இந்திய மக்களாட்சியை கறையான் போல் அரித்து நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறது குடும்பக்கட்சி (பரிவார்வாத்) என்று மோடி பேசுகிறார். அதுவும் ஆகஸ்ட் 15, 2022 அன்று செங்கோட்டையில்.
இதுமட்டுமல்ல. அவர் தொடர்ந்து மேடைக்கு மேடை தேர்தல் காலங்களில் எல்லாம் குடும்ப அரசியல் – குடும்ப அரசியல் என்ற பஜனையை பாடுவதற்கு மறக்கமாட்டார்.
அவரது குடும்ப அரசியல் குறித்த நடுக்க வியாதிக்கு முக்கியக் காரணம் இரண்டு பேர். ஒருவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொருவர் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.
வாரிசுகள் யார்?
இவருக்கு தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் கூட பெரிதாக கண்களுக்குப் படவில்லை. லல்லு பிரசாத்தின் மகனும் பீகார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குறித்து பீகார் தேர்தலின் போது மட்டுமே மோடி பேசுவார். அதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே பேசுவார். ஆனால், தென் கோடியில் உள்ள தமிழ்நாட்டின் வலுவான திராவிட கொள்கைப்பிடிப்பு கொண்ட கட்சியில் தன்னுடைய பணியால் இந்தியாவில் உள்ள அத்தனை ஆட்சியாளர்களையும் வியந்து பார்க்கவைக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் – மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் தன்னை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்திக்கொண்டு வரும் ராகுல் காந்தியும்தான் மோடியின் தூக்கத்தை கெடுக்கும் வாரிசுகள். இதை அவரே மறைமுகமாகக் கூறியுள்ளார்.
அரியானா தேர்தலா?குடும்ப அரசியல் நாட்டைக் கெடுக்கிறது, டில்லியிலும் தமிழ்நாட்டிலும், வட கோடி ஜம்மு காஷ்மீர் தேர்தலா? குடும்ப அரசியல் மாநிலத்தின் வளர்ச்சியைத் தின்றுவிடும் – தமிழ்நாட்டிலும் டில்லியிலும் இந்த குடும்ப அரசியல் உள்ளது. என்று கிடுகிடுத்துக்கொண்டே கூறுவார். அந்த அளவிற்கு அவருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளனர் உதயநிதி ஸ்டாலும், ராகுல்காந்தியும்.
ஆனால், மோடியோ அவரது கட்சியில் தொடர்ந்து வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் குறித்து மறந்தும் பேசுவதே இல்லை. மோடியின் அகராதியில் வாரிசு என்பது உதயநிதி ஸ்டாலினும், ராகுல் காந்தியும் மட்டுமே.
ஜார்க்கண்ட்
பா.ஜ.க. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதில் கட்சி மேலும் ஒன்றைச் செய்தது. ஜார்க்கண்ட் வரலாற்றில் எந்தெந்த முதலமைச்சர்கள் இருந்தார்களோ, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இம்முறை பா.ஜ.க.வில் போட்டியிடுகிறார்கள்.
ஏழு முதலமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. முதலமைச்சர்களைத் தவிர மற்ற தலைவர்களின் மகன்கள், மகள்கள் அல்லது உறவினர்களுக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலிலும் இதேபோல் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 2024இல் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் 81 தொகுதிகளில் 68 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
மோடிக்குத் தெரியுமா?
மோடிக்குத் தெரியுமா இந்தப் பட்டியலில் யார் யார் பெயர்கள் உள்ளது என்று? இதோ: பாஜக சார்பில் மேனாள் முதலமைச்சர்களான சம்பாய் சோரன், ரகுவர் தாஸ், அர்ஜுன் முண்டா மற்றும் மது கோடாவின் மகன் – மருமகள் மற்றும் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேனாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியிலும், சம்பாய் சோரன் சராய்கேலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மேனாள் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டா போட்கா சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ரகுவர் தாஸின் மருமகள் பூர்ணிமா ஜாம்ஷெட்பூர் கிழக்கில் போட்டியிடுகிறார்.
ஒடிசா ஆளுநரும், ஜார்கண்டின் மேனாள் முதலமைச்சருமான ரகுவர் தாஸின் மருமகள் பூர்ணிமா தாஸ் சாஹூ, பாஜக சார்பில் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் ரகுவர் தாஸ் 1995, 2000, 2005, 2009 மற்றும் 2014இல் வெற்றி பெற்றுள்ளார்.
