம்
பாஜக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அய்ந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால், மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் அய்க்கியமாகியுள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி திமுகவினர் வரவேற்றனர்.
யூனியன் வங்கியில்
1,500 பணியிடங்கள்!
யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூர் வங்கி அதிகாரி பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20-30.ஊதியம்: ரூ.48,480 – ரூ.85,920. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.13. கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்வையிடவும்.
நவ. 5க்குள் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ. 5ஆம் தேதிக்குள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது வடதமி்ழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என எச்சரித்துள்ளது. இதனால், நவம்பர் 2ஆவது வாரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும், சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுச் செலாவணி
கையிருப்பு சரிவு
இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு $3.463 பில்லியன் சரிந்து $684.805 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய வாரம் $2.163 பில்லியன் குறைந்து $688.267 பில்லியனாக இருந்தது. அக். 25ஆம் தேதி கணக்கெடுப்பின்படி, தங்கத்தின் கையிருப்பு $1.082 பில்லியன் அதிகரித்து $68.527 பில்லியனாக இருக்கிறது. சிறப்பு வரைதல் உரிமம் (SDRs) பொறுத்தமட்டில் $52 மில்லியன் குறைந்து $18.219 பில்லியனாக சரிந்துள்ளது.
30 நொடிகளில் உலகைச் சுற்றி…
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென நேரிட்ட தீ விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ராணுவ ஒத்துழைப்பு வழங்கப்படாது என்று எகிப்து ராணுவம் அறிவித்துள்ளது.
ஈராக்கின் புதிய நாடாளுமன்றத் தலைவராக
அல்-மஷ்ஹதானி (76) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அய்.நா சபையின் எச்சரிக்கையை மீறி ஹ்வாசாங்-19 என்ற நவீன ICBM ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
வாட்ஸ் அப் பயனர்கள் கவனத்திற்கு..
வாட்ஸ் அப்பில் ஹேக் செய்து சில நபர்கள் மோசடி செய்கின்றனர். இதைத் தடுக்க இருக்கும் வழியை தெரிந்து கொள்வோம். வாட்ஸ் அப் அக்கவுண்டுக்கு சென்று, அதில் அக்கவுண்ட் என இருப்பதை அழுத்த வேண்டும். பின்னர் TWO STEP VERIFICATION என்பதை தேர்வு செய்து, 6 இலக்க எண்ணை அமைக்க வேண்டும். தொடர்ந்து மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். அதுபோல் செய்தால், வாட்ஸ் அப்பில் யாராலும் ஹேக் செய்ய முடியாது.