தஞ்சை, நவ.2- தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே சோழா் காலத்தைச் சார்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டத்துக்கு உட்பட்ட திருக்காட்டுப்பள்ளி அருகே வானராங்குடியிலுள்ள நாகாம்பிகை உடனுறை நாகநாதசுவாமி கோயில் ராஜகோபுர நுழைவுவாயிலின் இடப்புறச் சுவரில் கல்வெட்டு இருப்பதாக வானராங்குடி அரசு உயா்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியா் கோ. ராஜ்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், அ. முருகேசன், அவ்வூரைச் சார்ந்த டி. உதயகுமார், பி. எழிலரசன், சி. சிவக்குமார் ஆகியோர் உதவியுடன் தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் முனைவா் சோ. கண்ணதாசன், பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் முனைவா் கோ. தில்லை கோவிந்தராசன், மன்னா் சரபோசி அரசு கல்லூரி தமிழ் முதுகலை இரண்டாமாண்டு மாணவா்கள் க. பார்த்திபன், வீ. செல்லையா, ர. பிரசாந்த் ஆகியோர் அடங்கிய குழுவினா் கண்டறிந்தனா்.
இது குறித்து சோ. கண்ணதாசன், கோ. தில்லை கோவிந்தராசன் நேற்று (1.11.2024) தெரிவித்தது: இந்தக் கல்வெட்டில் காணப்படும் எழுத்தமைதி மூலம் 11-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழா் காலத்துத் துண்டுக் கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இதில் மங்கலச் சொல்லோ, மெய்க்கீா்த்தியோ, மன்னனது ஆட்சி ஆண்டோ காணப்படவில்லை. இக்கல்வெட்டு வரிகளின் கடைசியில் சில எழுத்துகள் சிதைந்த நிலையில், கொடை செய்தியாக, சபையோர் ஒன்பது மாமுக்காணி நிலமும், இவ்வூா் வடவூா் கறங்காட்டு சிறு வாய் காலி…. இவ்வரையே ஒரு மாமுக்காணி நிலமும், இரண்டு திருந.. விளக்குக்குமாகக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது.
ஓம்படைக்கிளவியாக (காப்புச் சொல்லாக) இத்தன்மத்தைப் பதினெட்டு நாட்டு மக்கள் காக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக குறிக்கப்பட்டுள்ளது.