மரண பயம் மனிதர்களை அச்சுறுத்தும் முதல் ஆபத்தாகும்.
பிறப்பும் இறப்பும் நேற்றுவரை நம் கையில் இல்லை என்று மனிதர்கள் கருதிய காலம்.
ஆனால், இன்று பிறப்பு மனிதர்கள் – குறிப்பாக மருத்துவர்களிடம், மருத்துவ விஞ்ஞானத்திடம் ஒரு புதிய திருப்பத்தை அடைந்து விட்டது.
பிறப்பினை கட்டுப்படுத்த – மீள் உருவாக்க – தடுக்க – பல புதுப்புது மருத்துவ வழிமுறைகள், கருத்தரிப்புக்கு உதவிடும் மருத்துவமனைகள், கருத்தடை சாதனங்கள், கர்ப்பத்தடை – தள்ளிப் போதல் இப்படிப் பலவும் மனிதர்கள் செயலாகவே உள்ளன!
அதுபோலவே, மரணத்தையும்கூட தள்ளிப் போடவும், அதன் நுழைவு வாயிலில் செல்லுமுன் மருத்துவத்தால் தடுக்கவும், மூளைச்சாவு (Brain Death) அடைந்த விபத்துக்குள்ளானவர்களின் முக்கிய உடல் உறுப்புகளைத் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடையாக வழங்கி அவர்களுக்கு புதுவாழ்வும், மறைந்தவர்களுக்கும் புதிய தொடர் வாழ்வும் கிடைத்திடச் செய்யும் மருத்துவ விஞ்ஞானப் புத்தாக்கம் அண்மைக் காலத்தில் நாளும் வளர்ந்த வண்ண மிருந்தாலும், மரணத்தை முன்கூட்டியே (பிறப்பைப் போல) அறிவதும், ஏற்பதுமான அளவுக்கு மருத்துவ அறிவியல் – அந்த மாற்றத்தின் வேகத்தை, விவேகத்தை அடையவில்லை, இன்று!
நாளை இதுகூட சாத்தியமாகலாம்.
உடல் உறுப்புகளை இணைத்து, எப்படி பல உதிரி பாகங்களை இணைத்து ஓர் இன்ஜினைப் பூட்டி அதை ஓட வைப்பது இன்று சர்வ சாதாரண – அதிசயம் அல்லாத – நிகழ்வோ அதுபோல மனிதர்களும் ‘உற்பத்தி’யாகக் கூடும் என்பதற்கு எதிர் காலத்தில் வாய்ப்புகள் ஏராளம்.
‘இனிவரும் உலகம்’ என்ற சிறு நூலில் ஒரு விஞ்ஞான உலகு உருவாகி, சோதனைக் குழாய் குழந்தை, மின்சார மோட்டார், தொலைபேசிகள் பல வகைகள் உருவாக்கம்பற்றி தந்தை பெரியார் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஒப்பற்ற சுயசிந்தனை மூலம் எழுதி, அதுபோல புதிய விஞ்ஞானிகளை இயக்கவும் காரணமாக அமைந்தது. (விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களே அதற்கு ஓர் எடுத்துக்காட்டு).
அப்படிப்பட்ட நிலை – உயிராக்கம் புத்தாக்கமாகும் போது ஏற்படும் புதிய நிலைப்பாடு காரணமான பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு என்பதற்கு வருங்கால பதில்களுக்கான மனித அறிவின் பரந்து விரிந்த பரப்பில் இன்னமும் சிந்தித்து விடை காண வேண்டிய பகுதிகள் ஏராளம் உள்ளன என்கிறார்கள் மனித மூளை ஆராய்ச்சியாளர்கள்.
இதுநிற்க. செத்துப் போனவர்பற்றி மற்றொரு கோணத்திலும் பல நூற்றாண்டுகளாய் நமது இலக்கியங் களிலும், அறிவார்ந்த கருத்தோட்டங்களிலும் அன்றைக்கு மாறுபட்ட சிந்தனைகளும் உருவாகியும் உள்ளன!
அதில் ஒன்று, ‘செத்தார் எழுதல்’ என்பது;
இதன் உண்மைப் பொருள் என்ன என்பது, சுவையான அறிவுக்கான விவாதமாகிறது!
மதவாதிகளுக்கும், சாமியார் என்ற பக்தி வியாபாரிகளுக்கும் இது ஓர் ‘அற்புதங்களைச் செய்யும்’’ பக்தி வணிகத்தில் பொருள் பறிப்பதற்கான விபரீத நிலையில் ஏமாற்றுவதற்கான ஒரு வித்தையாகும்.
அது ஒருபுறம் இருந்தாலும், பல சிந்தனையாளர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்களே, அதன் உண்மைப் பொருள் என்ன தெரியுமா – என்று விளக்கும் ஒரு கட்டுரையை ‘வடலூரார் வாய்மொழி’ என்ற நூலில் சாமி. சிதம்பரனார் என்ற பகுத்தறிவுப் பெரும் புலவர் – (இவர்தான் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை ‘தமிழர் தலைவர்’ என்ற தலைப்பில் 1938இல் எழுதிய மகத்தான சுயமரியாதைக்காரர்) எழுதியுள்ளார்.
(41 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இதன் முதல் பதிப்பு 1959இல் வெளிவந்தது).
அதில் உள்ள ஒரு கட்டுரை சிந்தனைக்கு மிகவும் வேலை கொடுப்பதாகும்.
அதன் தலைப்பு ‘செத்தார் எழுதல்’
நம் அறிவை விரிவு செய்ய இது ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது.
முதல் பத்தி:
‘வள்ளலார் தனது பாடல்களில்’’ துஞ்சிய மாந்தரை எழுப்புக’’ ‘செத்தார் எழுந்தனர்’ என்றெல்லாம் பாடியுள்ளார்.
…..‘‘அவர் கூறிய ‘செத்தார் எழுந்தனர்’ என்பதன் கருத்து வேறு’’
மேலும் தொடருகிறது அக்கட்டுரை.
(நாளையும்)