மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ள புதுவகைச் சாமியார் பங்காரோக் பாபா (மின்விசிறியை நிறுத்தும் சாமியார்).
கருநாடக – மகாராட்டிரா எல்லை யில் உள்ள பெல்காம் பகுதியில் உள்ள இந்த சாமியார் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களுக்கு எப்படி ஆசி கொடுப்பார் என்றால், ஓடிக்கொண்டு இருக்கும் மின் விசிறியைக் கையால் நிறுத்துவார்.
அதுவும் அவரது உதவியாளர்கள் அவரை மின்விசிறி இருக்கும் உயரம் வரை தூக்குவார்கள். அவர் கைகளால் மின் விசிறியை நிறுத்திய பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
இதற்கும் ஒரு கதை விடுகிறார்கள். இவர் சாயிபாபா அருள் பெற்றவராம். அவர் காற்றை நிறுத்தும் சக்தியை இவருக்கு வழங்கினாராம்.
காற்றை நிறுத்தும் சக்தியை மக்களுக்கு எப்படிக் காட்டுவது என்று சாயிபாபாவிடம் கேட்டபோது, நீ ஓடும் மின்விசிறியை நிறுத்தி மக்களிடம் காட்டு.
அதன் மூலம் மக்கள் எனது சக்தியை உணர்ந்துகொள்வார்கள். அப்படி உணர்ந்து கொண்டதும் எனது ஆசியை அவர்களுக்கு வழங்கு. அவர்களின் இன்னல்கள் தீர்ந்துவிடும் என்று கூறினாராம். ஆகவே, இவர் அதைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறாராம்.
மகாராட்டிராவில் இருந்து நிறைய பக்தர்கள் பங்காரோக் பாபாவை தரிசிக்க வருகிறார்களாம்.
மாற்றுத் திறனாளியான பங்காரோக் பாபாவிற்கு குடும்பமும் உள்ளது. முதலில் அவரது பிள்ளைகள் வெளியே கூலி வேலைக்குச் சென்றுகொண்டு இருந்தனர்.
ஆனால், தற்போது வீட்டிலேயே பக்தி வியாபாரம் நன்றாக நடப்பதால் ஆசிவாங்க வருபவர்களிடம் வசூல் செய்யும் வேலையை செய்யத் துவங்கி விட்டனர்.