ஆரியர் – திராவிடர் கட்டுக்கதையா?
கவிஞர் கலி.பூங்குன்றன்
“பிராமணர்கள் மீதானால் வன்கொடுமை யாகாதா?” என்ற தலைப்பில் ‘தினமணி’யின் நடுப்பக்கத்தில் கட்டுரை ஒன்று அரங்கேற்றப் பட்டுள்ளது (30.10.2024).
எழுதியவர் யாராகவேணும் இருக்கட்டும். இதுபோல வேலைகளை ‘தினமணி’, ‘தினமலர்’, ‘துக்ளக்’ செய்வது வழமையானதாகும்.
துக்ளக்கில் நெல்லை ஜெயமணி பெயரால் வந்த கட்டுரை பற்றி அவரே போட்டு உடைத்ததுண்டு.
ஆசிரியர் என்றால் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் – இது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட உண்மை!
ஆனால் ‘தினமணி’ ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதனுக்கோ வயிற்றெரிச்சல்! இனி ‘துக்ளக்’ ஆசிரியர் திருவாளர் குருமூர்த்தியை ஆசிரியர் என்று அழைக்க வேண்டும் என்று எழுதியவர்தானே! (‘தினமணி’, 25.12.2016).
அது இருக்கட்டும்; யார் எழுதினால் என்ன? பிரச்சினைக்கு வருவோம்!
(1) ஆரிய – திராவிட இனவாதத்தை அம்பேத்கர் ஏற்கவில்லை இது ஒரு கட்டுக்கதை. இதைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்றார்; நிரூபிக்கப்படாத கோட்பாடு என்றார்.
(2) ஆரியர் – திராவிட இன வாதத்தைக் கிளப்பியவர்கள் அய்ரோப்பிய கிறிஸ்த வர்கள்தான்.
(3) சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் சமுதாயத்தின் பாரதிய பண்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக அந்தணர்கள் இருந்து வந்திருக்கின்றனர். திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே ஜாதிப் பிரிவு அந்தணர் மட்டுமே!
(4) பிராமணர்களின் தாய்மொழி தமிழ்.
(5) காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வெளியேறிய பின்பு தன்னை ஜஸ்டிஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
(6) பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி எனப் பல இடங்களில் எழுதப்பட்டன.
(7) பிராமணர்களின் பூணூல் அறுப்புப் போராட்டம், உச்சிக் குடுமி கத்தரிக்கப்பட்டது.
(8) நெற்றியில் இருந்த திருநீறு, திருமண் (நாமங்கள்) அழிக்கப்பட்டன.
(9) பிராமணர்களை இத்தகைய வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்கு பிராமணர்களுக்கான ஓர் இயக்கத்தை பிராமணர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை.
(10) யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு திராவிடர் கழகம் கைகோர்த்துக் கொள்ளும்.
(11) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஊறுகாய் மாமி என்றும், மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆரியன் என்றும் இனவெறுப்புப் பேசப்படுகிறது.
(12) பட்டியல் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை இழிவுபடுத்திப் பேசினால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல எந்த ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்திப் பேசினாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(13) பிராமணர்களை, அவர்களது பழக்க வழக்கங்களை, திருமண முறைகளைக் கேலி செய்வது, பெண்களை இழிவுபடுத்திப் பேசினாலும், அது சட்ட விரோதமானதும், தவறானதுமாகும்.
‘தினமணி’ ஒரு பக்கக் கட்டுரைக்குள் பொதிந்து கிடப்பவை இவை.
(1) ஆரிய – திராவிட இனம் பற்றி அண்ணல் அம்பேத்கர் பேசவில்லையா? இது ஒரு கட்டுக்கதை என்றாரா?
எங்கே சொன்னார்? ஆதாரம் என்ன என்பதை விளக்காதது ஏன்? ஏனெனில் ‘தினமணி’யின் கட்டுரை ஒரு கட்டுக்கதையே.
ஆனால் அம்பேத்கரின் கருத்து என்ன? இதோ அம்பேத்கர் பேசுகிறார்.
தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதற்குமான மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரைப் பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும்.
உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வட இந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு.
தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்கொண்டால், திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்; அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டதன் காரணமாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக் கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என்று ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, பக்கம்-95)
அண்ணல் அம்பேத்கரை திரித்து, தங்கள் கட்டுக்குள் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.
“நான் ஹிந்துவாகப் பிறந்தேன், ஆனால் ஹிந்து வாக சாகமாட்டேன்!” என்று ஏன் சொன்னார்? ஹிந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு 22 உறுதிமொழிகளை எடுத்து பல லட்சக்கணக்கான மக்களுடன் ஏன் புத்தம் தழுவினார்? என்பதையும் விளக்காதது ஏன்?
1927 டிசம்பர் 25 அன்று மகாராட்டிர மாநிலம் மகத் நகரில் கூடிய மாநாட்டில் தீர்மானித்து ஹிந்து மதத்தின் முக்கிய மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்தியது ஏன்?
