கண்ணூர், அக். 30- (கேரளா): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அஷ்ரஃப் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎம் நிர்வாகியான அஷ்ரஃப் மீது கடந்த 2011ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மீன் வியாபாரத்தில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அவர் தாக்கப்பட்டார்.
பலத்த காயமடைந்த அவர் மருத்தும வனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மே 21ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூத்துபரம்பா சர்க்கிள் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.
நிகழ்வை நேரில் பார்த்த 26 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து பிரணு பாபு, நிதிஷ், ஷிஜில், உஜேஷ், சிறீஜித், பினீஷ், மரோலி ஷிஜின், சுஜித் ஆகிய 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்த வழக்கு தலசேரி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி விமல் வழக்கை விசாரித்து வந்தார். விசாரணையின் முடிவில் நேற்று (28.10.2024) தீர்ப்பளித்த நீதிபதி விமல், பிரணு பாபு, நிதிஷ், ஷிஜில், உஜேஷ் ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
மேலும், அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறீஜித், பினீஷ் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மரோலி ஷிஜின், சுஜித் ஆகிய இருவர் ஏற்கெனவே இறந்துவிட்டனர்