வேற்றுமைகளை அப்புறப்படுத்தி, ஒற்றுமையை உருவாக்கக்கூடிய ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்று சொன்னால்,
அடிகளாருடைய நூற்றாண்டு விழாவை – ஜாதி ஒழிப்பு,
மூடநம்பிக்கை ஒழிப்புத் திருவிழாவாக நாடெல்லாம் நடத்தவேண்டும்!
அடிகளார் ஒரு கலங்கரை வெளிச்சம் – அந்தக் கலங்கரை வெளிச்சத்தில்தான் நம்முடைய கப்பல் பயணமாகவேண்டும்!
காரைக்குடி, நவ.1 வேற்றுமைகளை அப்புறப்படுத்தி, ஒற்றுமையை உருவாக்கக்கூடிய ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்று சொன்னால், அடிகளாருடைய நூற்றாண்டு விழாவை – ஜாதி ஒழிப்புத் திருவிழாவாக – மூடநம்பிக்கை ஒழிப்புத் திருவிழாவாக நாடெல்லாம் நடத்தவேண்டும். அதற்கு அடிகளார் ஒரு கலங்கரை வெளிச்சம். அந்தக் கலங்கரை வெளிச்சத்தில்தான் நம்முடைய கப்பல் பயணமாகவேண்டும். நம்முடைய கவனம் அந்தப் பணியில் இன்னும் தீவிரமாகவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா
கடந்த 31.8.2024 அன்று காரைக்குடியில் நடை பெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
‘விடுதலை’யில் 30.10.2024 அன்று வெளிவந்த சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
தந்தை பெரியார் பேசுகிறார்:
‘‘தமிழர்களின் நலன் கருதி, தமிழர் ‘விடுதலை’யின் புரட்சிக் கருத்துகள், புதுமைக் கருத்துகளை வரவேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவதில்லை” என்று.
தமிழர்களின் நலன்கருதி நடக்கக்கூடிய ‘விடுதலை’யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவேண்டும்!
அடிகளார் பேசுகிறார் கேளுங்கள்:
‘‘தலைவர் பெரியார் அவர்கள்தான், துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க இந்தப் பத்திரிகையைத் தொடங்கினார்கள். மேல்மட்டத்தில் ‘விடுதலை’யின் புரட்சிக் கருத்துகள், புதுமைக் கருத்துகளை வரவேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவதில்லை, விரும்ப மாட்டார்கள். அடிமட்டத்தில் உள்ள வர்களாவது வரவேற்கின்றார்களா என்றால், அவர்கள் அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல்மட்டத்திற்கும், அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நலன்கருதி நடக்கக் கூடிய ‘விடுதலை’யினை தமி ழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவேண்டும்.
விடுதலையை வாங்கிப் படிப்பது, தமிழர்களின் ஒவ்வொருவரின் கடமையாகக் கருதவேண்டும்.
‘விடுதலை’ தமிழரது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும்!
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், ‘விடுதலை’ தமிழரது ஒவ்வொரு வீட்டி லும் இருக்கவேண்டும்” என்று சொல்லி அன்றைக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் உற்சாகப்படுத்தினார்.
இன்றைக்கு உலகம் முழுவதும் இந்த ‘விடுதலை’ சென்று கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு அடிகளார் அவர்களுடைய ஆசை, வெறும் ஆசையாகப் போய்விட வில்லை; நடைமுறைக்கு வந்திருக்கக் கூடிய வாய்ப்பாக இருக்கிறது.
அடிகளார் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் எப்படியெல்லாம் மதித்தார் என்பதற்குப் வேறு அரிய நிகழ்வுகள் உள்ளன.
ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின்போது கேட்டார், ஜாதி எதற்காக இருக்கவேண்டும்? சமுதாயத்தில் சமத்துவம் இருக்கவேண்டாமா? என்றார்.
பிறக்கும்பொழுது ஒரு மனிதன் தானாகவும் பிறக்க வில்லை தனியாகவும் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட மனிதனுக்குள்ளே எதற்காக பேதம் இருக்கவேண்டும்?
நாயைக் கொஞ்சுகிறான், ஆனால், உழைக்கின்ற நம்முடைய சகோதரனை எட்டி நில், தொடாதே, கிட்டே வராதே, பாராதே, நெருங்காதே என்று சொல்லுகிறானே!
அடிகளார் அவர்கள் ஜாதி ஒழிப்பை மேடையில் பேசிவிட்டு மட்டும் செல்லவில்லை. இன்றைய அடிகளாரும் அப்படித்தான்.
நடைமுறையில், செயலுக்கு என்று வருகின்ற நேரத்தில், தடம் மாறுகின்றவர்கள் உண்டு!
பேசலாம், இன்னும் சிலர் எழுதலாம். ஆனால், நடை முறையில், செயலுக்கு என்று வருகின்ற நேரத்தில், தடம் மாறுகின்றவர்கள் உண்டு. திராவிடர் கழகம் ஏன் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை இங்கே கொண்டாடுகிறது என்று சொல்லவேண்டுமானால், ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
‘‘மண்டைக்காடு அம்மன் வரலாறும் – வருணாசிரம ஆக்கிரமிப்பும்!’’
‘‘மண்டைக்காடு அம்மன் வரலாறும் – வருணாசிரம ஆக்கிரமிப்பும்” என்ற தலைப்பில் உள்ள புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பர் குமரேசன் அவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரண்டு நாள்களுக்கு முன்புதான் இந்தப் புத்தகம் என்னுடைய கைக்குக் கிடைத்தது.
மண்டைக் காட்டில் கலவரம் நடைபெற்றது எல்லாம் உங்களுக்குத் தெரியும். அப்பொழுது அடிக ளார் அவர்கள், மடத்திற்குள் இல்லாமல், கலவரம் நடைபெற்ற இடத்திற்கே நேரில் சென்று, ஜாதியை எதிர்த்துப் பேசி, அங்கே இருக்கின்றவர்களை ஒருங்கி ணைக்கக்கூடிய பணியை செய்தார்.
மொழிப் பிரச்சினைக்காக எப்படி அவர்கள் களத்தில் இறங்கிப் போராடினார்களோ, அதுபோல, மண்டைக் காட்டில் கலவரம் நடைபெற்றபொழுது, களத்திற்குச் சென்றார்.
இதைவிட பெரிய பெரிய மடங்கள் எல்லாம்கூட இருக்கலாம்; நாங்கள்தான் பிரதமரையே உருவாக்கு கிறோம் என்று சொல்லக்கூடிய மடங்கள்கூட இருக்க லாம்.
ஆனால், அந்த மடத்திலிருந்து யாராவது களத்திற்கு வந்திருக்கிறார்களா?
யாருக்கும் ஒரு சிக்கலையும் உருவாக்கக் கூடாது என்று மிகவும் கவனத்துடன் பேசுகின்றோம்!
இன்னுங்கேட்டால், இந்த மடத்திற்கு வந்திருக்கின்ற நாங்கள், அடிகளாரின் பக்கத்தில் அமர்கிறோமே! ஆனால், பெரிய பெரிய மடங்கள் என்று சொல்லப்படுகின்ற இடங்களில் இந்நிலை போன்று உண்டா?
அடிகளார் அவர்களுக்கு சங்கடம் வரக்கூடாது என்பதற்காகக் கவனத்துடன் பேசுகிறேன். இதுவே திராவிடர் கழக மேடையாக இருந்திருந்தால், வேறு விதமாகப் பேசியிருப்போம். அதனால்தான், நம்முடைய தென்னவன் அவர்கள்கூட மிக கவனத்துடன் பேசினார். அமைச்சரும் இந்த மேடையில் இருக்கிறார். ஆகவே, யாருக்கும் எந்த ஒரு சிக்கலையும் உருவாக்கக் கூடாது என்று மிகவும் கவனத்துடன் பேசுகின்றோம்.
இந்த மேடையில், எல்லோரும் சமத்துவமாக அமர்ந்தி ருக்கின்றோமே, இது ஒன்றே வேறு எந்த மடமும் செய்யாத ஒரு புரட்சி. இது சாதாரண புரட்சியல்ல – நாற்காலி புரட்சி.
