சென்னை, நவ.2 தமிழ்நாடு நாளையொட்டி, எல்லையை பாதுகாக்க போராடிய தியாகிகளை வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாள், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர் களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1.
தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைகையாற்றங்கரையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டியவா்களுக்கு அபராதம் மதுரை, நவ.2 மதுரை வைகை தென்கரை சாலைப் பகுதியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய கடையின் உரிமையாளா்களுக்கு நேற்று (1.11.2024) அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை வைகை தென்கரை சாலை பகுதி வைகையாற்று கரைப் பகுதியில் இறைச்சிக் கழிவுகளை சிலா் கொட்டி வருவதாகப் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமார் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தக் கழிவுகள் மாநகராட்சி பணியாளா்கள் மூலம் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் கிருமி நாசினி பொடி தெளிக்கப்பட்டது. மேலும், பொதுவெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய 5 கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்று சாலைகள், பொது இடங்கள், வைகையாற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால், மாநகராட்சியின் மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவ.30-க்குள் பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது நடவடிக்கை
ஆட்சியா் எச்சரிக்கை
சென்னை, நவ.2 நவ.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
சென்னை மாவட்டத்தில் குழந்தைகள், முதியோர், மனவளா்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், போதை அடிமைகள், மன நலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள், விடுதிகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். ஆனால், பல இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யாமல் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால், இம்மாதிரியான இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
இதன்படி இல்லம் மற்றும் விடுதி நிர்வாகங்கள் தங்கள் துறைகளுக்குள்பட்ட இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாக சென்று விண்ணப்பத்தைப் பெற்று நவ.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். தவறும் இல்லங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முடக்கப்படும் (சீல் வைக்கப்படும்) எனத் தெரிவித்துள்ளார்.
நாகை -இலங்கை கப்பல் போக்குவரத்து வாரத்துக்கு 5 நாள்களாக அதிகரிப்பு
நாகை, நவ.2 நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை வாரத்துக்கு 5 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் (சிவகங்கை) போக்குவரத்து கடந்த ஆக.16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த சேவை எவ்வித இடையூறின்றி நடைபெற்ற நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று செப். 21-முதல் சனிக்கிழமைகளிலும் கப்பல் இயக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது, பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், நவம்பா் 2-ஆவது வாரத்திலிருந்து 5 நாள்கள் கப்பலை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் இணையதளத்திலும் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். கப்பல் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.