திராவிட மாடலான தி.மு.க. ஆட்சி மக்கள் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது திட்டங்களை அறிவிப்பதோடு நில்லாமல் செயல்படுத்தியும் வருகிறது.
மகளிர்க்கு இலவசப் பேருந்துப் பயணம் என்பது – மகளிர் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும்.
தன்னம்பிக்கையை ஊட்டுகிறது – பொருளாதார வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்கிறது – தன் சொந்தக் காலில் நிற்கும்போது – அவர்களை அறியாமலேயே தன்னம்பிக்கையையும் தலை நிமிர்ந்த நடையையும் உளவியல் ரீதியில் உண்டாக்குகிறது.
புரட்சிப் பெண் திட்டத்தின்மூலம் மகளிர் கல்வித் திசையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்துகிறது – மாணவர்களையும் கை விட்டு விடவில்லை.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!’ என்ற மனுதர்மம் கொடி கட்டி ஆண்ட நாட்டில் சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சியில் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி நீரோடையை திறந்து விட்டிருக்கிறது!
பொறுக்குமா பூசுரர்கள் கூட்டத்துக்கு? குறுக்கு வழியில் உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கு – பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று கூறி (அரசியல் சட்டத்துக்கு எதிரானது) நாள் ஒன்றுக்கு ரூ.2191 வருவாய்ப் பெறுவோர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. (EWS).
என்ன குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பார்ப்பனர்கள் நுழைந்தாலும், திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனுக்கு முன்னர் தங்களின் பரம்பரை ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியவில்லை.
நாள்தோறும் நாள்தோறும் மக்களின் ஆதரவு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைப் பொறுக்க மாட்டாமல் திசை திருப்பும் வண்ணம் – இலவசங்களை வாரி இறைப்பதுதான் திராவிட மாடல் அரசா? மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி வி்ட்டனர் என்று தங்களுக்கே உரித்தான ஆதிக்க ஜாதி உணர்வோடு விமர்சிக்கின்றனர்.
ஒவ்வொரு வார ‘துக்ளக்’ இதழிலும் ஏளனம் செய்யப்படுகிறது – இந்த வார இதழ் உட்பட!
ஒன்றை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைக்கப் பார்க்கிறார்கள் ‘திராவிட மாடல்’ அரசைப் பின்பற்றி பிஜேபி ஆளும் மாநிலங்களிலும், அவர்கள் கூறும் அந்த ‘இலவசங்களை’ அளிக்க ஆரம்பித்து விட்டனர்.
குஜராத் மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தலின்போது இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை பா.ஜ.க வழங்கியது.
* முதிய பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம்.
* மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார இரு சக்கர வாகனம்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய கர்ப்பிணிப் பெண் களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்து திட்டம்.
* ஒவ்வோர் ஆண்டும் இலவசமாக இரண்டு சமையல் எரிவாயு உருளைகள்.
எனப் பல வாக்குறுதிகளை பா.ஜ.க அறிவித்தது.
அடுத்ததாக, கருநாடகா சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான ‘இலவச’ வாக்குறுதிகளை பா.ஜ.க அள்ளி வீசியது.
* கருநாடகாவில் ஏழைகளுக்கு தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
* ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும்.
*உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி நாள்களில் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு உருளை வழங்கப் படும். என்பது போன்ற பல வாக்குறுதிகளை பா.ஜ.க வழங்கியது.
சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், சத்தீஸ்கரில் பா.ஜ.க-வின் ஆட்சி அமைந்தால், திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும்.
ஜார்கண்டதேர்தலுக்கான இலவச அறிவிப்பு
* 18 வயதுக்கு மேலான மகளிருக்கு மாதம் ரூ. 2100 வழங்கும் திட்டம்.
* 1 சமையல் எரிவாயு உருளை ரூ.500 க்கு வழங்கப்படும்.
* விழாக் காலங்களில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சமையல் எரிவாயு உருளை.
* 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.
* போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர் களுக்கு ரூ.2,000 உதவித் தொகை.
* வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம்.
அரியானா தேர்தல் இலவச வாக்குறுதி
* ‘லட்டோ லக்ஷ்மி யோஜ்னா’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,100.
* சமையல் எரிவாயு உருளை. விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.
* 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் படும்.
* படித்த 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
* ‘சிராயு ஆஸ்மான் யோஜ்னா’ திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு.
* 25 வகையான விவசாயப் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.
* மருத்துவம், பொறியியல் படிக்கும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.
* கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும்.
* 5 லட்சம் வீடற்ற மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.
இப்படியாகப் பட்டியல் நீள்கிறது. இந்த இலவசங்களுக்கு வேறு பெயர் சூட்டப் போகிறார்களா?
ஆம்! திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழி காட்டுகிறது. ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு தி.மு.க. முக்கிய காரணியாக இருந்து வந்திருக்கிறது.
இந்திய ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. அமரா விட்டாலும் அதன் கொள்கைகளும், திட்டங்களுமே இந்தியாவை ஆளப் போகிறது என்பது மட்டும் கல்லின் மேல் எழுத்தாகும்.