இயற்கையானது பார்ப்பதற்கு அமைதியானதாகவும் அழகானதாகவும் இருக்கலாம். ஆனால், இங்கே ஒவ்வொரு நொடியும் ஒவ்வோர் உயிரினமும் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றன. ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்குள்ளும் உணவுக்கும், இனப் பெருக்கத்திற்கும் கடுமையான போட்டி நடக்கும்.
உதாரணமாக சிங்கங்களை எடுத்துக் கொள்ளலாம். சிங்கக் கூட்டத்திலே ஒரு குறிப்பிட்ட ஆண் சிங்கம்தலைமை ஏற்றுக் கொள்ளும். அது தன்னுடைய குட்டிகளை மட்டுமே வளர்த்து எடுக்கும். அதே கூட்டத்திற்கு வேறு ஓர் ஆண் சிங்கம் சண்டையிட்டுத் தலைமைப் பதவிக்கு வந்துவிட்டது என்றால், பழைய தலைவர் சிங்கத்தின் குட்டிகளைக் கொன்று விடும். தன்னுடைய வம்சம் மட்டுமே தழைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யும். இப்படியான போட்டிகள் விலங்குகளிடையே மட்டும் தான் இருக்கின்றன என்று நினைக்க வேண்டாம். தாவரங்களிடம் கூட உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தாவரங்களால் விலங்குகள் போல நகர முடியாது. இவை இனப்பெருக்கம் செய்வதற்காக மகரந்தச் சேர்க்கையை நம்பி இருக்கின்றன. ஒரு பூவிலே தேன் குடிக்க வருகின்ற பூச்சி, வண்டு அல்லது பறவையின் உடலில் மகரந்தத் துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அந்தப் பறவையோ, பூச்சியோ வேறு ஒரு பூவிற்குச் சென்று தேன் குடிக்கும்போது ஒட்டிய மகரந்தத் துகள்கள் அந்தப் பூவில் சேர்ந்து சூல் கொள்ளும். இப்படியாகப் பூவானது கனியாக மாறும்.
இந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட தாவரமானது தன்னுடைய மகரந்தங்கள் மட்டுமே வேறொரு தாவரத்துடைய பூக்களில் சேர்ந்து சூல் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறது. அதற்காக ஒரு தந்திரோபாயத்தைக் கை கொள்கிறது. அதாவது, பறவைகள் தங்களுடைய அலகைக் கொண்டு தேன் குடிக்கும் போது இந்தப் பூக்கள் மகரந்தங்களை வெடிக்கச் செய்கின்றன.
இந்த அதிர்ச்சியின் போது அந்தப் பூவின் மகரந்தத் துகள்கள் அதனுடைய அலகில் ஒட்டிக் கொள்ளும். இப்படி ஒட்டுவதற்காக மட்டும்தான் பூக்கள் வெடிக்கின்றன என்று நீண்ட காலம் விஞ்ஞானிகள் நினைத்துக் கொண்டிருந் தார்கள். ஆனால், ஹைபினியா மேக்ரந்தா (Hypenea macrantha) எனும் அந்தத் தாவரத்தின் பூக்களை ஆராய்ந்தபோது ஒரு புதிய உண்மை தெரியவந்தது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்டெல்லன்போஸ்ட்ச் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தாவரத்தின் பூக்கள் வெடிப்பதை ஒளிப்பதிவு செய்தார்கள். அதில் பூ வெடிப்பது தன்னுடைய மகரந்தத்தைப் பறவையின் அலகில் ஒட்ட வைப்பதற்காக மட்டு மல்ல, ஏற்கெனவே, ஒட்டிய பிற தாவரங்களுடைய மகரந்தங்களை நீக்குவதற்காகவும் தான் என்பது தெரிய வந்தது.
இவ்வாறு நீக்குவதன் வாயிலாக தன்னுடைய இனம் மட்டுமே விருத்தி ஆகும் படியாகச் செய்கின்றன. இது கிட்டத்தட்ட ஆண் சிங்கம் தன்னுடையது அல்லாத பிற குட்டிகளைக் கொல்வது போன்றது தான்.