க.கமலம் சேலம் – அயோத்தியா பட்டணம்
“பேச வைத்த பெருமான் ஆசிரியர்” என்று
எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
2008ஆம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேன். அதுசமயம் பேச இயலாத சூழல் ஏற்பட்டது. இனி பேச வருமா என்கிற பயமும் வந்துவிட்டது. உள்ளூர் மருத்துவர்கள் வாய்ப்புக் குறைவு என்கிற நிலையில், உடனடியாக ஆசிரியர் அவர்களைச் சென்னையில் சென்று சந்தித்தேன்.
உடனே உரிய மருத்துவரைத் தொடர்பு கொண்டு அதற்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற மருத்துவப் பராமரிப்பில், என்னுடைய பேச்சு எனக்கு மீண்டும் கிடைத்தது. ஆசிரியரின் முயற்சியும், வழிகாட்டுதலும் இல்லாவிட்டால், என் குரலில் இருந்து காற்று மட்டும்தான் வந்திருக்கும். அதனால்தான் என்னைப் பேச வைத்த “பெருமான்” (பெருமைக்கு உரியவர்) என்று அன்போடு சொல்கிறேன்!
பெரியார் திடலில் திருமகள், பார்வதி, மனோரஞ்சிதம் ஆகியோருடன் தங்கியும், உணவு உண்டும், உறவாடும் நட்பும் கிடைத்தது. அதேபோல வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் தன்னுடன் 2 மாத காலம் வைத்துக் கெண்டார்.
இயக்கத்திற்கு எப்போது வந்தீர்கள்?
சேலம் மாவட்டம், வலசையூர்தான் எனது சொந்த ஊர். எனது பெயர் க.கமலம். வயது 55. இணையர் பெயர் இரா.கண்ணதாசன். 1982ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 1992இல் மறைந்துவிட்டார். 10 ஆண்டு காலத்தில் வாழ்க்கை முடிந்துவிட்டது. திருமணமாகும்போது எனது வயது 21. எங்களுக்கு 2 மகன்கள். பாலசந்தர்-பொன்னி, சுந்தரலிங்கம்-ரம்யா. பெயரன், பெயர்த்திகள் நால்வர். சுகன்ராஜ், அகில், நட்சத்திரா, யாழிசை.
சேலத்தில் நடைபெற்ற ஒரு மாநாடு ஒன்றில் பாப்பாநாடு பாஸ்கர் கலை நிகழ்ச்சி கேட்டேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. மாநாட்டின் நிறைவில் ஆசிரியரின் பேச்சைக் கேட்டு, கொள்கைத் தெளிவும் பெற்றேன். அடுத்த நாளே சேலம், பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த பெரியார் புத்தகப் பூங்காவில், மேனாள் மாவட்டச் செயலாளர் அய்யா முனுசாமி அவர்கள் மூலமாக இயக்கத்தில் இணைந்து கொண்டேன். தற்போது சேலம், அயோத்தியா பட்டணத்தில் வசித்து வருகிறேன்.
இளம் வயதில் இணையரை இழந்ததால்
பெரும் வலியும், வேதனையும் ஏற்பட்டிருக்குமே?
சொல்லொணாத் துயரங்களைக் கடந்துவிட்டேன். என்னைப் போன்று பாதித்த பெண்கள் இங்கு நிறையவே இருப்பார்கள். எனினும், மூடப்பழக்கம் என்கிற பெயரிலும், நான் நிறைய சித்ரவதை செய்யப்பட்டேன். இயல்பான இழப்பு ஒருபுறம்; மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமம் மறுபுறம்! நல்லவேளை… இப்போது நான் சுயமரியாதை வாழ்க்கை வாழ்கிறேன். மூடப்பழக்கத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறியதாக ஒரு வீடு கட்டினேன். எந்த சாஸ்திரமும் நான் பார்க்கவில்லை. இதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் முதலில் ஆச்சர்யப்பட்டாலும், பிறகு அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனர். இதைப் பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.
