பொன்.பன்னீர்செல்வம்
திருநள்ளாறு.
கடவுள் மறுப்பு கொள்கைகளைத் தவிர, தந்தை பெரியார் அவர்களின் மற்ற கொள்கைகளையும், சித்தாந்த கோட்பாடுகளையும் ஏற்று அவரை வழிகாட்டியாகவும், தலைவராகவும் கொண்டு செயல்படுவேன் என்று த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் கூறியிருக்கிறார்.
இப்படித்தான் சீமான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கும் போது கடவுள் மறுப்பு கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு பெரியாரை வழி காட்டியாகவும், தலைவராகவும் கொண்டு செயல்படுவேன் என்று கூறினார். தற்போது தடுமாறி, தடம் மாறி,
ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைக்கூலியாக நிற்கிறார்.
தந்தை பெரியாரின் மற்ற கொள்கைகள் அனைத்துமே கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து தான் பிறக்கிறது. புத்தர் கடவுள் இல்லை என்று சொன்னார்.அதன்பின் 2000 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் மற்ற நாடுகளில் உள்ள நாத்திக பகுத்தறிவுவாதிகள் கூட சொல்லத் தயங்கிய போது, தந்தை பெரியார் அவர்கள் மிகத் துணிச்சலாக கடவுள் இல்லை என்று உண்மையை உரக்கச் சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள் போகிற போக்கில் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை
1925இல் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்திற்கு 1944இல் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றினார். அதை ஒரு பகுத்தறிவு இயக்கமாகவும், அறிவியல் இயக்கமாகவும், ஜாதி ஒழிப்பு இயக்கமாகவும் தொடர்ந்தார்.
ஜாதி ஒழிப்பிற்காகவும், மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கவும், தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொடர் பிரச்சாரங்கள் செய்தார். பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார். ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பிரிவையும் கொளுத்தினார். அதற்காக பெரியாரின் தொண்டர்கள் உயிரையும் கொடுத்து, ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை பெற்றனர்.
ஜாதியின் பெயரால் மனிதனை மனிதன் தொடக் கூடாது, கண்ணில் படக் கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற கொள்கைத் தத்துவம் எதனால் யாரால் சொல்லப்படுகிறது? ஏன் சொல்லப்படுகிறது? என்று தந்தை பெரியார் அவர்கள் தன் பகுத்தறிவால் சிந்தித்து கண்டறிந்தார்.
இவையெல்லாம் ஆரிய வர்ணாசிரம மனுதர்ம கோட்பாட்டின்படி கடவுளின் பெயரால் கற்பிக்கப்படுகிறது. பிறப்பால் மனிதனின் ஏற்றத்தாழ்வுக்கும் ஜாதிய படிநிலை ஒடுக்கு முறை கட்டமைப்புக்கும் கடவுள் தான் காரணம் என்பதை கண்டறிந்த தந்தை பெரியார் அவர்கள், ஜாதியை ஒழிக்க அதனை பாதுகாக்கும் கடவுளை இல்லை என்று 1967இல் சொன்னார்.
1925இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய பெரியார், 1944இல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றிய பெரியார். சுயமரியாதை இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பே கடவுள் இல்லை என்று தெரிந்தும், நீண்ட ஆய்வுக்கு பிறகு, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், விடையபுரம், பூங்கொடி பூங்காவில் நடைபெற்ற பகுத்தறிவு பிரச்சார பள்ளியில் 24.05.1967இல்,
“கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”
என்ற கடவுள் மறுப்பு வாசகங்களை உருவாக்கி அதற்கான விளக்கங்களோடு வெளியிட்டார்.
ஆரிய சித்தாந்த, வர்ணாசிரம, மனுதர்ம கோட்பாடு, கடவுளின் பெயரால் இங்கு எல்லாவற்றையும் பாதுகாத்து வருகிறது. எல்லாவற்றுக்குமே மூலகாரணம் கடவுள்தான் என்று கண்டறிந்த பெரியார் ‘கடவுள் இல்லை’ என்று சொன்னார்.
ஜாதி என்ற கடும் விஷம் கொண்ட நாகப்பாம்பை கொல்வதற்காக அடித்தபோது, அது ஓடிப்போய் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து கொண்டது என்றார் தந்தை பெரியார்.
