– உயர்நீதிமன்றம்
மதுரை, நவ.2- இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த சங்கா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், ஆதனூா் கிராமத்தில் வசித்து வரும் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வேளாண் பணிகளை முதன்மைத் தொழிலாக செய்து வருகின்றனா்.இங்குள்ள ஆதனூா் கண்மாய் வேளாண் பணிகளுக்கு நீராதாரமாகத் திகழ்கிறது. இதன் கொள்ளளவு 22.87 மில்லியன் கன அடி. பாசன பரப்பு 220.49 ஏக்கா். வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு, ஆதனூா் கண்மாயில் சேமித்து வைக்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படுவதில்லை. இதனால், வேளாண் பணிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த வழக்கில் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. தற்போது வைகை ஆற்றில் மழை நீா் செல்கிறது. எனவே, ஆதனூா் கண்மாய்க்கு தண்ணீரைத் திறந்துவிட்டு விவசாயத்தைப் பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தார்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சிறீராம், நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதுரை வைகை ஆற்றுக்குள் நான்கு, இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சுத்தம் செய்கின்றனா். குப்பைகளைக் கொட்டுகின்றனா். இதை நேரில் பார்த்துள்ளோம். குடிநீா் ஆதாரமாகத் திகழும் வைகை ஆற்றின் நீரை மாசுபடாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?. வைகை ஆறு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பைகளைக் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மதுரை மாநாகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் இருப்பது போல, சில அடிப்படைக் கடமைகளும் உள்ளன. இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த மனுவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு
வினாடிக்கு 6,712 கன அடியாக குறைந்தது
மேட்டூர், நவ. 2- காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,325 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,712 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 107.88 அடியில் இருந்து 107.50 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.90 டிஎம்சியாக உள்ளது.