பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும்!

Viduthalai
5 Min Read

* நாட்டில் சரி பகுதியாக உள்ள பெண்கள் பெற்ற உரிமை கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு!
* சமூக பாலியல் நீதி உலவும் பெரியார் மண்ணான சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள்!
* மற்ற மாநில நீதிமன்றங்களில் பெண்கள் பெற்ற இடங்கள் குறைவுதான்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

நாட்டில் சரி பகுதியாக உள்ள பெண்கள் பெற்ற உரிமை கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு! அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ளவர்கள் மகளிர்.
மானுடத்தினை வாழ வைப்பதில் அவர்களது பங்கும், பணியும் அளப்பரியது.
ஆனால், பொதுவாக மதங்களில் (பவுத்தம் தவிர) மற்ற மதங்கள் அவர்களுக்கு சம உரிமை, சம பங்கு அளிப்பதில்லை.

வருணாசிரம முறைப்படி பெண்கள்,
‘நமோ சூத்திரர்கள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்!

நம் நாட்டின் பெரும்பான்மை என்று மார்தட்டும் ஹிந்து மதம் என்ற வேத– ஆரிய மதத்தில் பெண்களுக்குப் பிறப்புரிமை, கல்வி உரிமை, சொத்துரிமை, வாக்குரிமை முதலிய பலவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பறிக்கப்பட்டதோடு, தங்கள்வீட்டு (‘‘உயர்ஜாதி‘‘) பெண்களாக இருந்தாலும்கூட, அவர்களும் வர்ண தர்மப் பிரிவின்படி, படிக்கட்டு ஜாதி – வருணாசிரம முறைப்படி அவர்களை, ‘நமோ சூத்திரர்கள்’ என்றே அழைத்து, அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது – வேத, இதிகாச, மனுதர்ம, கீதை முதலிய ஹிந்து மத ஆவணங்களில்!
தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு இந்த ஆண்டு நூற்றாண்டு ஆகும். அதற்கு முன்னே, கால வரிசையில், ஜாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமைக் குரலை மராத்திய மண்ணிலிருந்து கொடுத்த ஜோதிபாபூலே, கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ், அதன் பிறகு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள், பெண் கல்வி, பெண்ணுரிமை – இவற்றிற்குத் தனியே இயக்கம் கண்டார்கள் – மக்களிடையே எழுச்சியை உண்டாக்கினார்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களை பதவியை விட்டு
வெளியேற செய்த வேதனை!

ஒன்றிய சட்ட அமைச்சராகவும், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்த டாக்டர் அண்ணல் அம்பேத்கர், பெண்ணுரிமையை ஹிந்து சட்டத் திருத்தம்மூலம் கொண்டுவர படாதபாடு பட்டும், அதற்கு அங்கே இடம்பெற்றிருந்த அந்நாளைய காங்கிரஸ் ஸநாதனிகள், குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் (இவர் ‘காயஸ்தா‘ என்ற பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதிக்காரர்) முட்டுக்கட்டைப் போட்டதினால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வெறுத்துப் போய், தனது சட்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து வெளியேறியதுடன், விலகிடும் ஓர் அமைச்சர், தான் ஏன் விலகுகிறேன் என்ற விளக்கத்தை நாடாளுமன்றத்தில் சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும், அதை அனுமதிக்காமலேயே அவரைப் பதவியிலிருந்து வெளியேறச் செய்த வேதனை – வைதீக புரியின் வல்லாண்மைபற்றி பல கட்டுரைகள் எழுதும் அளவுக்கு ஆவணங்களும், ஆதாரங்களும் உண்டு.

இந்திய அரசியல் நிர்ணய சபையிலேயே 389 பேர் இடம்பெற்று, அரசமைப்புச் சட்டம் இயற்றும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவையில், இந்தியா முழுவதிலிருந்து இடம்பெற்றிருந்த மகளிர் வெறும் ஏழு பேர்தான்.

