அரியானா மாநிலம் குருகிராம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பஜனைப் பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது இதற்குக் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் அரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய காவலர் நாளில் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக குருகிராம் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறவிகள் சிலர் பஜனைப் பாடல்களை பாடினராம்! அப்போது காவல்துறை அதிகாரிகள் சிலர் துறவிகளின் பஜனைப் பாடல்களுக்குக் கைத்தட்டி ரசித்துப் பார்த்தனர். இந்த காட்சிப் பதிவு இணையத்தில் வெளியானதை அடுத்து இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது அரியானாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அனைத்துத் துறைகளையும் காவிமயமாக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒருபக்கம் பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகளை அடித்துக்கொலைசெய்யும் கொடூரம் அரியானா மாநிலத்தில் அதிகம் நடந்து வருகிறது. இதில் பசுப்பாதுகாவலர்களையும் காவல்துறையினர் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றுக்கு செல்கின்றனர். குற்றச்செயல்களுக்கு காவல்துறையினரே ஊக்கம் கொடுத்து வருகின்றனர். மற்ெறாரு பக்கம் வர்ணாசிரமம் தான் இந்தியாவின் கொள்கையாக இருக்கவேண்டும் என்று கூறிக்கொள்ளும் இஸ்கான் அமைப்பினரை தலைமைக்காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து பஜனைபாட அனுமதி அளித்து உயரதிகாரிகளும் அவர்களோடு சேர்ந்து பஜனை பாடுகிறார்கள்.
“அவசர தேவைக்கு 100க்கு அழைத்தால் காவல்துறையினர் பஜனைப் பாடலில் தீவிரமாக இருப்பார்கள். இப்படி காவல்துறையினருக்கு பஜனை நிகழ்ச்சி நடத்துவது அறிவியலுக்கு எதிரானது – மதச் சார்பின்மைக்கு எதிரானது – மூட நம்பிக்கையை அதிகரிக்கும் செயலும்” ஆகும்
ஜாதி பேதமற்று பணியாற்ற வேண்டிய காவல்துறையினர் நான்கு வருணங்களையும் நானே படைத்தேன்; அப்படி படைத்த என்னால்கூட அதை மாற்றி அமைக்க முடியாது என்றும், பெண்களும், சூத்திரர்களும், வைசியர்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றும் கூறும் பகவத் கீதையைப் பிரச்சாரம் செய்யும் இஸ்கான் அமைப்பினரை அழைத்து எல்லோருக்கும் பொதுவாகப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய காவல்துறையினர் பஜனை பாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், அது என்ன காவல் நிலையமா – பஜனைக் கூடமா?’ என்ற கேள்வி எழுகிறதே.
பிஜேபி ஆளும் மாநிலம் என்பதால், தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற நினைப்புப் போலும்!
அதுவும் மதச் சார்பற்ற அரசு அலுவலகத்தில் இந்தக் கேலிக் கூத்து அரங்கேறியுள்ளது என்றாலும் இன்னொரு முறையில் எதிர்ப்பும் – எதிர்வினையும் நடப்பது வரவேற்கத்தக்கது. மதச் சார்பற்ற கொள்கை உடைய ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் இதனைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெறும் வாக்கு அரசியலுக்கு மட்டுமான கூட்டணியாக இருக்கக் கூடாது.