அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
கோவை,நவ.2- கோவை மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்க முதலமைச்சர் தயாராக உள்ளார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, கோவையில் தனது கள ஆய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற நவம்பா் 5, 6 -ஆம் தேதி தொடங்க உள்ளார்.
இதற்காக, வருகிற 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வரும் அவா், காரில் விளாங்குறிச்சி பகுதிக்கு செல்கிறார். அங்கு அய்.டி.பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-ஆவது அய்.டி.பூங்கா கட்டடத்தைத் திறந்துவைக்கிறார்.
அதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். நவம்பா் 6-இல் காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் புதிதாக அமையவுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மய்யம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடங்களில் நேற்று (1.11.2024) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விளாங்குறிச்சியில் 8 தளங்களுடன் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 6-ஆம் தேதி, 7 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மய்யத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதிக முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாவட்டமாக கோவை விளங்குகிறது.
பல்வேறு சிறப்புத் திட்டங்களை கோவை மாவட்டத்துக்கு முதலமைச்சர் வழங்க உள்ளார் என்றார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், கோவை திமுக மாவட்ட செயலாளா்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.