நீங்கள் வகித்த பொறுப்புகள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து நினைவு கூறுங்கள்?
மாவட்ட சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர், மாவட்டத் துணைத் தலைவர் என்பதாக இருந்து, தற்சமயம் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறேன். பங்கேற்ற நிகழ்ச்சிகளின் பட்டியல் சற்று நீளமானது. பயிற்சி வகுப்புகள் என்று பார்த்தாலே ஆத்தூர், ஏலகிரி, சென்னை, மேட்டூர் எனப் பல ஊர்களிலும் கலந்து கொண்டுள்ளேன். தவிர சேலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நமது சொற்பொழிவாளர்கள் கூட்டங்கள், ஊத்தங்கரை பெரியார் சிலை திறப்பு, ஆசிரியருக்கு எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தங்கம், எடைக்கு எடை தானியம், குடும்ப விழாக்கள், சுயமரியாதைத் திருமணங்கள், பொதுக் குழுக்கள், வாசகர் வட்ட நிகழ்வுகள், துரை.சக்ரவர்த்தி அய்யா இறுதி நிகழ்வு எனப் பலவற்றிலும் பங்கேற்றுள்ளேன்.
தவிர சேலம் மாவட்ட இளைஞரணி மாநாடு, ஆத்தூர் மாவட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, திருவண்ணா மலை எழுச்சி மாநாடு, மதுரை தமுக்கம் மாநாடு, திருச்சி மகளிர் மாநாடு, தஞ்சாவூர் மாநாடு, நாகை மாவட்ட மாநாடு, சேலம் பவளவிழா மாநாடு, ஊத்தங்கரை மாநாடு, காவேரிப்பட்டிணம் மாநாடு, கிருஷ்ணகிரி மாவட்டப் பேரணி, மேட்டூர் மாவட்ட மாநாடு உள்ளிட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்று ஒருநாள் சிறைக்குப் பலமுறை போயுள்ளேன்.
மறக்க முடியாத இயக்க நிகழ்வுகள்
ஏதாவது இருக்கிறதா?
இந்த இயக்கத்திற்கு வந்த பிறகுதான் நான் “வாழ்ந்து” கொண்டிருக்கிறேன். பொதுப் பணிகளில் ஈடுபட, ஈடுபட சொந்தக் கவலைகளை எளிதாகக் கையாள முடிகிறது! சேலம் புலவர் அண்ணாமலை அவர்கள் இறந்தவுடன் அவர்களின் உடலை நான், தோழர் சுஜாதா உள்ளிட்டோர் தூக்கி, வாகனத்தில் வைத்தோம். பிறகு இடுகாடு வரை சென்று வீர வணக்கம் செலுத்தி வந்தோம்.
அதேபோல அய்யா முனுசாமி, அப்பாயி, கடவுள் இல்லை சிவக்குமார் ஆகியோரின் உடல்களைக் கடைசி வரை தோளில் சுமந்து சென்று, இறுதி வணக்கம் செய்து வந்தேன். பெரியார் பெருந்தொண்டர்கள் இராஜகோபால், இராவணன், மேட்டூர் இராஜமாணிக்கம், சந்திரசேகர், இராமகிருஷ்ணன், நமச்சிவாயம், பழனிச்சாமி
உள்ளிட்ட இன்னும் பல தோழர்களின் செயல்பாடுகளை என் வாழ்வில் மறக்கவே முடியாது!
கடைவீதி நன்கொடையின் போது அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயை வாங்கும் போதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். சிலர் கேள்விகளும் கேட்பார்கள். பதில் சொல்லவே அவ்வளவு ஆசையாக இருக்கும். அதேபோல நிகழ்ச்சியைச் சிறப்பாக முடித்த பிறகு வருகிற மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. அடுத்தக் கூட்டம் எப்போது நடத்தலாம் என்கிற ஆவல் வந்துவிடும்.
