சென்னை, நவ.2- சென்னையில் தீபாவளி நாளில் நேற்று (1.11.2024) மட்டும் 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் தீபாவளியை மக்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 15 மண்டலங்களிலும் இரவு, பகலாக பட்டாசு கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.மொத்தம் 19,060 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு கழிவுகள் அபாயகரம் என்பதால் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகள் குமிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிலையத்திற்கு 33 தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. 4 நாட்கள் செய்யும் ஒரே வேலையை ஒரே நாளில் செய்யும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் 2 நாட்களில் 156.48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 156 டன் அளவுக்கு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையின் தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். மேலும், பட்டாசுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த தீபாவளி ஆண்டு 275 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.