மற்ற மடங்களுக்குச் சென்றால், சுப்பிரமணிய சாமியாக இருந்தால், நாற்காலியில் உட்காருவார். ஒன்றிய இணையமைச்சராக இருந்த பொன்.ராதா கிருஷ்ணனாக இருந்தால், கீழேதான் உட்காரவேண்டும்; அண்ணாமலையாக இருந்தால், சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இதற்குமேல் போகவேண்டாம், இந்த இடம் அதற்குரிய இடமில்லை என்பதால். ஏனென்றால், இவர்களை நான் இக்கட்டில் தள்ள விரும்பவில்லை.
சமூக நல்லிணக்கத்தை உருவாக்கப் பாடுபட்டவர் அடிகளார்!
தவத்திரு குன்றக்குடி அவர்கள், மக்களுக்காக எப்பொழுதும் களமாடுபவர். ஒருமுறை அப்படி களமிறங்கிய செய்தியைச் சொல்கிறேன். மண்டைக்காட்டில் ஒற்றுமையாக இருந்த சமுதாயம். மீனவ சமுதாய மக்கள், கிறித்துவ சமுதாய மக்கள் இருந்தனர். அங்கே ஜாதிப் பிரச்சினை ஏற்பட்டபொழுது, நம்முடைய அடிகளார் அவர்கள் அங்கே சென்று, ஜாதி எதிர்ப்புப் பிரச்சாரத்தைச் செய்து, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கப் பாடுபட்டார்.
அதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்கள், சில அரசியல் பிரமுகர்களைக் கொண்டு அமைதிக் குழுவை அமைத்தனர். அந்தக் குழுவில், குன்றக்குடி அடிகளார், பாலபிரஜாபதி அடிகளார், பேராசிரியர் ஆரோக்கியசாமி, முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் வழக்குரைஞர் அகமதுகான், சாகித்திய அகடாமி விருது பெற்ற பொன்னீலன் போன்றவர்களும், அமைதியை விரும்பும் பல பிரமுகர்களும் இணைந்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, மக்களிடம் பேசி, அமைதியை நிலைநாட்டினார்கள்.
மீன் விற்கத் தடை செய்த இடத்தில், மீனவர்களுக்கு ஆதரவாக, கையில் மீனைத் தூக்கி ஏலமிட்டவர் அடிகளார்!
ஈத்தா மொழியில், மீன் விற்கக்கூடாது என்று சிலர் தடை விதித்தனர். அவ்விடத்தில், குன்றக்குடி அடிகளார், கையில் மீனைத் தூக்கி ஏலமிட்டார். ஏலமிட்டு கூவி மீன் விற்ற வரலாறும் உண்டு.
அடிகளார் அவர்கள், ஜாதி ஒழியவேண்டும் என்ப தற்காக, மக்கள் ஒன்றுபடவேண்டும்; உலகம் ஒரு குலமாகவேண்டும். அனைவரும் உறவினர், ஒன்றே குலம் என்று காட்டுவதற்காக எந்த அளவிற்கு இறங்கிப் பணியாற்றினார்கள் பாருங்கள்; போலி கவுரவத்தைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை; எதைச் செய்யவேண்டுமோ, அதைச் செய்தார். அதுதான் அவருடைய சிறப்பு.
எனவேதான், அவர் ஒரு புரட்சித் துறவி. முன்னோடியாக இருந்தவர் அவர். அப்படிப்பட்டவருக்குத்தான் நாங்கள் நூற்றாண்டு விழாவினை நடத்துகின்றோம்.
உருவத்தால் அய்யா மறைந்தார் என்றவுடன், அடிகளார் அவர்கள் எவ்வளவு சங்கடப்பட்டார்கள் என்பது எங்களுக்கெல்லாம் தெரியும்.
தேம்பித் தேம்பி ஒரு சிறு குழந்தையைப் போன்று அழுதார் அடிகளார்!
தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகு, முதன்முறையாக பெரியார் திடலுக்குள் வருகிறார். தந்தை பெரியார் அமர்ந்திருந்த கட்டிலில், பெரியாரின் உருவத்தை கட் அவுட் செய்து வைத்திருக்கிறோம். அன்னை மணியம்மையாரைப் பார்த்தும், எங்களைப் போன்றவர்களைப் பார்த்தும் ஆறுதல் சொல்லுவதற்காக அங்கே வந்த நேரத்தில், அந்தக் காட்சி இன்றைக்கும் என்னுடைய கண்களில் அப்படியே நினைவில் நிற்கிறது. அது எப்பொழுதும் மறக்காது. அவருடைய கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது; தேம்பித் தேம்பி ஒரு சிறு குழந்தையைப் போன்று அழுதார் அடிகளார் அவர்கள்.
மடத்தின் சம்பிரதாயப்படி, யாராவது இறந்து போனார்கள் என்றால், அங்கே போகக்கூடாது என்று இருந்தது. ஆனால், நம்முடைய அடிகளார் அவர்கள், அதை உடைத்துக் காட்டினார்.
வேதனைப்பட்டவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால், அதுதான் மனிதம்.
‘‘கடவுளை மற, மனிதனை நினை” என்பதுதான் மனிதம்.
‘‘அடிகளாருக்கு இங்கே வந்தவுடன், குளிர் விட்டுப் போச்சும்மா!’’
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய மாநாட்டிற்குச் சென்றிருந்தோம். அம்மாநாட்டில் ஆயிரம் பேருக்குமேல் கூடியிருந்தனர். அதில் கலந்து கொள்வதற்காக அடிகளார் அவர்களும், நீதிபதி வேணுகோபால் அவர்களும் வந்திருந்தனர். அங்கே வரும்பொழுதுகூட, அடிகளார் அவர்கள் தன்னுடைய உருவத்தை மாற்றவில்லை. சட்டை அணியாமல், மேலே துண்டை போட்டுக்கொண்டு வந்தார்.
அதைப் பார்த்த என்னுடைய துணைவியார், ‘‘அடிகளார் அவர்களே, இங்கே கடுங்குளிராயிற்றே, உடல்நிலை பாதிக்குமே; ஒரு கம்பளியையாவது போட்டுக்கொள்ளலாமே” என்றார்.
அடிகளாரிடம் நான் ஒரு செல்லப் பிள்ளை போன்றவன்தான். அப்பொழுது வேடிக்கையாக நான் சொன்னேன், ‘‘அடிகளாருக்கு இங்கே வந்தவுடன், குளிர் விட்டுப் போச்சும்மா” என்றேன்.
அதைக் கேட்டவுடன், எல்லோரும் சிரித்தனர்.
அடிகளார்மீது வழக்குப் போட்ட நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் எந்த அளவிற்குக் கொதித்தெழுந்தார் என்பது இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
அடிகளாரை கைது செய்வதா? என்று கேட்டார். அதுகுறித்து கண்டனக் கணைகளை அறிக்கையாக எழுதினார் தந்தை பெரியார் அவர்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் அடிகளார்!
நம்முடைய சமுதாயத்திற்கு, மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்த சூழ்நிலையில், காலகட்டத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதற்காக ஒரு பக்கத்தில் நம்மு டைய அமைச்சர் பணியாற்றினார். இன்னொரு பக்கத்தில், நம்முடைய அடிகளார் அவர்கள் அந்தக் குழுவில் இருந்தார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்தாயிற்று. ஆனாலும், அது முழுமையடையவில்லை.
ஜாதிப் பாம்பை அடித்த தந்தை பெரியார்!
பெரியார் சொன்னார், ‘‘நான் ஜாதிப் பாம்பை அடிக்க வைக்கத்தில் தொடங்கினேன். அந்தப் பாம்பு ஒளிந்து ஒளிந்து எல்லா இடத்திற்கும் சென்றது. நானும் தொடர்ந்து அடித்துக்கொண்டே வந்தேன். கடைசியாக அந்த ஜாதிப் பாம்பு, கோவில் கருவறைக்குள் சென்று, பாதுகாப்பாக இருந்தது. ஆகவே, கருவறையில் இருக்கும் அதனை அடிக்கவேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் வேதனையும்- சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் சாதனையும்!
இதைத்தான் கலைஞர் அவர்களும் சொன்னார். ‘‘நான் பெரியாருக்கு அரசு மரியாதை செய்தேன். ஆனால், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லை” என்று வேதனைப்பட்டார்.
