தெளிவற்ற விடயங்களை சுட்டிக் காட்டினேன், விஜய் மீது தனிப்பட்ட வன்மம் இல்லை: திருமாவளவன் விளக்கம்!

2 Min Read

சென்னை, நவ.2- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது, அக்கட்சி தலைவர் விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விடயங்களையே தான் சுட்டிக்காட்டியதாகவும், அவர் மீது தனக்கு தனிப்பட்ட வன்மம் இல்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேட்டியளித்திருந்தார். அதில், “எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை விஜய்யால் வாங்க முடியுமா? எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும் முன்பே அவர் தி.மு.க.காரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிகருக்கும் எம்.ஜி.ஆருக்கு இருந்த பின்னணி இல்லை. எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியாகத்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விடயங்களை சுட்டிக் காட்ட வேண்டி இருந்ததால், அவற்றை சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த விதமான தனிப்பட்ட வன்மமும் இல்லை.

வி.சி.க-வை திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். திமுக கூட்டணி என்பது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த கூட்டணியை உருவாக்கியதில் வி.சி.கவுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் என்னுடைய தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை.

கூட்டணியில் இருந்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிக்கிறோம். நாங்கள் எதுவும் செய்வதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது எங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி. தி.மு.கவுக்கும், வி.சி.கவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொடுகிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” என திருமாவளவன் கூறியிருந்தார்.

முன்னதாக, தி.மு.க-வை பொதுஎதிரி போன்று விஜய் அறிவித்திருப்பதும், தி.மு.க கூட்டணியை குறிவைத்திருப்பதும் தான் அவரது ஒட்டுமொத்த உரையின் சாரம் என திருமாவளவன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *