விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-க்கு பதில் 2026இல் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டது.
முக்கியமான பணிகளுக்கான காலக் கெடுவை இஸ்ரோ அறிவித்துள்ளது. நிசார் – 2025, ககன்யான் – 2026, சந்திரயான் 4 – 2028 ஆகிய ஆண்டு களில் செயல்படுத்தப்படும். ககன்யான் மற்றும் சந்திரயான் ஆகிய இரண்டும் 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதனை தரையிறக்கும் தனது இலக்கை அடையும் வரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
ககன்யான் திட்டம், 28 டிசம்பர் 2018 அன்று ஒன்றிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போதைய வடிவமைப்புக்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ககன்யான் பயணத்தின் போது நுண் புவியீர்ப்பு விசை தொடர்பான நான்கு உயிரியல் மற்றும் இரண்டு இயற்பியல் அறிவியல் சோதனைகளை இஸ்ரோ மேற்கொள்ளும்.
ககன்யான் திட்டமானது, 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரை 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் பணிக்கு அனுப்புவதன் மூலம், இந்திய கடல் நீரில் தரையிறங்குவதன் மூலம், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதன் மூலம் மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டில் உள்ள நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவு சார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் கிடைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் ஒரு உகந்த உத்தி மூலம் நிறைவேற்றப் படுகிறது.
ககன்யான் பணிக்கான முன்-தேவைகள், பணியாளர்களை விண் வெளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான மனித மதிப்பிடப்பட்ட ஏவுகணை வாகனம், விண்வெளியில் பணியாளர்களுக்கு பூமி போன்ற சூழலை வழங்குவதற்கான வாழ்க்கை ஆதரவு அமைப்பு, பணியாளர்கள் அவசர காலத் தப்ப ஏற்பாடு மற்றும் பயிற்சிக்கான குழு மேலாண்மை அம்சங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
பணியாளர்களின் மீட்பு
மற்றும் மறுவாழ்வு
உண்மையான மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன் தொழில்நுட்பத் தயாரிப்பு நிலைகளை நிரூபிப்பதற்காக பல்வேறு முன்னோடி பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ‘டெமான்ஸ்ட்ரேட்டர்’ செய்முறைப் பணிகளில் ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் (அய்ஏடிடி), பேட் அபார்ட் டெஸ்ட் (பிஏடி) மற்றும் டெஸ்ட் வெஹிக்கிள் (டிவி) விமானங்கள் ஆகியவை அடங்கும். அனைத்து அமைப்புகளின் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் ஆளில்லா பணிக்கு முந்தைய ஆளில்லா பயணங்களில் நிரூபிக்கப்படும்.