பூமிக்கு மிக அருகில் அரிதாக வரும் சுசின்ஷான் வால் நட்சத்திரத்தை இந்தியாவிலிருந்தும் பலர் பார்த்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பலரும் எடுத்த ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த மாதம் 28ஆம் தேதி சூரியனுக்கு அருகே வந்த இந்த வால் நட்சத்திரம், தற்போது சூரிய குடும்பத்திலிருந்து விலகிச் செல்கிறது. மீண்டும் இந்த நட்சத்திரத்தை 80,000 ஆண்டுகளுக்குப் பின்னரே பார்க்க முடியும்.
இரவில் சூரியன் ஏன் தெரிவதில்லை?
பகலில் ஒளிதரும் சூரியன், இரவில் ஏன் தெரிவதில்லை என்ற கேள்வி எழும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம். சூரியனை பூமி சுற்றி வருகிறது. அப்படி சுற்றுகையில், பூமியின் ஒரு பகுதி மீது சூரியனின் ஒளிவிழும். அந்த பகுதியில் உள்ள நாடுகளில் பகல் நேரம். சூரிய ஒளி விழாத பகுதியிலுள்ள நாடுகளில் இரவு. அதாவது, பகல் நிலவும் நாடுகளில் சூரியன் தெரியும். இரவு நிலவும் நாடுகளில் சூரியன் தெரியாது.
உலகில் மிக தொலைவு செல்லும் ஏவுகணை!
உலகிலேயே மிக தொலைவு செல்லும் ஏவுகணை எது, அது எந்த நாட்டிடம் உள்ளது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். உலகிலேயே மிக தொலைவு செல்லும் ஏவுகணை, R-36M ஏவுகணையாகும். அந்த ஏவுகணை உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவிடம் உள்ளது. R-36M ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்டால் 16,000 கி.மீ. பயணித்து எதிரி நாட்டை தாக்கும் திறன் உடையது.
மனம் திருந்திய திருடர்கள் செய்த செயல்!
டில்லியில் காரை திருடிய திருடர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. டில்லி பாலம் காலனியை சேர்ந்த வினய் குமார் என்பவர் அக்.10 முதல் தனது காரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அண்மையில் அவரது கார் இலக்கத் தகடு இன்றி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டபோது, திருடியவர்கள், காரையும் மன்னிப்பு கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.