மேனாள் முதலமைச்சரும், ஜேஎம்எம்மை விட்டு பாஜகவில் இணைந்தவருமான சம்பாய் சோரன், தனது மகன் பாபுலால் சோரனுக்கும் வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார். சம்பாய் சோரன் சராய்கேலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இந்த தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் பாபுலால் சோரன் காட்சிலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். காட்சிலாவில் தற்போது ஜேஎம்எம்மின் ராம்தாஸ் சோரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
பாஜக மாநில தலைவர் பாபுலால் மராண்டி மீண்டும் தன்வார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2019 சட்டமன்றத் தேர்தலிலும் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியில் வெற்றி பெற்றார். இதற்கு முன் பாபுலால் மராண்டி ராம்கர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். 2000இல் ஜார்க்கண்டின் முதல் முதலமைச்சரான பின், பாபுலால் மராண்டி 2001இல் ராம்கர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
குடும்பமே…
முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் அண்ணி மற்றும் ஜேஎம்எம் தலைவர் சிபு சோரனின் மூத்த மருமகள் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் பாஜகவில் இணைந்ததால் அவரும் பாஜகவில் போட்டியிடுகிறார்.
இதற்கு முன் சீதா சோரன் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவில் போட்டியிட்டார். ஆனால், தும்காவில் ஜேஎம்எம்மின் நலின் சோரனிடம் தோல்வியடைந்தார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை (ஜேஎம்எம்) விட்டு பாஜகவில் இணைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் லோபின் ஹெம்ப்ரமுக்கு பாஜக போரியோ சட்டமன்றத் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது இவரது தந்தை ஜார்கண்ட் முக்திமோர்ச்சா சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களவைத் தேர்தலில் லோபின் ஹெம்ப்ரம் ஜேஎம்எம் வேட்பாளருக்கு எதிராக ராஜ்மஹால் தொகுதியில் போட்டியிட்டார், அதன் பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டமன்ற தலைவரின் தீர்ப்பாயமும் லோபின் ஹெம்ப்ரமின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தது.
தும்கா சட்டமன்றத் தொகுதியில் பாஜக இந்த ஆண்டு சுனில் சோரனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் முன்னதாக பாஜகவின் லூயிஸ் மராண்டி ஹேமந்த் சோரனிடம் தோல்வியடைந்தார்.
சிமரியாவின் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மருமகன் உஜ்வல் தாஸ் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். ஜமுவாவில் டாக்டர் மஞ்சு தேவி மற்றும் கான்கேயில் ஜீது சரண் தாஸ் வேட்பாளராக்கப்பட்டுள்ளனர் இவர்களது கணவர்கள் பாஜகவில் பிரபலமான முகங்கள்.
பாக்மாரா சட்டமன்ற உறுப்பினர் துல்லு மஹ்தோ எம்பியான பிறகு அவரது சகோதரர் சத்ருக்னா வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
ஹஜாரிபாக் எம்பி மனீஷ் ஜெய்ஸ்வாலின் உறவினர் பிரதீப் பிரசாத் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதற்கான தனது சொந்த சூத்திரத்தை வகுத்துள்ளது. தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நிர்ணயித் துள்ளது. தனக்கும் மற்றவர்களுக்கும் விதிமுறை களை உருவாக்கியுள்ளது. இதன்படி, மற்றவர் களுக்கு தடை செய்யப்பட்ட விடயங்கள் பாஜகவுக்கு அத்தியா வசியமானவையாகவும் புனிதமானவையாகவும் மாறி விடுகின்றன. பாஜக தான் கூறும் கொள்கை கோட்பாடுகளின்படி, சொல்வதற்கு நேர் எதிராக செயல்படுகிறது.
அதாவது, பெரிய பெரிய இலட்சியவாத பேச்சுகளைப் பேச வேண்டும், ஆனால் நடைமுறையில் அதனை தூக்கி வீசிவிட்டு மோசடி அரசியலும் செய்யவேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 20 அன்று தனது தொகுதியான வாரணாசியில் இருந்தபோது, குடும்ப அரசியல் நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் என்ற தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
மகாராட்டிரா
இதை முடிவுக்கு கொண்டுவர, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவர உறுதியேற்றார். பிரதமர் இந்த உரையை நிகழ்த்தி தனது சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அதே நேரத்தில், மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
99 பேர் கொண்ட பட்டியலில் வெறும் 07 பேர் மட்டுமே புதியவர்கள். இவர்களும் கூட அரசியல் சாரா பின்னணி கொண்டவர்கள் ஆக மக்ராட்டிராவில் அனைவருமே வாரிசுகள் தான் தலைவர்களும் அரசியல் பின்னணி கொண்டவர்களுமே.
