சமீப காலமாக திராவிடத்தை,தந்தை பெரியாரை-கலைஞரை பட்டியல் இன மக்களுக்கு எதிராக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது.
உண்மையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமத்துவம் சகோதரத்துவம் சமூகநீதியை அடிப்படையாக கொண்ட திராவிட இயக் கங்கள் போன்ற கட்சிகளோ அமைப்புகளோ தந்தைபெரியார் போன்ற சிந்தனையாளரோ, அண்ணா, கலைஞர் போன்ற ஆட்சியாளர்களோ தமிழ்நாட்டை ஆட்சி செய்யாமல் போயிருந்தால், அதிக அளவிலான படிக்காத வட மாநில இளைஞர்கள் குறிப்பாக பட்டியல் இனத்தவர்கள் நாளொன்றுக்கு நூறு இரு நூறு கிடைத்தால் கூட போதும் என்று குடும்பத்தை பிரிந்து கூலி வேலைகளுக்கும் பாணி பூரி, பஞ்சு மிட்டாய் விற்கவும் தமிழ்நாட்டை நோக்கி வருவதை போல தமிழ்பநாட்டு இளைஞர்கள் குறிப்பாக பட்டியல் இனத்தவர்கள் வேலை தேடி வடமாநிலங்களை நோக்கி போக வேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிருக்கும். மாறாக திராவி டம் ஆட்சி செய்ததால் தான் பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் படித்து பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்து உயர் பதவிகளில் அமர்ந்ததன் மூலம் சமத்துவம் பெற முடிந்தது.
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் கொள்ளிமலை அடிவாரத்தின் கடைக் கோடி கிராமங்களில் எனது பூர்வீக கிராமமான வடக்குபட்டியும் ஒன்று! அதில் அனைத்து ஜாதிகளும் சேர்ந்தே 100 வீடுகளுக்கும் குறைவாகவே இருக்கும். அதில் நான் சார்ந்த பட்டியல் இனத்தின் ஒரு பிரிவான பள்ளர்கள் வீடுகள் சுமார் 20 மட்டுமே. பெரும்பாலான வீடுக ள் முண்டுக்கற்களை கொண்டு மண் சுவர்களால் கட்டப்பட்ட குடிசை வீடுகளா கவே இருக்கும்.தவிரவும் 20 குடும்பத்தி ல் 19 பேர் நில மற்ற விவசாய கூலிகள்! எனவே நிலவுடைமை ஆதிக்க ஜாதியினர் நிலத்தில் அன்றாடம் உழைத்தால் மட்டுமே உணவு, அதுவும் தினமும் கம்பு, கேப்பை, சோள சோறு தான்,எப்போதாவ து தான் நெல்லு சோறு! நெல் சோறு சமைக்கும் போது சீக்கிரமும் பசிக்கும்! அடிக்கடியும் பசிக்கும். (திமுக ஆட்சிக்கு வந்து ஊருக்கு ஊர் ரேசன் கடைகள் திறந்த பிறகே எல்லோரும் நெல்லு சோற்றுக்கு மாறினார்கள்!).இந்த பொருளா தார சூழ்நிலையில் படித்தவர்கள்!?
தீவிர அம்பேத்கர் -பெரியாரிய சிந்தனை யாளரான என் தாய்மாமா தேவகோட்டை டாக்டர் சுப்பிரமணியம் எம்.பி.பி.எஸ். அவர்கள் எனது ஊரில் இருந்து 4 கி.மீ தொலைவில் (அடுத்த கிராமம்) 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள சிறுநாவலூரில் 1934இல் பிறந்தார்.1940களில் அப்பகுதியில் தொடக்க பள்ளிகளோ உயர் நிலை பள்ளிகளோ இல்லாததால் தனி ஒரு சிறுவனாக வயல் வரப்புகளில் தினமும்
8 கி.மீ நடந்து சென்று கோட்டபாளையத்தில் 1ஆம் வகுப்பும் தொடர்ந்து 1946இல் தாத்தையங்கார்பேட்டை- அவரின் அக்கா வீட்டில் தங்கி 10 கிமீ நடந்து சென்று மேட்டுப்பாளையத்தில் (ஊட்டி – மேட்டுப்பாளையம் அல்ல) உயர் நிலை கல்வியும் படித்து துறையூர் வட்டாரத்தில் பள்ளி கல்வி (SSLC) முடித்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து படித்து 1959இல் ஒட்டு மொத்த திருச்சி மாவட்டத்திலேயே எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டம் பெற்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். அதாவது துறையூர் வட்டாரத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பட்டியல் இனத்தவர்களே அதிகம் ,இருந்தும் 1950வரை எஸ்.எஸ்.எல்.சி., (SSLC) தேறிய முதல் நபர் என் மாமா ஒருவர் மட்டுமே என்றால் இச்சமூகம் கல்வியில் எந்த அளவுக்கு பின்தங்கி இருந்துள்ளது ?
