யூனியன் வங்கியைப் பொறுத்தவரையில், சமூகநீதியையும், பாலியல் நீதியையும், மகளிருக்கு உரிய வாய்ப்பு என்பதையும் நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள்!
யூனியன் வங்கியினுடைய தனிச் சிறப்பு அதுதான்;அந்த ஆட்சிமை – மாட்சிமைக்கு நன்றி செலுத்தவேண்டும்!
ஈரோடு, நவ.3 யூனியன் வங்கியைப் பொறுத்தவரையில், சமூகநீதியையும், பாலியல் நீதியையும், மகளிருக்கு உரிய வாய்ப்பு என்பதையும் நீங்கள் நெருங்கிக் கொண்டி ருக்கிறீர்கள். அதுதான் யூனியன் வங்கியினுடைய தனிச் சிறப்பு – அந்த ஆட்சிமை – மாட்சிமைக்கு நன்றி செலுத்தவேண்டும், பாராட்டவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு –
13 ஆம் மாநில மாநாடு!
கடந்த 10.8.2024 அன்று காலை ஈரோட்டில் நடை பெற்ற யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்ப டுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான
வழிகாட்டும் அமைப்பு!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா – பிற்படுத்தப்பட்டவகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாட்டுக்கும், 31 ஆம் ஆண்டு விழா நிகழ்விற்கும் தலைமை தாங்கி, சிறப்பாக இந்த அமைப்பை இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான யூனியன் வங்கியினுடைய அமைப்புதான் வழிகாட்டும் அமைப்பு என்று சொல்லக்கூடிய ஓர் ஆற்றலை, ஆளுமையை, தனி சிறப்பை உருவாக்கிய அருமைத் தோழரும் சமூகநீதி போராளியாக என்றைக்கும் களத்தில் நின்று, இந்தியா முழுவதும் சமூகநீதியை விதைத்துக் கொண்டிருக்கக் கூடிய, தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினருமான அருமைச் சகோதரர் மானமிகு கோ.கருணாநிதி அவர்களே,
சிறப்பாக இங்கே குழுமியுள்ள வங்கியில் பணி யாற்றக்கூடிய தோழர்களே, இவ்வமைப்பின் உறுப்பி னர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சமூகநீதி யாளர்களே! மற்றும் ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
உங்களோடு இருக்கிறேன்!
30 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஈரோட்டில் இவ்வ மைப்பு முதலாமாண்டாகத் தொடங்கப்பட்டதோ, அந்த ஈரோட்டு மண்ணிலேயே இப்பொழுது 31 ஆவது ஆண்டிலும் நான் கலந்துகொள்கிறேன் – உங்க ளோடு இருக்கிறேன், அதே கொள்கைக்காகப் பாடுபட இருக்கிறேன் என்ற வாய்ப்பை இன்றைக்கு நீங்கள் எனக்கு வழங்கியிருக்கின்றீர்கள்.
நான், தொண்டனுக்குத் தொண்டன், தோழனுக்குத் தோழன். அந்த வகையில், இவ்விழாவிற்கு என்னை அழைத்தபோது, உரிமையோடும், உறவோடும் ஒப்புக்கொண்டேன்.
எங்களுடைய உழைப்பை மெருகேற்றிக் கொண்டிருக்கின்ற ஓர் அமைப்பு!
காரணம், இந்த அமைப்பு எங்களுடைய உழைப்பால் பயன்பெற்று இருக்கின்ற அமைப்பு என்று சொல்லமாட்டேன். எங்களுடைய உழைப்பை மெருகேற்றிக் கொண்டிருக்கின்ற ஓர் அமைப்பு என்று சொல்லலாம்.