‘கடவுள் இல்லை’ என்பது
ஒரு சித்தாந்த தத்துவத்தின் கோட்பாடு.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், “நான் கடவுளைக் கேட்டு தான் தீர்ப்பு சொன்னேன்” என்றார் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்கள்.
நான் பயாலாஜிக்கலாக பிறக்கவில்லை – கடவுளின் குழந்தை என்றார் ஒருவர்.
இப்படி எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு கடவுளைக் காரணம் காட்டி தப்பித்து கொள்ளலாம் என்ற நிலை இன்று வரை இருந்து வருகிறது. தவறுகளை செய்து விட்டு இல்லாத கடவுளை காண்பித்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதனை கண்டறிந்த தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை’ என்று சொன்னார்.
த.வெ.க.வின் தலைவர், பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் மற்ற கொள்கை கோட்பாட்டு சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன் என்கிறார்.
கடவுள் மறுப்புக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லும் அந்த இடத்தில் இருந்து தான், சித்தாந்த கொள்கைத் தெளிவில்லாத விஜய்யின் அரசியல் பயணம் தொடங்குகிறது.
அவர் எதை வேண்டுமானாலும் சொல்வார், எப்படி வேண்டுமானாலும் செய்வார், கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்வார்.
அவர் மாநாட்டில் அறிவித்த கொள்கை பிரகடனங்கள் அனைத்தும் திராவிட சித்தாந்த கொள்கைகள். அதைத்தான் தனக்கு அரசியல் எதிரி என்கிறார். குடும்ப அரசியல் என்கிறார். அது குடும்ப அரசியல் அல்ல கொள்கை அரசியல். அந்தக் கொள்கைகளின் ஆட்சி வழியால்தான் இன்றைக்கு தமிழ்நாடு உச்சத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு ஒப்பீட்டளவில் குறைந்த தனி நபர் வருமானம் இருந்த போதிலும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் அய்ரோப்பிய நாடுகளுக்கு இணையானது என்றும்,
சமூக சேவைகளில் பொது முதலீட்டுக்கான வலுவான அர்ப்பணிப்பு, சம பங்கு மற்றும் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், நிர்வாகத்திற்கான பரவலாக்கப்பட்ட அணுகுமுறை, துடிப்பான சிவில் சமூகம், ஜனநாயக அரசியல் அமைப்பின் பின்னணியில் தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சி வெற்றிகள் எட்டப்பட்டுள்ளன என்றும்,
தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் உலகத்தில், முன்னணி நாடாக இருந்திருக்கும் என்றும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் அவர்கள், சமூக வளர்ச்சியில் தமிழ்நாட்டின் சாதனைகளை “டெவலப்மென்ட் அஸ் ஃபீரிடம்” என்ற புத்தகத்தில் (1999) குறிப்பிட்டு இருக்கிறார்.
ஊழலைப் பற்றி விஜய் பேசுகிறார், ஜாதிக் கொடுமையும் ஏற்றத்தாழ்வும் ஊழலைவிட கொடுமை யானது.
நாம் முதலில் ஒழிக்க வேண்டியது இதைத்தான்.
நான் ஏ- டீமும் இல்லை, பி- டீமும் இல்லை, நேரடி டீம், எனக்கு எந்தச் சாயமும் பூச வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு அவரே காவி சாயத்தை பூசிக் கொள்கிறார்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளை பிரிக்க தொடர்ந்து பல்வேறு நபர்களை களம் இறக்கி விட்ட பிஜேபி தற்போது த.வெ.க. தலைவர் விஜய்யை களமிறக்கி இருக்கிறது.
இப்போதும் சொல்கிறோம். இது பெரியாரின் திராவிட மண். திராவிட சித்தாந்தம் ஆழமாக வேரூன்றி, அகலமாக கிளைப்பரப்பி தழைத்து, செழித்து வளர்ந்து நிற்கிறது. இதனை எந்தக் கொம்பனாலும் வெட்டி வீழ்த்தி விட முடியாது.
தந்தை பெரியாருக்குப் பிறகு அன்னை மணியம்மை யாருக்குப் பிறகு திராவிட சித்தாந்த கொள்கை கோட்பாடு களை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர், 93 வயதை தொடும் ஆசிரியர் அவர்கள் ஆரிய, ஆர்.எஸ்.எஸ். பருந்துகளிடமிருந்து அடைகாத்து வருகிறார்.