இன்றைய முதலமைச்சர் அவர்கள் பதவியேற்றவுடன், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தார்.
அதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்தவர்கள் இரண்டு பக்கமும் இருந்தனர். ஒரு பக்கம் நம்முடைய அடிகளார் இருந்தார். இன்னொரு பக்கம் இன்றைக்குக் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கக்கூடியவர், அன்றைக்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார்.
அடிகளாருடைய இலக்கு என்பது எப்பொழுதும் குறி தவறாது!
ஆகவேதான், அடிகளாருடைய பயணங்கள், அடிகளார் அவர்கள் களமாடிய நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றவையாகும். அடிகளாருடைய இலக்கு என்பது இருக்கிறதே, ஒருபோதும் அது குறி தவறாது. நாங்கள் ஒரு போதும் தோற்றுப் போகமாட்டோம்.
தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘என்னுடைய போராட்டங்கள் தோற்காது. வெற்றி வேண்டுமானால், கொஞ்சம் காலதாமதமாக வந்திருக்கலாம்” என்றார்.
ஆகவேதான், அந்த உணர்வுகளை நாடெலாம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்.
ஜாதி ஒழிந்த சமுதாயம் –
மூடநம்பிக்கை ஒழிந்த சமுதாயம் –
அடிகளார் ஒரு கலங்கரை வெளிச்சம் –
அந்தக் கலங்கரை வெளிச்சத்தில்தான் நம்முடைய கப்பல் பயணமாகவேண்டும்!
வேற்றுமைகளை அப்புறப்படுத்தி, ஒற்றுமையை உருவாக்கக்கூடிய ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்று சொன்னால், அதற்காகத்தான் அடிகளாருடைய நூற்றாண்டு விழாவை – ஜாதி ஒழிப்புத் திருவிழாவாக – நாடெலாம் மூடநம்பிக்கை ஒழிப்புத் திருவிழாவாக நடத்தவேண்டும். அதற்கு அடிகளார் ஒரு கலங்கரை வெளிச்சம். அந்தக் கலங்கரை வெளிச்சத்தில்தான் நம்முடைய கப்பல் பயணமாகவேண்டும். நம்முடைய கவனம் அந்தப் பணியில் இன்னும் தீவிரமாகவேண்டும். வழியில் பல இடையூறுகள் இருக்கலாம். அந்த வகையில்தான், இன்றைய நூற்றாண்டு தொடக்கவிழாவில், மழை பெய்தது; ஆனால், அதனால் நிகழ்ச்சி தடைபடவில்லை.
அடிகளாருக்குப் பிடித்த குறள், பெரியாருக்கும் பிடித்த குறம் எதுவென்றால்,
‘‘குடிசெய்வாருக் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்” (குறள் 1027)
நமக்குக் கிடைத்த ஒரு நல்ல அறிவாயுதம் அடிகளார்!
எங்களுக்குப் பருவம் இல்லை. கொளுத்தும் வெயிலானாலும், கொட்டும் மழையானாலும், வீசும் புயலானாலும் இந்தப் பயணம் நிற்காது; இந்தப் பயணம் தொடரும்! அதற்காகத்தான் நம்மை வேகப்படுத்திக் கொள்வதற்கு, விவேகப்படுத்திக் கொள்வதற்கு, நமக்குக் கிடைத்த ஒரு நல்ல அறிவாயுதம்தான் அடிகளார், அடிகளார், அடிகளார்!
அந்த அடிகளாருடைய பயணத்தை இந்த அடிகளார் தொடருகிறார்கள்.
எனவே, தொய்வில்லை, தொடர்ச்சி இருக்கிறது. தோல்வி இல்லை, வெற்றி உண்டு!
தமிழ்கூரும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி!
இந்நிகழ்விற்காக தங்களுடைய நேரத்தையும், அருமையான உழைப்பையும் தந்திருக்கின்ற அத்துணை பேருக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியை, திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழ்கூரும் நல்லுலகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க அடிகளார்!
வாழ்க பெரியார்!
வருக, அவர்கள் விரும்பிய ஜாதியற்ற சமுதாயம்!
சமதர்ம சமுதாயம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.