சென்னை, நவ.3 சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று (2.11.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பில் 1,731 பேர் மாற்றுத் திறனாளிகள் சான்று பெறவில்லை என கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத் திறனாளி சான்று வழங்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு மருத்துவமனையில் நவ.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் கண் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். இங்கு மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் 4 கடவுச்சீட்டு அளவு ஒளிப்படத்துடன் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நாகை இலங்கை கப்பல் சேவை வாரத்துக்கு அய்ந்து நாட்கள்
நாகப்பட்டினம், நவ.3 இரு நாட்டு பயணிகளிடமும் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 8-ஆம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை – இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கியது. அப்போது, இரு மார்க்கத்திலும் நாள்தோறும் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த நிலையில், பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை குறைக்கப்பட்டது. பின்னர், சனிக்கிழமை உட்பட 4 நாட்களுக்கு கப்பல் சேவை நடைபெற்றது.
முன்பதிவு அதிகரிப்பு: தற்போது, இந்த கப்பல் சேவைக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது.பயணத்துக்கான முன்பதிவும் அதிகரித்துள்ளது. எனவே, இனி வாரத்தில் 5 நாட்களுக்குகப்பலை இயக்க நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, வரும் 8-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை களிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என்று சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.