திருச்சி, நவ.2- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை நாளில் இரவு தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச் சென்றால் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற மூடநம்பிக்கை பக்தர்களிடையே பரப்பப்பட்டுள்ளது. அக்கோவிலில் தங்கி வழிபடும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகப் பகுதியில் அமாவாசை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் தெப்பகுளத்தில் 2 இறந்த உடல்கள் மிதப்பதை கண்டு பக்தர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தெப்பக்குளத்தில் மிதந்த உடல்களை காவல்துறையினர் மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மிதந்த 2 ஆண் உடல்கள் 30 வயது மற்றும் 50 வயது என்பது தெரியவந்துள்ளது.
2 நாட்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இறந்த உடல்களை மீட்கப்பட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எவ்வாறு இறந்தார்கள்? என சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலின் தெப்பக்குளத்தில் 2 ஆண் உடல்கள் மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இப்படியும் ஒரு காட்டுவிலங்காண்டித்தனம் பா.ஜ.க. ஆளும் ம.பி.யில் மக்களை படுக்கவைத்து
பசு மாடுகளை நடக்க விடும் அவலம்!
உஜ்ஜைன், நவ.2- தீபாவளி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கடந்த 31.10.2024 அன்று கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் இந்த விழா பல நாட்களுக்கும் கொண்டாடப்படுவது வழக்கமாம். தீபாவளியை முன்னிட்டு மக்களில் ஒரு பிரிவினர் பட்டினி இருந்து வழிபடுவதும் உண்டு.
இந்த நாளில் செல்வ வளம் வேண்டி இறைவழிபாடு செய்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இனிப்புகள் மற்றும் பரிசுகளை பகிர்ந்து கொள்வதும், பரிமாறிக் கொள்வதும் கொண்டாட்டங்களில் இடம் பெறும்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் பிதத்வாத் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு வினோத பாரம்பரிய சடங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதன்படி, தீபாவளிக்கு மறுநாள் இந்த பாரம்பரிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது வழக்கமாம். அந்த கிராம மக்கள் தெருவில் வரிசையாக படுத்துக் கொள்வார்களாம். அவர்கள் மீது வீட்டில் வளர்க்கும் பசுக்களை நடக்கச் செய்வார்களாம். கோவர்த்தன பூஜை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நடைமுறையில் அந்த கிராமத்தின் ஆண்கள் கலந்து கொள்கின்றனராம். இதுபற்றிய காட்சிப்பதிவு வெளிவந்து பரபரப்பாகி உள்ளது.