இத்தகைய கல்வி, சமூக, பொருளாதார நிலையில் தான் 150 வீடுகள் மட்டுமே இருந்த குக்கிராமமான எனது ஊர் வடக்குப்பட்டியில் ஒரு தொடக்க பள்ளி! திமுக ஆட்சிக்கு வந்த 1967க்கு பிறகு தொடங்கப்பட்டது.
அந்த பள்ளி தொடங்கிய பிறகு 1967- 1992 க்கு இடைப்பட்ட 25ந்தே ஆண்டுகளில் பிரமிப்பூட்டும் வகையில் மேற்கண்ட 20 குடும்பத்திலிருந்து மட்டும் இரண்டு மருத்துவர்கள் (MBBS), இரண்டு பொறியியலாளர்கள் (BE), இரண்டு விவசாய பட்டதாரிகள் (B.Sc Agri.) இரண்டு கால்நடை மருத்துவர்கள் மற்றும் நான் உட்பட வீட்டுக்கு வீடு பல முதல் தலைமுறை பட்டதாரிகளும், தொழிற் கல்வி (ITI), மற்றும் தொழில் நுட்ப கல்வி (diplomo) முடித்த இளைஞர்களும் உருவாகி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றனர்.
அதை தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல தலைமுறைகளாக பண்ணை அடிமைகளாக ஆடு மாடுகளின் கொட்டகையை விட கேவலமான குடிசையில் வாழ்ந்த எங்களின் சமூக பொருளாதார நிலை தலைகீழாக மாறியதன் விளைவாக வடக்குபட்டியில் தற்போது ஆடு-மாடுகளுக்கு கூட குடிசையோ கூரை கொட்டகைகளோ இல்லை! வீடுகள் எல்லாம் மாடி வீடுகள்,திருவிழா காலங்களில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விலை உயர்ந்த மூன்று கார்களாவது அணிவகுத்து நிற்கும். அவ்வளவு ஏன்? என் வீட்டு நாய்க்கு கூட இன்று குளிர் சாதன வசதி.
இந்த சமூக மாற்றத்திற்கான பெருமை திராவிட இயக்கங்களை குறிப்பாக திமுகவையே சேரும்! ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியல் இன மக்களின் கல்வி வளர்ச்சியே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து வடக்குபட்டி போன்ற குக்கிரா மங்களில் கூட தொடக்க பள்ளிகளை திறந்ததோடு சிறிய கிராமங்களை இணைக்கும் சற்றே பெரிய கிராமங்களில் எல்லாம் உயர்நிலை பள்ளிகளையும் திறந்து பார்ப்பனர் அல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது திமுக!
தவிரவும் வறுமையில் வாடிய எங்கள் தலை முறையினர், இலவசமாக தங்கி உயர் நிலை கல்வி பயில வசதி யாக தமிழ் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆதி திராவிடர் நல விடுதிகளையும் திமுக ஏற்படுத்திக் கொடுத்தது. அவ்வாறு துறையூரில் 1967க்கு பிறகு தொடங்கப்பட்ட ஆதி திராவிடர் நல (SC /ST Welfare Hostel) விடுதியில் தங்கி அந்த பகுதியிலேயே மிகச் சிறந்த பள்ளியான செமீன்தார் உயர் நிலை பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றதனால் வாழ்கையில் முன்னேறியவர்களே நான் உள்ளிட்ட வடக்குப்பட்டியை சேர்ந் தவர்களும் துறையூரை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்களை சேர்ந்தவர்களும். மேலும் எஸ்.சி., எஸ்.டி., (SC/ST) நல விடுதிகளை திறந்ததோடு விடுதியில் தங்கி படித்த எங்களுக்கு வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன் முதலாக இலவச பாட புத்தகமும் ஆண்டுக்கு இரண்டு செட் வெள்ளை மேல் சட்டையும் காக்கி கால் சட்டையும் (டவுசர்) அதை துவைப்பதற்கு மாதா மாதம் சோப்பும் தலையில் தேய்த்துக்கொள்ள தேங்காய் எண்ணெயும் கூட வழங்கப்பட்டதோடு ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடத்துக்கு 8ஆம் வகுப்புக்கு பிறகு அரசு செலவில் தனிப் பயிற்சி (TUITION) கொடுக்கப்பட்ட து.
