எடைக்கு எடை வெள்ளியும் –
பகுத்தறிவுப் பகலவனின் அறிவிப்பும்!
பகுத்தறிவுப் பகலவன் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழா- தஞ்சாவூரில் (தஞ்சையில்) நடைபெற்ற மாநாட்டின் நிகழ்வில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கப்பட்ட நாளில், ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை கொளுத்தப் போவதாக தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த நாள் இன்று (03-11-1957).
3.11.1957 இல் தஞ்சாவூரில் பெரியார் ஜாதி ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார்.
அதில் அரசியல் சட்டத்தில் உள்ள மதப்பாதுகாப்பு, மத உரிமை என்பதில், பார்ப்பன ஜாதியை எவ்வாறெல்லாம் காப்பாற்றும்படி சட்டம் உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார்.
உடனடியாக அவசர அவசரமாக, ‘அரசியல் சட்டத்தை எரித்தால் மூன்றாண்டுகள் வரை சிறை’ என்ற சட்டத்தை அன்றைய மாநில அரசு நிறைவேற்றியது.
தந்தை பெரியார் கொடுத்த கெடுவுக்குள் (நவ.26) அவர் கூறியவை செயற்படுத்தப்படவில்லை.
சட்ட எரிப்பினால் கைதாகும்போது கூற வேண்டியவை என்று தந்தை பெரியார் ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘ஜாதியை பாதுகாக்கும் சட்டத்தை எதிர்க்கவே சட்டத்தை எரித்ததாகவும், அதில் தவறில்லை என்றும், எதிர்வாதாட விரும்பவில்லை எனவும், மேலும் என்ன தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியாய் ஏற்றுகொள்வதாகவும்’ நீதிமன்றத்தில் அறிவிக்கும்படி கூறி இருந்தார்.
சட்ட எரிப்பு நாளுக்கு முன்னதாக தந்தை பெரியார் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் அறிவித்த நாளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 10,000 பேர் சட்டத்தை எரிக்கத் திரள, திக்குமுக்காடிப் போனது அரசாங்கமும் காவல்துறையும்.
3000 பேர் கைது செய்யப்பட்டனர். விடுப்பிலோ, பிணையிலோ யாரும் செல்லவில்லை. பதினான்கு வயது சிறுவனை நீதிபதி மன்னிப்பதாய் முடிவு செய்ய, அச்சிறுவன் சண்டையிட்டு தனக்கான தண்டனையை வாங்கிக்கொண்டான். சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் இறந்தனர். அவர்களின் உடல், அன்னை மணியம்மையார் கடுமையாக போராடியப் பின் ஊர்வலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இவ்விருவரையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு பேர், சிறையிலும் வெளியில் வந்த பின்னும் இறந்தனர். ஜாதிக்கு எதிராய் இத்தனை பெரிய போராட்டம் வெடித்து, இந்திய சட்டம் கொளுத்தப்பட்டது ஜாதிக்கெதிரான பெரிய மரண அடியாகும்.
ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் உரை (3.11.1957):
தஞ்சையில் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றியும், தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கப்பட்ட நிகழ்ச்சியிலும், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய இன எழுச்சி உரை வருமாறு:-
அன்புமிக்க தாய்மார்களே! அருமைத் தோழர்களே! வரவேற்பு குழுத் தலைவர் அவர்களே! மற்றும் மாநாட்டு வரவேற்புக்குழு அங்கத்தினர்களே! இந்த மகாநாடானது சென்ற இரண்டு மாதத்துக்கு முன்னாலே திருச்சியில் கூட்டப்பட்ட திராவிடர் கழக மத்திய நிர்வாக சபைக் கூட்டத்தில் கண்டபடி அரசியல் சட்டத்தை எரிப்பது முதலிய பல தீர்மானங்கள் அதில் வந்த பொழுது அங்கத்தினர்கள் பெரும்பாலோர் இந்தத் தீர்மானங்களை நாம், மத்திய நிர்வாக சபைக் கழகத்தின் மூலமாகவே தீர்மானிப்பதைவிட இதற்கென்று ஒரு தனி மாநாடு கூட்டி அதில் இந்தத் இத்தீர்மானங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இந்நாட்டு மக்களுடைய ஆதரவைப் பெற்று, அதன் பிறகு சிறிது நாள் தவணை கொடுத்து, பிரச்சாரம் செய்து இவற்றை அமலுக்குக் கொண்டு வருவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.