சமீபத்தில் பாஜகவிற்குத் தாவிய காங்கிரஸ் மேனாள் முதலமைச்சர் அசோக் சவானின் மகள், மற்றொருவர் சிறையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ கணபத் காயக்வாடின் மனைவி.
மும்பை கட்சித் தலைவர் ஆஷிஷ் ஷெலார் மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு மேனாள் முதலமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான நாராயண் ராணேவின் மகனுக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
மேனாள் எம்.பி ஹரிபாவு ஜவாலேவின் மகனும் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். மேனாள் ஒன்றிய அமைச்சர் ராவ் சாகேப் தன்வேவின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகாராட்டிராவில் மேனாள் முதலமைச்சர் அசோக் சவானின் மகள் சிறீஜயா சவானுக்கு தந்தையின் தொகுதியான போகர் (நாந்தேட்)இல் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. மேனாள் ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணேவின் மகன் நிதேஷ் ராணேவுக்கு கங்காவலி (சிந்துதுர்க்)இல் வேட்பாளராக்கப்பட்டார். மாநிலங்களவை எம்.பி தனஞ்சய் மஹாடிக்கின் தம்பி அமல் மஹாடிக் கொல்ஹாபூர் தெற்கில் களமிறக்கப்பட்டுள்ளார். மேனாள் முதலமைச்சர் சிவாஜிராவ் பாட்டில் நிலங்கேகரின் பேரன் சம்பாஜி பாட்டில் நிலங்கேகருக்கு நிலங்கா தொகுதியில் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் செலாரின் சகோதரர் வினோத் செலாருக்கு மலாட் மேற்கிலும், ஆஷிஷ் செலாருக்கு பாந்த்ரா மேற்கிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேனாள் ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வேவின் மகன் சந்தோஷ் தன்வேவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எம்.எல்.ஏ கணபத் கையக்வாடின் மனைவி சுலபா கையக்வாடும், மேனாள் எம்.பி அனில் சிரோலேவின் மகன் சித்தார்த்தும் வேட்பாளர்களாக உள்ளனர்.
தலைவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு
மேனாள் எம்.பி அனில் ஷிரோலேவின் மகன் சித்தார்த் ஷிரோலே புனேவின் சிவாஜிநகர் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிஞ்ச்வாட்டில், மறைந்த எம்.எல்.ஏ லக்ஷ்மண் ஜகதாப்பின் மனைவி அஸ்வினி ஜகதாப்பின் இடத்தில் அவரது மைத்துனர் சங்கர் ஜகதாப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜல்கானின் ராவரில் அமோல் ஜாவ்லே மற்றும் அஹ்லியாநகரின் சிர்கோண்டாவில் பிரதிபா பாச்பூதே ஆகியோரும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமோல் மறைந்த பாஜக எம்.எல்.ஏ ஹரிபாவு ஜாவ்லேவின் மகன் ஆவார், பிரதிபா பாஜக எம்.எல்.ஏ பாபன்ராவ் பாச்பூதேவின் மனைவி ஆவார்.
மொத்தத்தில் தலைவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், சகோதரர்கள் அல்லது மனைவி அல்லது நெருங்கிய கூட்டாளிகளே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் பாஜகவோ குடும்ப அரசியலை காண்பதில்லை.
அரியானாவில் மேனாள் முதலமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்களாக்கப்பட்டனர். இதுதான் அரசியல் சாரா பின்னணி கொண்ட இளைஞர்களை
அரசியலில் முன்னேற்றுவதற்கான சூத்திரமா?
மேனாள் பாஜக அமைச்சரும், மேனாள் முதலமைச் சருமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகரின் பேரன் சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் லாதூர் மாவட்டத்தின் நிலங்கா தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் தனஞ்ஜய் மஹாடிக்கின் தம்பி அமல் மஹாடிக், 2014இல் வென்ற கொல்ஹாபூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.
பாஜகவின் மும்பை தலைவரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான ஆஷிஷ் ஷேலாரின் சகோதரர், முன்னாள் கவுன்சிலர் வினோத் ஷேலாருக்கு மலாட் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேனாள் அமைச்சர் பிரகாஷ் அவாடேவின் மகன் ராகுல் அவாடே இச்சல்கரஞ்சியில் போட்டியிடுகிறார் சிவாஜிராவ் கர்டிலே (ராகுரி), மேக்னா போர்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இம்முறை வாரிசுகள் மட்டுமின்றி தூரத்து உறவினர்களையும் களத்தில் இறக்கி உள்ளனர்.