அதாவது தங்கிக் கொள்ள விடுதி, உண்பதற்கு உணவு, உடுக்க உடை, அதை துவைக்க சோப்பு, படிக்க புத்தகம், தனிப் பயிற்சி இவை எல்லாமே இலவச மாக தருகிறோம் வந்து படி என்று ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த எங்கள் தலைமுறையை படிக்க தூண்டியது தான் திராவிடம்!
அவ்வாறு படித்ததால் தான் நாங்கள் அரசு வேலையில் சேர்ந்து அடுத்த தலை முறையினரான எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக, பொறியாளர் களாக கலை அறிவியல் பட்டதாரிகளாக உருவாக்க முடிந்தது.
ஒருவேளை வடக்குப்பட்டி போன்ற குக்கிராமங் களில் துவக்க பள்ளிகளை ஏற்படு த்தி கொடுக்காமல் போயிருந்தாலோ அல்லது துறையூரில் இலவச விடுதியில் தங்கி படிக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் போயிருந்தாலோ எங்களில் எத்தனை பேர் படித்து முன்னேறி அரசு வேலையில் சேர்ந்திருப்போம்? எங்கள் பிள்ளைகளில் எத்தனை பேர் மருத்துவர்களாக பொறி யியலாளர்களாக ஆகி இருப்பார்கள்?
1978 வரை துறையூரில் மட்டுமே ஒரே ஒரு ஆதி திராவிடர் நல விடுதி இருந்தது .
அதனால் ஆண்டுக்கு 50 பேர் மட்டுமே படிக்க முடிந்தது. தற்போது, பெருமாள்பா ளையம், முருங்கபட்டி, செங்காட்டுப்பட்டி, சிறுநாவலூர், உப்பிலியபுரம் மற்றும் கண்ணனூர்
(BC விடுதி) என 10 கி.மீக்கு ஒரு எஸ்.சி., எஸ்.டி., நல அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் தொடங்கப்பட்டு ஆண்டிற்கு 500 பேரை கல்வியறிவு பெற வைத்து அரசு பதவியிலும் அமர வைத்து தான் திமுக ஆட்சி – திராவிட ஆட்சி. இந்த மாற்றம் – வளர்ச்சி தமிழ் நாடு முழுக்க ஏற்பட்டது என்பது தானே உண்மை.
அந்த அளவுக்கு 55 ஆண்டுகளில் இந்தி யாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து சமூகத்தில் சமத் துவம் ஏற்பட வழி வகுத்தது தான் திரா விடம். உண்மை இவ்வாறு இருக்க 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் பட்டியல் சமூகம் வஞ்சிக்கப்பட்டது என்று கூறு வது எப்படி ஏற்புடையதாகும் ? திமுகவோ திராவிடமோ இச்ச மூகத்தை வஞ்சித்திருந்தால் கல்வி சமூக பொரு ளா தாரத்தில் இச்சமூகம் வளர்ந்திருக் கவே கூடாதே! எங்கள் அப்பன், பாட்டன், முப்பாட்டனை போல பண்ணை அடிமையாகவோ விவசாய கூலிகளாகவோ அல்லது வடநாட்டினர் போல கூலி வேலை தேடி வட மாநிலங்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்லும் சூழ்நிலையோ அல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும்?ஆனால் நன்றாக படித்து வெளிநாடுகளுக்கு சென்று எம்.என்.சி., (MNC)க்களில் மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் லட்சக்க ணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களை டாக்டர்களை, அரசு அதிகாரிகளை, வங்கி ஊழியர்களை உருவாக்கிய திமுகவை பார்த்து திமுக பட்டியல் இனத்தை வஞ்சித்து விட்டது என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையது?
– ஆ.பாலகிருட்டிணன்
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்
நகர ப.க. அமைப்பாளர்
காரைக்குடி