ஆசிரியர் குறித்து மலரும் நினைவுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
ஆசிரியர் அய்யா அவர்களை பலமுறை சந்தித் துள்ளேன். ‘விடுதலை’ ஞாயிறு மலரில், “ஆண்களைப் போலவே பெண்களும் ‘கிராப்’ வெட்டிக் கொண் டால் ரூபாய் 500 பரிசு தருவதாகப் பெரியார் அறிவித்தார். அதேபோல நான் முடிவெட்டிக் கொண்டால் 500 ரூபாய் தருவீர்களா?” என்று கேள்வி கேட்டிருந்தேன். “இப்போது எல்லோருமே வெட்டிக் கொள்ளும் அளவு நடைமுறைக்கு வந்து விட்டது” என ஆசிரியர் அவர்கள் பதில் அளித்திருந்தார்கள்.
மற்றுமொரு முக்கியமான மலரும் நினைவுகள் இருக்கிறது. ஆசிரியர் அவர்கள் திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அயோத்தியா பட்டணம் வழியாக வந்தார்கள். அய்யா முனுசாமி, கடவுள் இல்லை சிவக்குமார் ஆகியோர் மூலம் இந்தத் தகவல் கிடைத்தது.
அந்தச் சமயத்தில் சிறியதாக வீடு ஒன்றை நான் கட்டியிருந்தேன். அந்த வீட்டிற்கு ஆசிரியர் வந்தால் நன்றாக இருக்குமே என நான் தோழர்களிடம் கூறினேன். ஆனால், ஆசிரியரிடம் எப்படி தகவல் கூறுவது? நேரம் இருக்குமா? வாய்ப்பு இருக்குமா? என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் ஆத்தூர் அண்ணாதுரை அவர்கள் ஒரு யோசனை தந்தார்கள். “அய்யா வாகனம் கடக்கும் போது, நாம் அனைவரும் ஒரு இடத்தில் நின்று ‘பெரியார் வாழ்க!’ என முழக்கம் இடுவோம் என்று கூறினார். அதேபோல செய்த போது வாகனம் நின்றுவிட்டது.
ஆசிரியர் அவர்கள், “என்ன இங்கே நிற்கிறீர்கள்?” என்று கேட்டபோது, புது வீடு கட்டிய விவரம், அய்யா வர வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்தோம். அய்யா உடனே வந்துவிட்டார்கள். வீடு மிக அருகில்தான் இருந்தது. தோழர்கள் அனைவருக்கும் தேநீர், பிஸ்கட் கொடுத்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட
அற்புதமான பொன்னாள் அது!
நான் தனியாக, ஒரே ஆளாக, அந்தச் சிறிய வீட்டினைக் கட்டினேன். அதற்குப் “பெரியார் அறிவகம்” எனப் பெயர் வைத்தேன். ஆசிரியர் இந்தப் பக்கம் வரும்போது, எங்கள் இல்லத்தைத் திறக்க ஆசைப் பட்டேன். ஆனால், ஆசிரியர் அவர்களுக்குத் தொடர் பயணங்கள், நிகழ்ச்சிகள் இருந்ததால் வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் வேறொரு நிகழ்ச்சிக்காகச் சேலம் வந்த அருள்மொழி அவர்கள் மூலம் இல்லத் திறப்பை எளிதாகச் செய்தோம். இந்த என் முயற்சிக்கு சேலம் மாவட்டத் தோழர்கள் அனைவரும் பெரும் உதவியாய் இருந்தார்கள். அப்படியான அந்த வீட்டிற்குத்தான் 15 ஆண்டுகள் கடந்த நிலையில், எங்கள் “வாழ்வியல் தலைவர்” வந்து சென்றார்! அந்தத் தலைவரின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் இரத்ததானம் செய்து வருகிறோம். உடல்கொடை வழங்கவும் பதிவு செய்து வைத்துள்ளேன்.
நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கு பெற முடியவில்லை என்றாலும், தந்தை பெரியார், ஆசிரியர், திராவிடர் கழகம் எப்போதும் சிந்தனையில் நிரம்பியே இருக்கின்றன” என கமலம் தம் கொள்கை வாழ்வியல் குறித்துப் பகிர்ந்து கொண்டார்!