தீபாவளியை இதுவரை தங்கள் வாழ்க்கையில் கொண்டாடியதே இல்லை, தீபாவளின்னா? என்ன என்று கேட்கும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள்.ஆம்! தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலக்கட்டு மலைக் கிராமத்தில் தான் இந்த கொண்டாட்டம் இல்லை. அடர்ந்த வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் மண் சாலையை கடந்தால் தான் அலக்கட்டு மலைக் கிராமத்தை அடைய முடியும். இங்கே பல தலைமுறைகளாக வசிக்கும் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தீபாவளியை இதுவரை கொண்டாடியதில்லை.
இந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இதே நடைமுறையை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள். இதனால் இவர்கள் தீபாவளி அன்று புத்தாடை அணிவது இல்லை. விதவிதமான பலகாரங்களை சாப்பிட்டு மகிழ்வதில்லை. பட்டாசுகள் வெடிப்ப தில்லை. தீபாவளி என்பது இந்த கிராம மக்களுக்கு ஒரு வழக்க மான நாளாகவே கடந்து செல்கிறது. மானாவாரி பயிர் சாகுபடி நடக்கும் இந்த மலைக்கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு வாழ்வாதார தொழிலாக உள்ளது. இதில் கிடைக்கும் மிக குறைந்த வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்துவதாலும், அருகே உள்ள நகர பகுதிகளை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் போக்குவரத்து வசதி இல்லாததாலும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமே இதுவரை எங்களிடம் வந்ததில்லை என்று இந்த கிராம மக்கள் கூறுகிறார்கள்.