அதில் கேரளத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட (பட்டிய லின) பெண்மணி ஒரே ஒருவர்தான்; மற்ற அறுவரும் உயர்ஜாதிப் பெண்களே!

பெண்களின் உரிமை அன்றிலிருந்து இன்றுவரை

பறிக்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு!

இப்படி பெண்களின் உரிமை அன்றிலிருந்து இன்றுவரை பறிக்கப்பட்ட நிகழ்வுகள் – மறைமுகமாகவும், நேரடியாகவும் பல உண்டு.
நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவிகிதம் இடம்பெற்ற மசோதா, நாடாளுமன்றத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்குமேல் ஊறுகாய் ஜாடியில்தானே ஊறியது. இடையில் 4, 5 பொதுத் தேர்தல்களிலும் அப்படித்தான்!
பொதுத் தேர்தலுக்கு (2024) முன்பு, திடீரென்று பா.ஜ.க. அரசு, இதனை நடைமுறைப்படுத்த விசேஷ அக்கறை காட்டுவதுபோல நாடாளுமன்றத்தைக் கூட்டி, நிறைவேற்றிய மசோதாவில், எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடாத நிலையில், இன்னும் 5 ஆண்டுகளுக்குள் வருவது அந்த அறிவிப்பின்படி

சாத்தியமில்லையே!

இன்னமும் 10, 12 சதவிகித பிரதிநிதித்துவம்தான் உள்ளது!

யாரும் எளிதில் பெண்களுக்குப்
பிரதிநிதித்துவம் தருவதில்லை!

எல்லா கட்சிகளும் பெண்களின் வாக்குகளைக் கேட்கிறது; அதற்குக் கையேந்தினாலும், அந்தப் பெண்களை வஞ்சிக்க செய்வதில், ஆணாதிக்க சமூகம் நிறைந்த இந்த நாட்டில், யாரும் எளிதில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தருவதில்லை.

மற்றொரு தகவல் இதோ:

நாடு முழுவதும் உள்ள உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாக நியமனம் பெற்று, ‘‘நீதி அரசிகளாக‘‘ உள்ளவர்களின் விகிதாச்சாரம் எவ்வளவு தெரியுமா?

உச்சநீதிமன்றத்தில் 2024 ஜனவரி கணக்குப்படி, 9.3 விழுக்காடு; உயர்நீதிமன்றங்களில் 13.4 விழுக்காடு.

சென்னை உயர்நீதிமன்றத்தில்தான்
அதிக பெண் நீதிபதிகள்!

வடக்கே உள்ள மாநிலங்களில் உ.பி. பீகார், சட்டீஸ்கர், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா போன்றவற்றில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை குறைவு அல்லது இல்லவே இல்லை என்ற நிலைதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் (காரணம், இது சமூக பாலியல் நீதி உலவும் பெரியார் மண் – திராவிட பூமி – திராவிட இயக்கப் போராட்டங்களினால் ஏற்பட்ட விளைச்சல்).

மற்ற மாநிலங்களில் மனுநீதி ஆளுகிறது. திராவி டத்திலோ, மனித நீதி, மனித சமத்துவம்; மனித சுயமரியாதை இயக்கம் பல களங்களை அமைத்துப் போராடி

வென்று வருவதன் வெற்றி உலாவே இதற்குக் காரணம்!
தலைமை நீதிபதியாக இருந்தவரின் பாராட்டு!

பீகாரிலிருந்து வந்து தலைமை நீதிபதியாக இருந்து சில ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, விடைபெற்றுச் சென்றபோது, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்கள் 12 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பது சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் என்று பாராட்டிப் பேசியதை மறக்க முடியாது.

பெண்கள் பெற்றது கையளவுகூட இல்லை – பெறாதது மலையளவு!
அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட, சம உரிமை, சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்பதைத்தான் மேலே காட்டிய புள்ளி விவரமாக நமக்கும், நாட்டுக்கும் – ஆட்சியாளர்களுக்கும் வெகுவாக உணர்த்துகிறது.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
31.10.2024 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *