சென்னையின் பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் நல்லி யுவராஜ் அவர்கள் (வயது 61) நேற்று (1.11.2024) சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், தாங்கொணாத துயரமும் துன்பமும் அடைந்தோம்.
சென்னை பொது மருத்துவமனையான இராஜீவ் காந்தி மருத்துவமனையில் எலும்பு சிகிச்சைத் துறை மருத்துவ நிபுணராக பல ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்தவர்;
ஏழை, எளிய நோயாளிகளிடம் மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்களது நோய் தீர சிகிச்சையுடன் நம்பிக்கையூட்டிய, மனிதநேயம் மிக்க மனிதராகத் திகழ்ந்த ஒரு தொண்டறச் செம்மல்.
எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும், மருத்துவராகவும் வற்றாத பாசத்துடன் பழகிய பண்பாளர்.
சென்னை இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் (Spine) முதுகுத்தண்டு நோய் சிகிச்சைக்கென தனியே ஒரு சிறப்புத் துறையை சில ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கிட அரும் பாடுபட்டு அமைக்க முழுக்காரணமானவராவார்!
சில காலம் உடல்நலக்குறைவுடன் இருந்தார்; எப்படியும் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையை இயற்கையின் கோணல் புத்தி வீணாக்கிவிட்டது.
பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குத் தனது சிகிக்சையாலும், Empathy என்ற அணுகுமுறையாலும் காப்பாற்றிய அவரைக் காப்பாற்ற இயலவில்லையே என்று நினைக்கும்போது துயரம் பீறிடுகிறது.
ஈடு செய்ய முடியாத அவரது இழப்பால் துயருறும் அவரது துணைவியார் டாக்டர் திருமதி கீதா அவர்களுக்கும், மகன்கள் டாக்டர் யு.சஞ்சீவ் குமார், டாக்டர் யு.சதீஷ் குமார், மற்றும் மருமகள்களுக்கும், குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2.11.2024