சென்னை, நவ.1- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டி ருப்பதாவது:-
2011 மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின்படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரியவந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தினால் பரவலாகப் பலர் இதில் பயன் பெற முடியும்.
தற்போதைய திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.
மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப்புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மூத்த குடிமக்களிலேயே மாற்றுத்திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5,177 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.