எங்களுடைய உழைப்புத் தொடருகிறது என்றால், உங்களைப் பார்க்கின்றபொழுது எங்களுக்கு களைப்போ, சோர்வோ வருவதில்லை. தந்தை பெரியார் அவர்களுடைய சமூகநீதி காரணமாக, அந்த சமூகநீதி தத்துவத்திற்காகவே 110 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நீதிக்கட்சி காலம் – திராவிடர் ஆட்சிக்காலம் முதற்கொண்டு, இன்றைக்கு மண்டல் கமிசன் அமலாகி, இன்னும் பெற்றவைகளைவிட, பெறவேண்டியவை அதிகம் என்று சொல்லக்கூடிய ஒரு காலகட்டத்தில் இன்றைக்கு நாம் இருக்கின்ற இந்த நிலையில்கூட, உங்களைப் போன்றவர்கள், நன்றி உணர்ச்சியோடு இவ்வமைப்பைப் பலப்படுத்தி வருகின்றீர்கள்.
பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்த் துறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஈரோட்டிற்குப் போனவர்கள், பாராட்டை எதிர்பார்க்கமாட்டார்கள்!
எங்களைப் போன்றவர்கள் எப்பொழுதும் பாராட்டை விரும்பக்கூடியவர்கள் அல்ல. ஈரோட்டிற்குப் போன வர்கள், பாராட்டை எதிர்பார்க்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஏன் அழைத்த போதெல்லாம் வருகின்றேன் என்றால், இன்னும் களமாடவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. இன்னும் முடிக்கவேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. கடக்கவேண்டிய தூரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பெறவேண்டிய வெற்றிகள் நிலுவையில் ஏராளம் பாக்கியாக இருக்கின்றன.
எனவே, அவற்றையெல்லாம் உங்களுக்கு நினை வூட்டவும், எங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும், உங்க ளைப் பார்த்து ஒரு புதிய ஆற்றலைப் பெற்றுக் கொள்ள வும்தான்.
இங்கே இருக்கின்ற அதிகாரிகளைப் பார்க்கின்றோம். நம்முடைய அய்யா சத்யபான் பெகாரா, உங்க ளுக்கெல்லாம் உறுதுணையாக இருக்கக்கூடிய அருமைச்சகோதரர் அண்ணாதுரை போன்றவர்களைப் பார்க்கிறோம்.
பெயரே அண்ணாதுரை. இங்கே அண்ணாதுரையும் இருக்கிறார்; கருணாநிதியும் இருக்கிறார். பெரியார், ஈரோட்டில் எங்கும் இருக்கிறார். வீரமணியும் உங்க ளோடு சேர்ந்திருக்கிறார்.
எங்கே இவர்கள் எல்லாம் இருக்கிறார்களோ, அங்கே வீரமணி இருப்பது இயல்புதான். அது ஒன்றும் புதுமை கிடையாது.
நூறாண்டுகளுக்கு மேற்பட்ட போராட்டம்!
இது நூறாண்டுகளுக்கு மேற்பட்ட போராட்டம்; பல ஆண்டு அநீதிகளை, ஒரு நூற்றாண்டில், புரட்டிப் போடுகின்ற போராட்டம்; அண்ணா அவர்கள் சொன்ன தைப்போல, ‘Putting Centuries into Capsules’ என்று சொன்னார்.
What is the role of Periyar?
What are the achievements of Thanthai Periyar and Dravidian Movement and Present Government how it continues?
இன்னமும் அடையவேண்டியவை கூட இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நமது மகளிரைப் பார்க்கும்பொழுது இன்னும் நீங்கள் போராட வேண்டி யவை நிறைய இருக்கின்றன.
மற்றவர்களைவிட உங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.
அது என்னவென்றால், 50 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் பெண்களுக்கு என்று கேட்டார்.
குழந்தைகளுக்கு முதல் ஆசிரியை தாய்தான்!
ஏனென்றால், மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம் இருக்கிறார்கள் பெண்கள். இன்னுங்கேட்டால், வீட்டில் குழந்தைக்கு முதல் ஆசிரியை யார் என்றால், தாய்தான்.
குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்முன், முதல் ஆசிரியை தாய்தான். அந்தத் தாய், படித்தவராக, பணி செய்யக்கூடியவராக, அறிவுள்ளவராக, தெளி வுள்ளவராக, சிந்திக்கக் கூடியவராக இருந்தால், அத னால் பயன் ஏற்படும் என்பதுதான் அதனுடைய அடிப்படை.
கருணாநிதி அவர்களுடைய ஒத்துழைப்பு மிகப்பெரியது!
நம்முடைய கோ.கருணாநிதி அவர்கள், நீங்கள் அளித்தி ருக்கின்ற ஓர் அருமைச் செல்வம். இந்த வங்கி அவரை பெரிய அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. இந்த வங்கியை அதைவிட பெரிய அளவிற்கு, நன்றி மூலமாக, நாளும் பாதுகாத்து உயர்த்தி, இந்தியா முழுவதிலும் சமூகநீதி கொடி தலைதாழாமல் பறப்பதற்கு கருணாநிதி அவர்களுடைய ஒத்துழைப்பு மிகப்பெரியதாகும். எனவே, அவர்களைப் பாராட்ட வார்த்தையே இல்லை.
அதனால்தான் அரசாங்கமே அவரை அடையாளம் கண்டு, சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் போட்டி ருக்கிறது. சமூகநீதி என்பதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையிலேயே சமூகநீதி இருக்கிறது.
முதலிடம் சமூகநீதிக்குத்தான்!
ஜஸ்டிஸ் சோசியல், எகனாமிக் அன்ட் பொலிட்டிக்கல்.
அதிலும்கூட, மூன்று நீதிகள் என்று வருகின்ற நேரத்தில், முதலிடம் சமூகநீதிக்குத்தான். இரண்டாவதாக பொருளாதார நீதி, மூன்றாவதாகத்தான் அரசியல் நீதி.
அப்படிப்பட்ட சிறப்பான வாய்ப்பைப் பெற்றி ருக்கின்ற சமூகநீதிக்கு இன்றைக்கும் அவ்வளவுப் போராட்டம். இன்னும் போராட்டக் களம் முடியவில்லை. ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. நாம் அடைந்திருப்பது மிகமிகக் குறைவுதான்.
இந்த சூழ்நிலையில், மேலும் மேலும் இதைக் கொண்டு போகவேண்டும். அதைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதற்கு ஒரு உச்சவரம்பு என அதோடு நிறுத்தலாமா? இக்கேள்வி இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் இன்றைக்குப் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் ஏற்பட்டது
யாரால்? எப்படி? எங்கே? எதனால்?
இல்லை. அதற்குமேலும் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு வழிகாட்டிய மாநிலம் தமிழ்நாடுதான். 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு என்றால், எப்படி அந்த 69 சதவிகிதம் ஏற்பட்டது? யாரால்? எப்படி? எங்கே? எதனால்? ஏற்பட்டது என்பதைப்பற்றி அவர் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன. அந்தப் புத்தகங்களை வாங்கி நீங்கள் படிக்கவேண்டும். குறுகிய காலத்தில் அவற்றைப்பற்றி பேச முடியாது.
அதேபோன்று, மண்டல் குழுவைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். இட ஒதுக்கீடு சும்மா வந்ததா? யாரால் வந்தது? உத்தியோகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டையோ. 27 சதவிகித இட ஒதுக்கீட்டையோ எப்படி கொண்டு வந்தோம்?
யூனியன் வங்கியினுடைய தனிச் சிறப்பு!
அதற்கு முன்பு நாம் போராடியதனால்! இந்த யூனியன் வங்கியைப் பொறுத்தவரையில், சமூகநீதியையும், பாலியல் நீதியையும், மகளிருக்கு உரிய வாய்ப்பு என்பதையும் நீங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் யூனியன் வங்கியினுடைய தனிச் சிறப்பு – அந்த ஆட்சிமை – மாட்சிமைக்கு நன்றி செலுத்தவேண்டும், பாராட்டவேண்டும்.
ஆனால், கடந்து வந்த பாதைகளில் எவ்வளவு கற்கள், முட்கள், கண்ணிவெடிகள் இருந்தன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இந்தப் புத்தகங்களை வாங்கி நீங்கள் படித்தால், எங்களுடைய பேச்சுக்கு மேலும் ஆதாரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
16 போராட்டங்கள்; 42 மாநாடுகள்!
இப்போது 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. மண்டல் ஆணைய அறிக்கையை அமல்படுத்த 16 போராட்டங்கள்; 42 மாநாடுகள் இந்தியா முழுவதும் நடைபெற்றன. 14 ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் நடந்துதான் 27 சதவிகித இட ஒதுக்கீடு வந்தது.
ஆனால், அது முழுமையாக கிடைத்திருக்கின்றதா? என்ற ஆய்வு செய்யவேண்டும். 27 சதவிகிதம் கிடைத்துவிட்டது என்று நினைக்கக்கூடாது.
நம்முடைய உரிமை அது. அருமையாக ஜஸ்டிஸ் சின்னப்ப ரெட்டி அவர்கள் இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு எழுதினார்.
‘‘Reservations were intended for parity, not charity” என்று அழகாகச் சொன்னார்.
நாம், நம்முடைய உரிமையைக் கேட்கின்றோம்.
மண்டல் அறிக்கை யாருக்குமே கிடைக்கவில்லை. உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும் – தமிழ்நாடு அரசாங்கம் சார்பில், பிற்படுத்தப்பட்டோருக்கென அம்பாசங்கர் ஆணையத்தை, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது அமைத்தார்.
அந்த ஆணையம், கமிட்டி போன்று ஆனது – கிட்டத்தட்ட 31 பேர் இருந்தனர் அந்த ஆணையத்தில்.
அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், ‘‘எங்க ளுக்கு மண்டல் அறிக்கையின் நகல் வேண்டும்” என்று கேட்டார்.
உடனே, டில்லிக்குக் கடிதம் எழுதி கேட்டார்கள். அங்கே அதனுடைய நகல் இல்லை என்ற பதில் வந்தது.
அம்பா சங்கர் அய்.ஏ.எஸ்.
கடைசியில், அம்பா சங்கர் அய்.ஏ.எஸ். அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, ‘‘நீங்கள் மண்டல் அறிக்கையை வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு நண்பர்கள் சொன்னார்கள்” என்றார்.
சிக்கனத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார்!
அந்த அறிக்கையை டில்லியிலிருந்து வாங்கி வந்தோம். அப்படி எடுத்துவரும்பொழுது, எடை போட்டுத்தான் விமான நிலையத்திலிருந்து எங்களை அனுப்பினார்கள். 20 கிலோவிற்குமேல் எடுத்துக்கொண்டு வர அனுமதியில்லை. ஆகவே, என்ன செய்வது என்று யோசனை செய்தபொழுது, டெபுடி ஸ்பீக்கராக லட்சுமணன் அவர்கள் டில்லியில் இருந்தார். அவருடைய வீட்டில் கொண்டு போய் அந்த அறிக்கையின் நகல்களை வைத்துவிட்டு, ‘‘நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து, பெரியார் திடலில் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னோம். ஏனென்றால், நாங்கள் பெரியார் சிந்தனை உள்ளவர்கள். ஈரோட்டில், சிக்கனத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் அவர்கள். இங்கே மண்டல் அறிக்கையை விலைக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்காக, அங்கே 100, 200 பிரதிகளை வாங்குவோம். அதை மொத்தமாக எடுத்துக்கொண்டு வர முடியாது என்பதால்தான் மேற்சொன்ன ஏற்பாட்டினை செய்தோம்.