அதே மனுஸ்மிருதி – 4.12.1927 அன்று குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் கொளுத்தப்பட்டது என்பதையும் நினைவூட்டுகிறோம்! ஆம், தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
“Annihilation of Caste” என்ற அண்ணல் அம்பேத்கரின் நூலைப் படித்ததுண்டா?
அந்நூலை இந்தியாவிலேயே தமிழில் மொழி பெயர்த்து “ஜாதியை ஒழிக்கும் வழி” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டவர் தந்தை பெரியார் என்பது தெரியுமா ‘தினமணி’க்கு?
(2) ஆரியர் – திராவிடர் என்பது அய்ரோப்பிய கிறிஸ்தவர்கள் கூறியது என்கிறதே தினமணி.
இது உண்மைதானா?
‘திராவிட பாண்டியன்’ எனும் பத்திரிகையை பாதிரியார் ஜான் ரத்தினமும், அயோத்திதாசர் அவர்களும் நடத்தினார் என்று இதே ‘தினமணி’ கட்டுரையில் இரண்டாவது பத்தியில் கூறப்பட்டுள்ளது.
இதைவிட அயோத்திதாசரைக் கொச்சைப்படுத்த முடியுமா? கிறிஸ்தவர்களின் தூண்டுதலால் ‘திராவிட பாண்டியனை’ அயோத்திதாசர் நடத்தினாரா?
இதே ‘தினமணி’யின் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமாகிய அய்ராவதம் மகாதேவன் அவர்கள், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று அறுதியிட்டுக் கூறியுள்ளாரே!
அவரை விட வைத்தியநாதய்யர்கள் மேதைகள் என்ற நினைப்பா?
இந்திய தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள ‘திராவிட’ என்பது – கிறிஸ்தவர்களின் தூண்டுதலால் இரவீந்திரநாத் தாகூர் எழுதியதாகச் சொல்லப் போகிறார்களா?
வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட காளையை (திராவிடர் நாகரிகம்) குதிரையாக (ஆரியர் நாகரிகம்) மார்பிங் பண்ணியதன் நோக்கம் – சூழ்ச்சி என்ன?
திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட திராவிடர்களிடமிருந்தே பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டனர். (ஜோஷி சந்தர்டப்ட் எழுதிய ‘இந்தியா அன்றும் இன்றும்’ நூல் பக்கம் 15).
“ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்”.
“ஆரியக் காவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”
இவை ஒன்றும் ஈரோட்டுச் சரக்கல்ல – ஆசிரியர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் கற்பனையல்ல!
சாட்சாத் சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ.,
எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” எனும் நூலில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் பக்கங்கள் 16 மற்றும் 17இல்.)
அய்யங்கார்களையே சாட்சிக்கு அழைத்து விட்டோம் – ‘தினமணி’ அய்யர் இவற்றிற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
அய்யங்கார்களையும் வெள்ளைக்காரர்களின் சதிக்கு ஆளானவர்கள் என்று சொல்லுவார்களோ!
திராவிடர் – ஆரியர் என்பதெல்லாம் கற்பனை என்று சொல்லும் ‘தினமணி’ வேதங்களையும் அந்த இடத்திற்கு இழுத்துச் செல்வார்களா?
“அக்னியே! எங்களை வறுமையில் வாட்டாதே! வீரப் புதல்வர்களை இன்மையில் சாய்க்காதே! வீரத்தின் மகனே பசுக்கள் இன்மையிலும் நிந்தையிலும் உட்படுத்தாதே! எங்கள் பகைவர்களான தஸ்யூக்கள், அரக்கர்கள், தெய்வ நிந்தர்களைச் பொசுக்கவும்” (ரிக் வேதம் 2601).
தஸ்யூக்கள், தாசர்கள் எனப்பட்டவர்கள் எல்லாம் திராவிடர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருந்ததை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். ஆரியர் – திராவிடர் போராட்டம் வேதகாலத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது என்பதை அறிவோடு சிந்தித்தால் அறிந்து கொள்ளலாம்.
“சோமக்குடியனான இந்திரனே! நீ, உனக்குச் சோமம் தராத – வேள்வியை விரும்பாத – தானம் செய்யாத தாசர்களின் குடியிருப்புகளைச் சிதறடித்துத் தரைமட்டமாக்கினாய்?” (ரிக் வேதம், 6359).
இப்படியே எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் கட்டுக்கதைகள், ஏற்கவில்லை என்று சொல்வார்களானால், வேதங்களைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவிக்கலாம் – வரவேற்போம்!
– வளரும்
அம்பேத்கர் பேசுகிறார்!
சமத்துவமின்மை மற்றும் பாரபட்ச தொல்லையால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்கள் ஒரு கட்டத்தில் – நாட்டின் அரசியல் ஜனநாயகக் ‘கட்டமைப்பையே தகர்த்து விடுவார்கள்’.
– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (மனித உரிமைக் கங்காணி), அக்டோபர் 2010, பக். 6.
கூறுவது ராஜாஜி!
தேவர்கள் – அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை.
– ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), திருவான்மியூர் உரை, 18.9.1953