அதுபோன்றே அவரும் அதைக் கொண்டு வந்து கொடுத்தார்.
இதை அம்பா சங்கர் அய்.ஏ.எஸ். அவர்களிடம் சொன்னவுடன், ‘‘எங்களுக்கு 30 பிரதிகள் வேண்டும்” என்று கேட்டார்.
‘‘30 பிரதிகள் இல்லை; 20 தான் இருக்கிறது” என்று சொல்லி, 20 பிரதிகளைக் கொடுத்தோம்.
மற்ற இடங்களில் மண்டல் கமிசன் அறிக்கையையே வெளியே வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
மண்டல் அறிக்கையை வெளியிட்டு அமல்படுத்துங்கள் என்று நாங்கள் கேட்டோம்!
மண்டல் அறிக்கைக்காக நடந்த போராட்டத்தில், Publish the Mandal Commission and implement the Mandal Commission அதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டு அமல்படுத்துங்கள் என்று கேட்டோம். அதற்கு முன்புவரை, அறிக்கையை அமல்படுத்துங்கள் என்றுதான் கேட்பார்கள். ஆனால், அறிக்கையை வெளி யிட்டு அமல்படுத்துங்கள் என்று நாங்கள் கேட்டோம். தேவராஜ் அர்ஸ் போன்றவர்கள் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார்கள்.
மீதம் இருப்பதில் இந்த அறிக்கைதான் கடைசி நகலாகும். நம்முடைய (கையில் இருக்கும் நகலைக் காட்டுகிறார்) கோ.கருணாநிதி அவர்கள், மாமல்ல புரத்தில் பயிற்சி பட்டறையை நடத்தினார். அதுபோன்று அவர் மீண்டும் பயிற்சி பட்டறையை நடத்தவேண்டும்.
மண்டல் அறிக்கையில் உள்ள ஒரு பகுதியைச் சொல்கிறேன்.
Recommandations என்பது ஒரு தனி அத்தியாயம். அதில். மண்டல் அறிக்கையினுடைய பரிந்துரை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு? என்று கேட்கும்பொழுது, நாமெல்லாம் அதற்கு பதில் என்ன சொல்கிறோம் என்றால், 27 சதவிகிதம் என்று.
ஆனால், அது பதில் இல்லை.
அந்த ஆணையத்தின் பரிந்துரை என்ன?
மண்டல் அறிக்கையில் Recommendations என்ற பகுதி – 13 ஆவது அத்தியாயம்.
அந்த 13 ஆவது அத்தியாயத்தில்,
‘‘ It is not at all our contention that by offering a few thousand jobs to OBC candidates we shall be able to make 52% of the Indian population as forward. But we must recognise that as essential part of the battle against social backwardness is to be fought in the minds of the backward people.”
மண்டல் ஆணைய அறிக்கையின்படி
52 சதவிகிதம்!
அன்றைக்கு பிற்படுத்தப்பட்டோர் 52 சதவிகிதம்; இன்றைக்கு மக்கள் தொகை பெருகிவிட்டது. இப்பொழுதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கணக்குப் போட்டுப் பார்க்கவேண்டும்.
அன்றைக்கு 52 சதவிகிதம்தான் அவருடைய பரிந்துரை. எப்படி எஸ்.சி., எஸ்.டி., என்பதில் விகி தாச்சாரப்படி இருந்ததோ, அதேபோலத்தான், பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கணக்கெடுத்தபடி, மண்டல் ஆணைய அறிக்கையின்படி 52 சதவிகிதம்.
ஆனால், 52 சதவிகிதத்தை நான் பரிந்துரை செய்தாலும், இப்பொழுது கொண்டு வருவதற்கு 27 சதவிகிதம் கொடுத்தால், முதல் கட்டத்தில் வெற்றி அடையலாம் என்று அவர் நடைமுறைக்கு உகந்ததை எடுத்துச் சொன்னார். (தொடரும்)